தண்ணீர் வசதி அதிகமாகவும், நிலம் ஈரத்தன்மை வாய்ந்ததாகவும் இருக்கக்கூடிய குளிர்காலங்களில் மட்டுமே சிறுகிழங்கு பயிரிட்டு வந்தனர். இதனால் ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே சாகுபடி செய்து அறுவடை செய்வதால் தை மாதத்தில் மட்டுமே சிறுகிழங்கு கிடைக்கும்.
அதே நேரத்தில் சிறுகிழங்கை விரும்பி உண்ணும் மக்களின் எண்ணிக்கை கூடி விட்டதால், உழவர்கள் தண்ணீர் செழிப்பான இடங்களில் மற்ற காலங்களிலும் சிறுகிழங்கு பயிரிடத் தொடங்கினர். இந்த மூன்று மாதகாலப் பயிரான சிறுகிழங்கு சாகுபடி உழவர்களுக்கு கணிசமான இலாபத்தை ஈட்டித்தரும் என்று சிறுகிழங்கு பயிரிடும் உழவர்கள் கூறுகின்றனர்.
பயிர் செய்யும் முறை
புதிதாக பயிர் செய்ய விரும்பும் உழவர்கள் சென்று செழுமையான நூறு கிழங்குகளை வாங்க வேண்டும். அல்லது உரக்கிடங்குகடை மற்றும் விதைப்பண்ணைகளிலும் வாங்கிக் கொள்ள வேண்டும்.
தன்னுடைய நிலத்தில் ஒரு சிறிய பகுதியில், கட்டியில்லாமல் உழுது சமப்படுத்த வேண்டும். சமப்படுத்திய நிலத்தில்; மண் முழுவதும் நனையும் அளவுக்கு தண்ணீர் பாய்ச்ச வேண்டும், அதன்பின்பு வாங்கி வந்த கிழங்குகளை நடவு (பதியம்) செய்ய வேண்டும்.
ஒரு மாதத்திற்குப் பின், நடவு செய்த கிழங்கு முளைத்து ; கொடியாக படர்ந்திருக்கும். அந்தக் கொடிகளை அறுத்து துண்டு துண்டாக நறுக்கி ஒரு ஏக்கர் நிலத்தில் சாகுபடி செய்யலாம்.
சிறுகிழங்கு ஏக்கர் கணக்கில் சாகுபடி செய்யும் உழவர்கள், முதலில் நிலத்தை நன்றாக உழுது, கட்டியில்லாமல் சமப்படுத்த வேண்டும். அதன் பின்பு பட்டம் போட்டு பாத்திகள் கட்ட வேண்டும். கட்டிய பாத்தி நிரம்ப தண்ணீர் பாய்ச்ச வேண்டும். அதன் பின்பு, துண்டு துண்டாக நறுக்கிய சிறுகிழங்கு கொடியை; நெல் நாற்று நடுவது போல் நடவு செய்ய வேண்டும்.
ஏற்கனவே சிறுகிழங்கு பயிரிடும் உழவர்கள் அறுவடை செய்யும் காலங்களில் தம்முடைய தேவைக்கேற்ப கொடிகளை அறுத்து வைத்துக் கொள்வார்கள். சிறு கிழங்கு பயிரை, நோய் தாக்காத பயிர் என்றும் சொல்லலாம்.
ஆனால், வாரத்திற்கு ஒரு முறை கண்டிப்பாக தண்ணீர் பாய்ச்சுதல் அவசியம். மூன்று மாதம் ஆனவுடன் அறுவடை செய்யலாம்.
அறுவடை செய்யும்போது, களைக்கொத்தி உதவியுடன் கிழங்குகளை தோண்டி எடுக்க வேண்டும். ஒரு ஏக்கருக்கு 3 டன் கிழங்கிலிருந்து 4 டன் கிழங்குகள் கிடைக்கும். இந்த சிறுகிழங்கை இரண்டு வழிகளில் சந்தைப்படுத்தலாம். ஒரு ஏக்கர் கிழங்கையும் மொத்தமாகத் தோண்டி எடுத்து விற்பனை செய்வது ஒரு வழி.
மற்றொன்று வாரத்திற்கு ஒரு முறை தேவையான அளவு கிழங்குகளைத் தோண்டி எடுத்து விற்பனை செய்வது.
இந்த இரண்டாவது முறை, உழவர்களுக்கு அதிக இலாபம் தரக்கூடியது. தோண்டி எடுத்த கிழங்குகளை அதிக நாட்களுக்கு அப்படியே வைத்திருந்தால் எடை குறைந்துவிடும் என்பதால், வணிகர்கள் ஏக்கர் கணக்கில் மொத்தமாக எடுத்துக் கொண்டு வரக்கூடிய கிழங்குகளின் விலையை மிகக்குறைத்துக் கேட்பார்கள்.
இதனால் சிறுகிழங்கை நிலத்திலேயே இருப்பு வைத்தால் எந்தப் பாதிப்பும் வந்துவிடாது என்பதால், இருப்பு வைத்து வாரத்திற்கு ஒருமுறை தேவையான அளவு தோண்டி எடுத்து விற்கிறோம் என முன்னணி உழவர்கள் கூறுகின்றனர். சிறுகிழங்கு குறுகிய காலப்பயிர் என்பதால் தண்ணீர் செழிப்பான இடங்களில் பயிரிட்டு நல்ல இலாபம் பெறலாம்.
-இ.கலைச்செல்வி