Latest Posts

இந்த நம்பிக்கைகள் இல்லாமல் இருந்தால் தன்னம்பிக்கை தானே வரும்!

- Advertisement -
அறிவியல் மனப்பான்மை வளர வேண்டும்; மூட நம்பிக்கைகளில் இருந்து, கடவுள் நம்பிக்கையில் இருந்து சக மனிதர்கள் விடுபட வேண்டும் என்று நினைப்பதும் அதற்கான கருத்துகளை எடுத்து உரைப்பதும் எல்லோரும் திராவிடர் கழகத்தில் சேர்ந்து விடுவார்கள் என்பதற்காக அல்ல. இந்த கொள்கைகளால் நாம் அடையும் பயன்களை மற்றவர்களும் அடைய வேண்டுமே என்ற ஆசைதான். ‘எல்லோரும் இன்புற்றிருக்க..’ என்ற அடிப்படைதான்.
ஜோசியம், ஜாதகம் போன்றவற்றின் மீது நம்பிக்கை இல்லாவிட்டால் நல்ல நேரம், கெட்ட நேரம் என்று அஞ்சும் இனம் புரியாத அச்சம் நம்மை விட்டு அகன்றுவிடும். ராகுகாலம், எமகண்டம் என்று குறிப்பிட்ட நேரங்களை புறக்கணித்து அந்த நேரங்களை வீணாக்கும் அச்சமும் போய்விடும். பூனை குறுக்கே போனால் பயந்து நிற்பது, ஒற்றைப் பார்ப்பான் வந்தால் சகுனம் சரி இல்லை, விதவைகள் எதிரில் வந்து விட்டார்களே என்று நினைத்து பயணத்தை ஒத்தி வைப்பது போன்ற சகுனத்துக்கு பயப்படும் நிலைமையும் மாறி விடும்.
வாஸ்து நம்பிக்கை இல்லாவிட்டால் வீட்டை அறிவியல் சார்ந்து வசதியாக கட்டிக் கொள்ளும் இயல்பு வந்து விடும். வாஸ்து ஜோசியர் சொன்னார் என்று கட்டிய வீட்டை இடித்துக் கொண்டு இருக்க மாட்டார்கள். ஐயரை அழைத்து பூமி பூஜை என்று அவருக்கு தட்சணை என்று செலவு செய்ய வேண்டியது இல்லை. கிரகப்பிரவேசம் என்று மீண்டும் நமது சுயமரியாதையை இழந்து ஐயரை அழைத்து யாகம் வளர்த்து ஆயிரக் கணக்கில் தட்சணை செலவு செய்ய வேண்டியது இல்லை. திருஷ்டிப் பரிகாரம் என்று அசிங்கமான பொம்மையை கட்டி வைக்க வேண்டி இருக்காது. தொழில் முனைவோராக இருந்தால் இந்த திசை நோக்கி அமர்ந்தால்தான் அதிர்ஷ்டம் வரும் என்று மேஜையை கண்டபடி மாற்றிக் கொண்டிருக்கும் தேவை எழாது.
கடைக்காரர்கள் திருஷ்டிப் பூசனிக்காய் கட்டுவது, அசிங்கமான படத்தை தொங்க விடுவது,  சாலையில் தேங்காயை உடைத்து வீணாக்குவது, சூடம் கொளுத்துவது போன்றவை இருக்காது.
திருமணம் போன்ற விழாக்களை நம் வசதிக்கேற்ற நாளில், அனைவரின் வசதிக்கேற்ற நேரத்தில் நடத்திக் கொள்ளும் துணிவு வந்து விடும். விடியற்காலை 5.30 க்குத்தான் நல்ல நேரம் என்று தாங்களும் கஷ்டப்பட்டு, உறவினர் நண்பர்களையும் தொல்லைப்படுத்த வேண்டிய தேவை எழாது. நேரத்தை ஐயர்தான் குறித்துக் கொடுக்க வேண்டும் என்று அவர் வீட்டு வாசலில் போய் நிற்க வேண்டிய தேவையும் வராது. மணமக்கள் தேர்விலும் ஜாதகப் பொருத்தம் இல்லை என்று நல்ல பொருத்தமான துணையை நிராகரிக்க வேண்டி இருக்காது.
அனைத்துக்கும் கடவுள்தான் காரணம் என்று நம்பியும், கடவுள் என்ற ஒன்று இருந்தா இப்படி எல்லாம் நடக்குமா என்று நம்ப முடியாமலும் தவிக்க வேண்டியது இல்லை. கடவுள் நம்பிக்கை இல்லாமல் இருந்தால், வாழ்க்கையில் எதிர்ப்படும் இன்ப துன்பங்களை அதன் போக்கில்தான் எதிர்கொள்ள வேண்டும் என்ற புரிதல் வந்து விடும். பரிகாரங்கள் என்ற பெயரில் செய்யப்படும் வீண் செலவுகள் தவிர்க்கப்பட்டு விடும்.
மிகவும் முதன்மையாக மந்திரவாதிகள் மக்களை ஏமாற்றி பணம் பறிப்பதற்கு பயன்படுத்தும் சூனியம் வைப்பது, எடுப்பது போன்றவற்றை நம்பி ஏமாற மாட்டீர்கள். பேய்கள், பிசாசுகள், ஆவிகள் மீதான நம்பிக்கை அகன்று விடும். எந்த இருட்டும் உங்களை அச்சப்படுத்தாது.
எல்லாம் விதிப்படிதான் நடக்கும் என்ற நம்பிக்கை போய்விட்டால் முயற்சிகள் மீது முழு நம்பிக்கை வரும். முயற்சிகள்தான் வளர்ச்சிக்குத் துணையாக நிற்கும்.
அறிவியல் மனப்பான்மை வந்து விட்டால் அறிவு வளர்ச்சிக்கு உதவும் நூல்களை படிக்கத் தொடங்குவீர்கள். யூடியூபில் அறிஞர்களின், வல்லுநர்களின் பேச்சுகளை தேடிப்பிடித்து கேட்பீர்கள். சமத்துவ எண்ணம் ஓங்கும். பார்ப்பனர்கள் நம்மை விட மேல்ஜாதி என்று நினைப்பது மனதில் இருந்து நீங்கும். எல்லோரும் சமம் என்ற மனித நேயம் மனதில் பொங்கும். அடுத்தவர் வளர்ச்சி பொறாமை உணரச்சியைத் தராது. அதற்கு பதில் மகிழ்ச்சியைத் தரும்.
– இப்போது சொல்லுங்கள், தங்களைப் போன்றே பிறரும் இப்படி சுதந்திரமான மனநிலையுடன் செயல்பட வேண்டும் என்று நினைப்பதும், செயல்படுவதும் கூட மனித நேயம் சார்ந்ததுதானே!                                                         
- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

Subscribe to our latest news