வயல்களை வைத்து இருப்பவர்கள் சந்திக்கும் சிக்கல்களுக்கு தொழில் நுட்பம் ஒவ்வொன்றாக தீர்வு கண்டு வருகிறது. ஏற்றம் போட்டு நாள் முழுவதும் தண்ணீர் இறைத்துக் கொண்டு இருந்த நிலையை மோட்டார் மாற்றியது. சுவிட்சைப் போட்டவுடன் கிணற்றில் இருந்து தண்ணீரை இறைத்துக் கொட்டியது. டிராக்டரும், பவர் டில்லரும் உழவில் பெரிய புரட்சியை ஏற்படுத்தின. அறுவடை எந்திரம் அடுத்த புரட்சியை செய்தது. இன்னும் நாற்று நடும் கருவிகள், விதைத் தெளிப்பு கருவிகள், களை எடுக்கும் கருவிகள், பூச்சி மருந்து தெளிக்கும் கருவிகள் என்று வேளாண்மை படிப்படியாக எளிமையாகிக் கொண்டே வருகிறது. குறைந்த ஆட்களைக் கொண்டு பணிகளை முடிக்கும் நிலையை இந்த கருவிகள் ஏற்படுத்தி வருகின்றன.
இந்த நிலை இன்றைக்கு படித்த இளைஞர்களையும், நல்ல சம்பளத்துடன் வேலை பார்த்துக் கொண்டு இருப்பவர்களையும் வேளாண்மை நோக்கித் திருப்பி வருகிறது. ஓரளவுக்கு வேளாண்மை பின்னணி இருப்பவர்கள், வேளாண்மையில் இறங்கும் போது அவர்களால் வெற்றிகரமாக செயல்பட முடிகிறது. அவ்வாறு சிறிதும் வேளாண்மை பற்றிய அனுபவம் இல்லாதவர்கள் சிலர் நில புரோக்கர்களின் பேச்சைக் கேட்டு பொருத்தம் இல்லாத நிலங்களில் முதலீடு செய்து விட்டு தொல்லைக்கு ஆளானதையும் பார்க்க முடிகிறது. இவர்களும் கூட விடாமுயற்சியுடன் வேளாண்மை தொடர்பான அனுபவம் உள்ளவர்களை துணைக்கு வைத்துக் கொண்டு வெற்றி பெற்று விட முடியும். அதற்கு பொறுமை மிகத்தேவை.
அந்த அளவுக்கு பொறுமை இல்லாதவர்கள் வாங்கிய நிலத்தை அப்படியே போட்டு விட்டு மீண்டும் வேலைக்குப் போவதையும் காண முடிகிறது. இவர்கள் இன்னும் ஒரு சிக்கலுக்கும் ஆளாகிறார்கள். வேலை பார்த்த போது மாதம்தோறும் சுளையாக நல்ல சம்பளம் வாங்கிக் கொண்டு இருந்த நிலையில் அந்த வருமானத்தை வேளாண்மையில் உடனே எடுக்க முடியாத நிலை வரும்போது மனதளவில் சோர்ந்து போகிறார்கள். இன்னும் சிலர் இயற்கை வேளாண்மை என்று மாட்டிக் கொள்கிறார்கள்.
விடா முயற்சி உள்ளவர்கள் மட்டும் தொடர்ந்து ஈடுபட்டு வெற்றி பெறுகிறார்கள். இவர்கள் தங்களுக்குத் தேவையான பயிற்சிகளைப் பெற்றுக் கொள்ள முனைப்பு காட்டுகிறார்கள். தமிழ் நாட்டில் உள்ள வேளாண்மைப் பல்கலைக் கழகங்கள் நடத்தும் குறுகிய கால பயிற்சிகளில் கலந்து கொள்கிறார்கள். உலக அளவில் வேளாண்மைத் தொழில் நுட்பங்களில் ஏற்படும், குறிப்பாக ட்ரோன்கள் வாயிலாக மருந்துகளை, உரங்களை தெளிக்கும் செய்திகளை கவனிக்கிறார்கள். நீர் மேலாண்மை குறித்த நுட்பங்களை அறிந்து, குறைந்த அளவு நீரில் நிறைய பயிரிடும் முறைகளைக் கையாளுகிறார்கள். அரசு வழங்கும் மானிய உதவிகளுடன் சொட்டு நீர்ப் பாசன முறையை அமைத்துக் கொள்கிறார்கள். ஒவ்வொரு நாளும் மன மகிழ்ச்சியுடன் திகழ்கிறார்கள்.
இவர்களுக்கும், வேளாண்மைத் தொழில் முனைவோருக்கும் அடுத்த வாய்ப்பாக டிஜிட்டல் தொழில் நுட்பம் கைகொடுக்க வந்து இருக்கிறது. புதிதாக அறிமுகமாகி இருக்கும் மொபைல் ஆப்கள் அதிசயங்களை நிகழ்த்தத் தொடங்கி இருக்கின்றன. தண்ணீர் பயன்பாட்டை, உரத்தை பயிர்களுக்கு தேவையான அளவுக்கு மட்டுமே பயன்படுத்த இந்த ஆப்கள் உதவுகின்றன. தண்ணீர் வீணாதல் குறைவதால் ஏறத்தாழ ஐம்பது விழுக்காடு அளவுக்கு தண்ணீர் மிச்சம் ஆவதாகவும், உரமும் மிச்சம் ஆவதாகவும் கூறுகிறார்கள். ஐஓடி எனப்படும் இன்டர்நெட் ஆஃப் திங்ஸ் தொழில் நுட்பத்தை இந்த ஆப்கள் பயன்படுத்துகின்றன. மொபைல் ஃபோன்களும், மொபைல் ஃபோன்களுடன் இணைந்து செயல்படும் டிஜிட்டல் கருவிகளும் எதிர்காலத்தில் இந்திய வேளாண்மைச் சூழலை பெரிய அளவுக்கு மாற்றி அமைக்கும் வாய்ப்பு உருவாகி வருகிறது.
வயலுக்கு நேரடியாகச் செல்லாமலேயே நிறைய செய்திகளைத் தெரிந்து கொள்ளும் வகையில் கருவிகள் வந்து இருக்கின்றன. நிறைய சென்சார்களுடன் வடிவமைக்கப்பட்டு இருக்கும் குறிப்பிட்ட கருவி வயலில் பொருத்தப்பட்ட பின், தட்பவெப்ப நிலை குறித்த, மழைப் பொழிவு, காற்றின் வேகம் குறித்த செய்திகளை உடனுக்குடன் அனுப்பி வைக்கிறது. நிலத்தின் ஈரப்பதம் குறித்த செய்திகளை அனுப்பும் ஆப்களும் வந்து இருக்கின்றன. இவை எல்லாம் இப்போது தொடக்க நிலையில் இருந்தாலும் விரைவிலேயே பரவலாக பயன்படுத்தப்படும் அளவுக்கு சந்தையில் கிடைக்கத் தொடங்கும் என்று எதிர்பார்க்காலாம். வயல்களுக்கு என வந்து இருக்கும் சிசிடிவி கேமராக்களை பொருத்தினால், எங்கு இருந்தபடியும் வயலைக் கண்காணிக்க முடியும் என்ற நிலையும் உருவாகி இருக்கிறது.
விளைவிக்கும் பொருள்களின் சந்தை விலையை தெரிந்து கொள்ளும் ஆப்கள் முன்பே வந்து விட்டன. ஆன்லைனிலேயே பொருள்களே விற்பனை செய்யும் பிளாட்ஃபார்ம்களும் உருவாகி வருகின்றன.
– க. ஜெயகிருஷ்ணன்