நாட்டில் உள்ள மிகப்பெரிய துறைகளில் அஞ்சல் துறையும் ஒன்றாக உள்ளது. மொபைல் பயன்பாடு வந்த பிறகு கடிதம் எழுதும் கலை தற்போது மறைந்து வருகிறது. அதே நேரத்தில், அஞ்சலக சிறுசேமிப்பு திட்டங்களுக்கு மிகுந்த வரவேற்பு உள்ளது. இந்திய அஞ்சல் துறை நூறு ஆண்டுகளுக்கு மேலாக பண பரிமாற்றத்தை கையாண்டு வருகிறது. குறிப்பாக, ஊரக பகுதிகளில் அஞ்சல் துறையின் இந்த சேவை சிறப்பாகவே உள்ளது. மொத்தம் உள்ள 1.55 லட்சம் அஞ்சல் துறை கிளைகளில் 1.4 லட்சம் ஊரக பகுதிகளில்தான் உள்ளன.
எனவே, இந்த கட்டமைப்பை வைத்து இந்தியா போஸ்ட் வங்கி தொடங்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக அஞ்சல் துறை சார்பில் ரிசர்வ் வங்கிக்கு விண்ணப்பம் அனுப்பப்பட்டது. இதை மத்திய அரசின் பரிசீலனைக்கே ரிசர்வ் வங்கி விட்டு விட்டது. இதன் தொடர் நிகழ்வாக, இந்திய அஞ்சல் துறை சார்பில் நாடு முழுவதும் அஞ்சலகங்களில் வங்கிச் சேவை அளிக்கும் (பேமன்ட் பேங்க்) திட்டம், 2018 ஆண்டு ஆண்டு செப்டம்பர் முதல் தேதி புதுதில்லியில் தொடங்கி உள்ளது. இத்திட்டத்தின் மூலம், நாடு முழுவதும் 650 பேமன்ட் வங்கிக் கிளைகள் தொடங்கப்பட்ட உள்ளன. தமிழகத்தில் தபால்துறை பணப் பரிமாற்றம் வங்கி (பேமன்ட் பேங்க்) கிளைகளின் தொடக்க விழா சென்னையில், 2018 ஆண்டு ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் தேதி நடைபெற்றது.
இந்தியாவில் 1,55,000 தபால் நிலையங்கள் உள்ளன. அந்த வகையில், அஞ்சலக வங்கி மூலம் பணப் பரிமாற்றம் வங்கிச் சேவையை அளிப்பதிலும் இந்தியா முதலிடத்தை அடைய முடியும். கடந்த காலங்களில் மக்களின் அன்றாட வாழ்க்கையில் நெருங்கிய தொடர்பு கொண்ட அரசுத்துறை தபால் துறைதான்.
Also read: அஞ்சலக ஆயுள் காப்பீடு: குறைந்த பிரீமியம், அதிக போனஸ்!
பிரதமரின் ஜன்தன் யோஜனா திட்டம் செயல்படுத்தப்பட்ட பிறகு இந்த புதிய திட்டத்தை செயல்படுத்துவது வரவேற்கத்தக்கது. கிராமப்புற மக்களுக்கு முழு அளவில் வங்கிச் சேவைகள் சென்றடைய வேண்டும் என்ற நோக்கில் 2012-ஆம் ஆண்டு மக்களவையில் நிறைவேற்றப்பட்ட வங்கிச் சட்டத் திருத்த மசோதா மூலம் புதிய தனியார் வங்கிகளைத் தொடங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டது.
அதன்படி, இரண்டு வகையான வங்கிகளுக்கு உரிமம் வழங்குவது என்று முடிவு மேற்கொள்ளப்பட்டது. முதலாவது, எல்லாவகை வங்கிச் சேவைகளையும் வழங்கும் வங்கி லைசென்ஸ் (Universal Bank Licence) இரண்டாவது, குறிப்பிட்ட சேவைகள் மட்டும் வழங்கும் சிறிய வங்கிகளுக்கான அனுமதி (Differentiated Bank Licence) இதன் அடிப்படையில் பேமன்ட்ஸ் வங்கிகள் மற்றும் சிறிய வங்கிகள் (Small Banks) என்கிற இரு வெவ்வேறு விதமான வங்கிகள் அண்மைக்காலமாக செயல்பட்டு வருகின்றன.
சான்றாக, ஒரு பேமன்ட் பேங்க் தனது வாடிக்கையாளர்களுக்கு கடன் வழங்க முடியாது. ஆனால், அவர்களிடமிருந்து வைப்பு (டெபாசிட்) தொகையைப் பெற்றுக் கொள்ளலாம். சேமிப்புக் கணக்கில் அல்லது வைப்புக் கணக்கில் அதிகபட்சமாக ஒரு லட்சம் ரூபாய் வரை ஏற்றுக் கொள்ளப்படும். கிராமங்களில், வங்கிக் கிளை தொடங்குவதற்கு பதில், பேங்கில் கரெஸ்பாண்ட்டென்ட் (Banking Correspondent) என்ற வங்கிப் பிரதிநிதி ஒரு சிறிய கிளை செய்யும் பணியான பணம் கொடுத்தல் அல்லது பணம் டெபாசிட் செய்தல் போன்ற சேவைகளை வங்கியின் சார்பில் செய்கிறார். இந்த பணியை, பேமன்ட் பேங்க் வேறு வணிக வங்கிகளின் சார்பில் செய்து வருவாய் ஈட்டலாம்.
பேமன்ட் பேங்க் திறப்பதற்கு 11 அமைப்புகளுக்கு ரிசர்வ் வங்கி உரிமம் (லைசென்ஸ்) வழங்கியது. இவற்றில் ஏர்டெல் பேமன்ட் பேங்க், இந்திய தபால் பேமன்ட் பேங்க், பேடிஎம் பேமன்ட் பேங்க் மற்றும் பினோ பேமன்ட் பேங்க் ஆகிய நான்கு அமைப்புகள் மட்டுமே பேமன்ட் வங்கிகளை நிறுவி உள்ளன. பேமன்ட் பேங்கின் மூலதனம் ரூ.100 கோடி மட்டுமே. சாதாரணமாக, ஒரு தனியார் வங்கி அமைக்க குறைந்த பட்சம் ரூ.500 கோடி மூலதனம் தேவை. அந்த விதிமுறை பேமன்ட் பேங்க்-கும் சிறிய வங்கிக்கும் குறைக்கப்பட்டு உள்ளது.
அஞ்சல் அலுவலக வங்கி போன்ற பேமன்ட் வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு கடன் கொடுக்க முடியாது. இந்நிலையில் அந்த வங்கிகள் திரட்டக் கூடிய டெபாசிட் தொகையை என்ன செய்வது? அஞ்சல் அலுவலக வங்கிகளுக்கு வருவாய் கிடைக்க என்ன வழி? எந்த பேமன்ட் வங்கியானாலும் அவை திரட்டும் டெபாசிட் தொகையில் 75 சதவீதத்தை அரசு பாண்டுகளிலும், அரசு பத்திரங்களிலும் முதலீடு செய்ய வேண்டும் என்பது ரிசர்வ் வங்கியின் விதிமுறை. அந்த வகையில் பாதுகாப்பு, மிதமான வருவாய் ஆகிய இரண்டுக்கும் உத்தரவாதம் உள்ளது. மீதமுள்ள 25 சதவீத டெபாசிட் தொகையை வணிக வங்கிகளில் வைப்பு நிதி ஆகப் போடலாம். எதிர்பாராத அவசர நிர்வாகச் செலவுகளுக்கு அதில் இருந்து பணம் எடுத்துக் கொள்ளலாம்.
Also read: டிஜிட்டலின் மூலதனம்
பேமன்ட் வங்கிகளுக்கு வணிக ரீதியாக இடர்ப்பாடு எதுவும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக தான் அஞ்சலக வங்கிகள் உள்ளிட்ட பேமன்ட் வங்கிகள் கடன் கொடுப்பதற்கு அனுமதிப்படவில்லை. இதனால், லாபம் மிதமாக இருந்தாலும் ஆபத்து நேர வழியில்லை. அதே நேரம் அஞ்சல் அலுவலகங்களில் இதுவரை சேர்ந்துள்ள சேமிப்புக் கணக்குகளை இனிமேல் பேமன்ட் வங்கி கையாளும் என்பதால், அஞ்சலக பேமன்ட் வங்கியில் லாபம் ஏற்படக் கூடும். தற்போது அஞ்சலக சேமிப்புக் கணக்குகளில் ரூ.85,000 கோடி வரை பணம் சேர்ந்துள்ளது.
அஞ்சல் அலுவலகத்தின் 1,55,000 கிளைகள் புதிய அஞ்சல் பேமன்ட் பேங்குடன் இணைக்கப்பட உள்ளன. டிஜிட்டல் வசதியும் செய்து கொடுக்கப்பட உள்ளதால் அஞ்சலக வங்கியின் சேவை கிராமங்களுக்கு கண்டிப்பாக சேரும்.
நாட்டின் பொருளாதார வளர்ச்சி, சமூகத்தின் அனைத்து தரப்பு மக்களுக்கும் நன்மை பயக்கும் வகையில் இருத்தல் வேண்டும் என்ற இலக்கை அடைவதற்கு அஞ்சலக பேமென்ட் வங்கி ஒரு வாய்ப்பாக அமைகின்றது.
– த. செந்தமிழ்ச் செல்வன்