மண்புழு உரம் உற்பத்தித் தொழில் நுட்பம் பயன்படுத்தி ஆர்வமும், இட வசதியும் உள்ளவர்கள் மண்புழு உரம் தயாரிக்கலாம். முதல் மண்புழு உரக்குழியில் (Vermi bed). மண்புழுக்களை இட்டு முப்பது நாட்கள் கழித்து குப்பைகளைக் கொட்ட வேண்டும். 6x3x3 என்ற அளவிலான இரண்டு உரக்குழிகளில் இருந்து ஆண்டுக்கு ஆறு தடவை மண்புழு உரத்தை எடுக்கலாம். இரண்டு முதல் இரண்டரை டன் வரை கிடைக்கும். இதைப்போல எத்தனைக் குழிகள் வேண்டுமானாலும் அமைத்து உரம் உற்பத்தி செய்யலாம்.
மண்புழு உரம் உற்பத்தி செய்ய பயன்படுத்தாத மாட்டுத் தொழுவம், கோழிப்பண்ணை மற்றும் கட்டிடங்களை பயன்படுத்த முடியும். திறந்த வெளி என்றால் நிழலான இடமாக இருக்க வேண்டும். வெயில் மற்றும் மழையில் இருந்துபாதுகாப்பதற்கு, தென்னங் கீற்று கூரையை பயன்படுத்தலாம்.
ஒரு உரக்குழி சிமென்ட் தொட்டியின் உயரம் 2 அடி மற்றும் அகலம் 3 அடி ஆக இருக்கவேண்டும். ஹாலோ ப்ளாக்ஸ், செங்கல் இவற்றை பயன்படுத்தி தொட்டிகளைக் கட்டலாம். சிறிய அளவில் மண்புழு உரம் தயாரிக்க நினைப்பவர்கள் மரப் பெட்டிகளையோ, பிளாஸ்டிக் பெட்டிகளையோ கூட பயன்படுத்தலாம். மண்புழு உரம் தயாரிக்க கடின தரை மிகவும் அவசியம். தரை மிருதுவாக இருந்தால் மண்புழு மண்ணுக்குள் செல்ல வாய்ப்பு இருக்கிறது. மேலும் மண்புழு படுகையில் தண்ணீர் விடும் பொழுது, கரையக் கூடிய சத்துக்கள் எல்லாம் நீரில் கரைந்து மண்ணுக்குள் சென்று விடும். சிமென்ட் தொட்டிகளுக்கு பதில் குறைந்த விலையில் கிடைக்கும் 450 gsm hdpe Azolla bed களும் பயன்படுத்தப்படுகின்றன. மாடித் தோட்டம் அமைப்பதற்கும் சில வேளாண் பணிகளுக்கும் கூட இந்த அசோல்லா தொட்டிகள் பயன்படுத்தப் படுகின்றன. இவை சுமார் மூன்று ஆண்டுகள் வரை வரும்.
நெல், உமி அல்லது தென்னை நார்க்கழிவு அல்லது கரும்புத் தோகைகளை தொட்டியின் அடிப்பாகத்தில் 3 செ.மீ உயரத்திற்கு பரப்ப வேண்டும். ஆற்று மணலை இதற்கு மேல் 3 செ.மீ உயரத்திற்கு தூவ வேண்டும். பிறகு 3 செ.மீ. உயரத்திற்கு மண் பரப்ப வேண்டும். இதற்கு மேல் தண்ணீரைத் தெளிக்க வேண்டும். களிப்பு அதிகம் உள்ள மண் மண்புழு உரம் தயாரிப்புக்கு ஏற்றதல்ல.
மண்புழு உரம் தயாரிக்க பயிர் தூர், களைகள், வைக்கோல், உமி, எரு, மலைப் பயிர்கள், தண்டு, இலைகள், பழத்தோல்கள், கால்நடைகள் சாணம், மூத்திரம், சாண எரிவாயுக் கழிவு, உணவு பதப்படுத்தும் ஆலையின் கழிவுகளான தோல், ஓடு, பயன்படுத்தாத குழம்பு, காய்கறிகள்; சமையல் எண்ணெய் ஆலையில் இருந்து கிடைக்கும் விதை ஓடுகள், பிரஸ்மட், கழிவு நீர், பார்லி கழிவுகள்; விதை பதப்படுத்தும் ஆலைகளில் இருந்து கிடைக்கும் பழங்கள் (மத்திய பகுதி), முளைக்காத விதைகள்; வாசனை திரவியங்கள் ஆலையில் இருந்து கிடைக்கும் தண்டு, இலை, பூக்கள்;தென்னை நார்க் கழிவு, காய்கறிக் கழிவுகளை மண்புழு உரத் தயாரிப்புக்கு பயன் படுத்தலாம். இத்தகைய கழிவுகளை அல்லது இவற்றில் சில கலந்த கலவையை மண்புழு உரத் தொட்டியின் விளிம்பு வரை நிரப்ப வேண்டும்.
மக்கக் கூடிய கழிவுகளை குவித்து, அதில் சாணக் கரைசலை தெளித்து, 20 நாட்கள் மக்கிய கழிவுகள் மண்புழு சாப்பிடுவதற்கு ஏதுவாக இருக்கும். நன்றாக உலர்ந்த கால்நடைக் கழிவுகளையும், சாண எரிவாயுக் கழிவுகளையும் மட்டுமே மண்புழு உரம் தயாரிக்க நேரடியாக பயன்படுத்தலாம்.
மண்புழுக்களிலும் பல வகைகள் உள்ளன. யுடிரில்லஸ் யுவாஜினே (EudrillusUaginae), ஐசினியா ஃபோட்டிடா போன்ற சிலவகை மண்புழுக்கள் மண்ணை உட் கொள்ளாமல் இலை தழைகளை மட்டுமே உண்டு கழிவுகளை வெளியேற்றுகின்றன. சிலவகை மண்புழுக்கள் மண்ணுடன் இலை தழைகளையும் உண்டு கழிவை வெளியேற்றுகின்றன. இரண்டுமே மண்புழு உரம் தான். சில வகைப் புழுக்கள் மண்ணின் மேற்பரப்பிலேயே வாழும். இவற்றிற்கு எப்பிஜெயிக் (Epigeic) வகை என்று பெயர். வேறு சிலவகை ஒன்றரை மீட்டர் ஆழம் வரை மேலும், கீழும் இடம் பெயர்ந்து காணப்படும். இவ்வகை புழுக்களுக்கு அனெசிக் (Anacic) என்று பெயர். இன்னும் சில மண்ணின் அடிப் பகுதியிலேயே வாழும். இவற்றிற்கு எண்டோஜெயிக் (Endogeic) என்று பெயர். மண்புழு உரத் தயாரிப்புக்கு மேல் மட்டப் புழுக்கள் உகந்தவை. மேல்மட்ட, இடைமட்ட வகைப் புழுக்களைக் கலந்தும் பயன்படுத்தலாம். அடிமட்டப் புழுக்கள் ஏற்றவை அல்ல. மண்புழுக்கள் தேவைக்கும் அதிகமாக வளர்ந்து விட்டால், தேவையான அளவுக்கு போக மீதமுள்ள எண்ணிக்கையை அப்புறப்படுத்த வேண்டும். இல்லை எனில் இடவசதி இல்லாததால் மண்புழுக்கள் இறந்துவிடும்.
தேர்ந்தெடுக்கப்பட்ட மண்புழுக்களை சமமாக பரப்ப வேண்டும். ஒரு மீட்டர் நீளம் X 1மீட்டர் அகலம் X 0.5 மீட்டர் உயரத்திற்கு இரண்டு கிலோ மண்புழு (சுமார் 2000 மண்புழு) தேவைப்படுகிறது. மண்புழுக்களை கழிவுகளுக்குள் விட வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. மேலே பரப்பினால் போதுமானது. தினமும் தண்ணீர் தெளிக்க வேண்டும். ஊற்றக் கூடாது. 60 சதவீதம் ஈரப்பதம் இருக்க வேண்டும். அறுவடைக்கு முன்னதாக தண்ணீர் தெளிப்பதை நிறுத்தி விட வேண்டும்.
முதல்தடவை உரம் எடுக்க 120 நாட்கள் ஆகும். அதன்பிறகு 90 நாட்களுக்கு ஒருமுறை மண்புழு உரம் அள்ள முடியும். தொட்டி முறையில், மண்புழு உர படுகையின் மேல் உள்ள மண்புழு கழிவினை மட்டும் அள்ள வேண்டும். வாரத்திற்கு ஒரு முறை அள்ள வேண்டும். சேகரித்த உரத்தை அதிக வெயில்படாத காற்றோட்டம் உள்ள இடத்தில் சேமித்து வைக்கவும். இவ்வாறு சேமித்து வைக்கப்பட்டுள்ள மண்புழு உரத்தில் நன்மை தரும் நுண்ணுயிர்கள் அதிக அளவில் வளரும். மண்புழு உரத்தை சல்லடையில் இட்டு சலிக்கும் பொழுது, நன்றாக மக்கிய உரம் மற்றும், மக்காத கழிவுகளை தனித்தனியாக பிரித்து எடுக்கப்படும். மக்காத கழிவுகளை மறுபடியும் மண்புழு படுக்கையில் இடவும்.
சாணப்பந்துகள் உரக்குழியில் பல இடங்களில் வைக்கப்பட வேண்டும். இதனால் மண்புழுக்கள் அந்த சாணத்தினால் கவரப்படுகின்றன. பிறகு இதனை தண்ணீரில் போடுவதன் மூலம் சாணம் கரைந்து மண் புழுக்கள் பிரித்தெடுக்கப்படுகின்றன. இந்தப் புழுக்கள், அடுத்த மண்புழு உரம் தயாரிக்கப் பயன்படுத்தப்படுகின்றன.
அசிட்டோஃபேக்டர், அசோஸ்பைரில்லம், பாஸ்போபேக்டிரியா, சூடோமோனாஸ், போன்ற உயிர் உரங்கள் மூலம் மண்புழு உரத்தினை ஊட்டமேற்றலாம். இதனால் சத்துக்கள் அதிகரிக்கின்றன. ஒரு டன் கழிவிற்கு ஒரு கிலோ அசோபாஸ் (அசோஸ்பைரில்லம் மற்றும் பாஸ்போ – பேக்டீரியா) என்ற அளவில் இருபது நாட்களுக்கு பின் மண்புழு படுகையில் சேர்க்கலாம். இந்த நன்மை தரும் நுண்ணுயிர்கள் காற்றில் இருக்கும் தழைச்சத்தை மண்புழு உரத்தில் நிலைநிறுத்துகிறது. பயிர்களுக்கு வேண்டிய வளர்ச்சி ஊக்கிகளை சுரந்து மண்புழு உரத்தில் நிலை பெறச் செய்கிறது. கரையாமல் இருக்கும் மணிச்சத்தை கரைத்து கொடுக்கிறது.
மக்கிய உரத்தை பாக்கெட் செய்வதை விட திறந்த வெளியில் சேமிப்பது சிறந்தது ஆகும். திறந்த வெளியில் உரத்தை சேமிக்கும் பொழுது தண்ணீர் தெளித்து ஈரப்பதத்தை காக்க வேண்டும். இதனால் நுண்ணுயிர்கள் அழிவதை தடுக்கலாம். 40 சதவிகித ஈரப்பதத்துடன் வைப்பதினால் மண்புழு உரத்தின் தரம் குறையாமல் பாதுகாக்கலாம். விற்கும் சமயத்தில் மட்டுமே பைகளில் நிரப்ப வேண்டும்.
இயற்கை வேளாண்மையில் மண்புழு உரத்துக்கு தனி இடம் இருக்கிறது. தற்போது மண்புழு உரம் ஒரு கிலோ இருபத்தைந்து ரூபாய் முதல் ஐம்பது ரூபாய் வரை விற்பனை ஆகிறது.
தமிழ் நாட்டில் மண்புழு உரம் ஈரோடு, கோவை, பொள்ளாச்சி, செங்கை, சென்னை, பாண்டிச்சேரி போன்ற பகுதிகளில் பயன்படுத்தப் படுகின்றன. பூச்செடிகள், மிளகாய், மாதுளை, கத்தரி, வெண்டை ஆகிய பயிர்களுக்குப் போட்டுப் பார்த்ததில் நல்ல வேறுபாடு தெரிகிறது. மற்றபடி எல்லா செடிகள், மரங்களுக்கும் போடலாம். வீட்டு பூந்தொட்டிகளுக்கு மிகவும் ஏற்றது.
வெர்மிவாஷ் (Vermiwash) என்ற பெயரில் மண்புழு உரக் கரைசலையும் தயாரிக்கலாம். ஒரு பெரிய வாளியிலோ, தொட்டியிலோ குறிப்பிட்ட அளவுக்கு மண் எடுத்து மண்புழுக்களை இட வேண்டும். பின்னர் மாட்டுச் சாணம் இட்டு, வாளியின் மேற்பகுதியில் சொட்டுச் சொட்டாக தண்ணீர் விழவைக்க வேண்டும். இந்தத் தண்ணீர் சாணம், வைக்கோல், மண்புழுக் கழிவு ஆகியவற்றுடன் கலந்து உரச்சத்து மிகுந்த கரைசலாக வாளியின் அடிப்பகுதியில் உள்ள துளை மூலம் கிடைக்கும். இந்தக் கரைசலை திரவ உரமாகப் பயன்படுத்தலாம்.
– கே.எஸ். கீதா, எம்.எஸ்சி.,