”என்னால் முடிந்ததை முடியும் என்று நினைக்க வேண்டும். முடியாததை முடியாது என்று நினைக்க வேண்டும். இவ்வாறு நினைப்பது முதல்படியாகும். அடுத்து இதை உணர வேண்டும். உணர்ந்த பிறகு அனுபவப்பட வேண்டும்
இப்படியாக என்னை நான் உணர்ந்து கொள்ளும்போது, அறிந்து கொள்ளும்போது தெளிவாக முடிவெடுக்க முடிகிறது. எனது முடிவுகள் தெளிவாக இருக்கும்பொழுது செயல்கள் தீர்க்கமாக இருக்கும். செயல்களின் விளைவுகள், கிடைக்கக்கூடிய பயன்கள் எதிர்பார்த்தபடி அமையும்.
முடியும் என்று நம்புவதை எப்படி தன்னம்பிக்கை என்கிறோமோ, அதேபோன்று என்னால் செய்ய முடியாததை, நான் சரியாக உணர்ந்திருந்தால், தெரிந்திருந்தால் அதுவும் தன்னம்பிக்கைதான்.
முடிந்ததை முடியும் என்றும், முடியாததை முடியாது என்றும் தெள்ளத் தெளிவாக உணர்ந்திருப்பதற்குப் பெயர்தான் தன்னம்பிக்கை. தன்னம்பிக்கை வளரவளர துணிச்சல் அதிகமாகிறது. இலக்கும் செயலும் ஒத்துப்போகும் எனில் அதை வெற்றி என்று கூறுகிறோம்.
தன்னம்பிக்கை, துணிச்சல், தைரியம் மூன்றும் ஒன்று சேரும்பொழுது எதையும் சாதிக்கலாம் என்ற நம்பிக்கை உருவாகிறது. இதற்கு மாறாக, என்னால் முடியாததை முடியும் என நினைத்து செயல்படும்பொழுது எடுத்த செயலை முடிக்க முடியாமற் போய் விடுகிறது. இலக்கை அடையாமல் போகும் பொழுது தோல்வி அடைந்ததாகச் சொல்லுகிறோம். இந்தத் தோல்வியால் தைரியம் குறைந்து, தன்னம்பிக்கை வீழ்ந்து விடுகிறது. துணிச்சல் போய்விடுகிறது. துவண்டு விடுகிறோம்.
வாழ்க்கையில் வேறுபாடுகள், விதிவிலக்குகள் எப்பொழுதும் உண்டு. இந்த வேறுபாடுகள், விதி விலக்குகள் எதார்த்தமானதாக, இயல்பானதாக, பெரும்பான்மையானதாக மாற முடியாது. இவை எல்லாம் எதார்த்தத்தில் சராசரி மற்றும் இயல்பாக நடக்கக் கூடியவைதாம். ஆனால் இவற்றைக் கூர்ந்து கவனித்தால், நிதானம் அடிப்படையாகப் பற்றி பரவி இருக்கும்.
என்றோ ஒருநாள், எப்பொழுதோ ஒரு தடவை, யாருக்கோ நடப்பதை வைத்துக் கொண்டு, என்னால் ஏன் முடியாது. ஏன் சாத்தியமில்லை என்று கருதி ஒருமுறை முயன்றால் அதற்குப் பெயர் முயற்சி. இதன் முடிவுகள் எதிர்பாராததாக, வேறுபாடாக இருப்பினும் கூட ‘பார்த்துவிடலாம்’ என அடுத்தடுத்து முயற்சித்தால்… அதற்குப் பெயர்தான் அசட்டுத் துணிச்சல்.
உள்ளதை உள்ளவாறே தன்னால் ‘முடியாது’ என்றாலும்- அவ்வாறே உணர்வது கோழைத்தனம் அல்ல. குழப்பம் அல்ல, பின்னடைவு அல்ல. அசட்டு என்றாலே அடிப்படை இல்லாதது, ஒழுங்கு இல்லாதது, அறியாமையுடனானது, அர்த்தமற்றது என்று பொருள்படும். ஒருவருடைய துணிச்சல் அசட்டுத்தனமாக இருந்தாலும் இதே பொருள்தான்.
இந்த அசட்டுத் துணிச்சல் என்றாவது ஒருநாள் பயனளிக்கும். அதுவும் கூட அசட்டுத் தனமாகவே இருக்கும். எனவே அசட்டுத் துணிச்சலை நம்பி அடியெடுத்து வைப்பது வெற்றிக்கு வழிவகுக்காது. யாராக இருந்தாலும் தொடர்ந்து தோல்வியைத் தழுவினால் நம்பிக்கை மற்றும் உறுதி, தைரியம் போய்விடும். எனவே, தன்னம்பிக்கையோடு இருப்பது மிகச் சிறந்தது. துணிச்சலோடு இருப்பது வரவேற்கத்தக்கது. ஆனால் அசட்டுத் துணிச்சல் ஆபத்தானது.
தன்னால் இதைச் செய்ய முடியாது என்று தெரிந்து கொள்வது தோல்வி அல்ல. தனக்கு இது இயலாது என்று அறிந்து கொள்வது தன்னம்பிக்கைக் குறைவு அல்ல, அதைத் தெளிவு என்கிறோம்.
தன்னால் இதைச் செய்யமுடியாது என்று தெரிந்து கொள்வது தோல்வி அல்ல. தனக்கு இது இயலாது என்று அறிந்து கொள்வது தன்னம்பிக்கைக் குறைவு அல்ல, அதைத் தெளிவு என்கிறோம்.
இதனால் ஒரு முறைதான் தோற்கலாம். அந்தத் தோல்வியை சரியாக ஆராய்ந்து பார்த்து இதை ‘நம்மால் செய்ய முடியும்’ என்று தெரிந்து கொள்வதைத்தான் அறிவு என்கிறோம். இதைப் பெற வேண்டும். வாழ்க்கையில் மேலே போகிறோமோ இல்லையோ கீழே போகாமல் இருப்பதே மிக முக்கியமானதாகும்.
நாம் குறிப்பிட்ட இலக்கை அடைந்துவிட்டால் சும்மா இருக்கப் போவதில்லை. அடுத்த இலக்கை நோக்கி முன்னேறப் போகிறோம். இப்படியே இலக்கு என்பது அடுத்தடுத்ததாக போகிறது. இதற்குப் பெயர் தான் படிப்படியாக முன்னேறுதல்.
எப்பொழுதுமே இலக்கு என்பது இயலக்கூடியதாக இருக்க வேண்டும். வட்ட நிலாவை கைக்குள் அடக்க முனையும் கனவாக அது இருக்கக்கூடாது. அப்பொழுது தான் தன்னம்பிக்கை வளர வாய்ப்பு இருக்கும். அது தான் வெற்றிக்கு உறுதியான, தெளிவான, தீர்க்கமான வழியமைத்துக் கொடுக்கும்’ என்கிறார் டாக்டர் மா.திருநாவுக்கரசு.
இளம்பூரணன்.