- Advertisement -
கடவுளின் பெயரால் உறுதி ஏற்க மறுப்பது அல்லது நிராகரிப்பது, அதற்கு மாற்றாக, ‘உளமார’ உறுதி ஏற்பது என்பது எளிதாகக் கிடைத்த வாய்ப்பு அல்ல.
பிரிட்டன் நாடாளுமன்றத்தில் ஒரு தனி மனிதனின் மிகப்பெரிய ஜனநாயகப் போராட்டம், சிறைவாசம் ஆகியவற்றுக்குப் பிறகு கிடைத்த, மகத்தான உரிமை. அந்த ஒற்றை மனிதர், பிராட்லா.
நார்த்தாம்ப்டனிலிருந்து பிரிட்டன் நாடாளுமன்றத்திற்கு 1880ல் லிபரல் கட்சி சார்பில் தேர்ந்து எடுக்கப்பட்டார், இறை மறுப்பாளரான பிராட்லா. மதச்சார்பின்மை கொள்கையில் நம்பிக்கை கொண்டவர்.
அதற்கான அமைப்பையும் நடத்தியவர். நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவியேற்கும்போது, ‘உண்மையான நம்பிக்கை உள்ள கிறிஸ்தவனாக கடவுளின் பெயரால் உறுதி ஏற்கிறேன்” எனச் சொல்வதற்கு பிராட்லா மறுப்புத் தெரிவித்தார்.
”கடவுள் மீது உறுதி எடுக்கச் சொல்கிறீர்கள். இதில் ஆரம்பச் சிக்கல் என்னவென்றால் கடவுள் என்ற சொல்லை விளக்குவதுதான். சரியாக விளக்க முடியாத நிலையில், இந்த உறுதி மொழியில் உள்ள ஒவ்வொரு சொல்லின் அடிப்படையில், கடவுளை ஏற்கிறோமா, மறுக்கிறோமா என்பதும் சமமாக விளக்க முடியாததாகும்.
என்னைப் பொறுத்தவரை, கடவுள் என்பது எவ்வித பொருளும் இல்லாமல் தனித்து நிற்கும் ஒரு சொல். கடவுள் என்பது விளக்க முடியாததாக இருக்கும் வரையில், நான் கடவுளை மறுப்பதாகவும் கொள்ள முடியாது”, என்றார் பிராட்லா.
அவர், கடவுள் பெயரால் உறுதியேற்க மறுத்ததால், அவரை அதிகாரப்பூர்வ உறுப்பினராக நாடாளுமன்றத்தால் அங்கீகரிக்க முடியவில்லை. மசோதாக்கள் மீதான அவரது வாக்கு உரிமையும் நிராகரிக்கப்பட்டன. சட்டத்தை மீறியதாக கைது செய்யப்பட்டு சிறைவாசமும் அனுபவித்தார்.
ஆனாலும், தன் நிலையில் உறுதியாக இருந்த பிராட்லா, மாற்று வகையில் உறுதி மொழி ஏற்க வழி செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தினார்.
இதனை அடுத்து, 1880ல் ஒரு தேர்வு கமிட்டி அமைக்கப்பட்டது. பின்னர், இரண்டாவது தேர்வு கமிட்டியும் அமைக்கப்பட்டது. கடவுளை மறுத்து உறுதிமொழி ஏற்பதா என பெரும்பாலான உறுப்பினர்கள் பிராட்லாவுக்கு எதிரான கருத்துகளைத் தெரிவித்து வந்தனர்.
பிராட்லாவின் போராட்டம் தொடர்ந்தது. அரை மாமாங்க காலப் போராட்டத்திற்குப் பிறகு, 1886ல் கடவுளின் மீது ஆணையாக என்பதற்குப் பதிலாக, உளமார (மனசாட்சியின்படி) உறுதி கூறி பதவிப் பிரமாணம் எடுப்பதற்கு பிராட்லா அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு மட்டுமல்ல, உரிய சட்டத் திருத்தத்தின் மூலம் பிரிட்டன் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் கடவுள் பெயராலோ, உளமாரவோ உறுதியேற்க அனுமதி வழங்கப்பட்டது.
உறுதி குலையாத அறவழிப் போராட்டத்தின் வழியாகப் பெற்றதுதான், ‘உளமார’ உறுதி ஏற்கும் வாய்ப்பாகும். பிரிட்டன் நாடாளுமன்றத்தைப் பெருமளவில் தழுவி, சட்டம் இயற்றப்பட்ட இந்திய நாடாளுமன்றமும், மாநில சட்டமன்றங்களும் இதே நடைமுறையைக் கடைப்பிடிக்கின்றன.
அதில், தமிழ்நாடு இந்த வாய்ப்பைப் பயன்படுத்துவதில் மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியானதாகும்.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 1967ல் பதவியேற்ற அறிஞர் அண்ணா தலைமையிலான தி.மு.க. அரசில் அத்தனை பேரும் ‘உளமார’ (மனசாட்சியின்படி) பதவி ஏற்றனர்.
- Advertisement -