Latest Posts

ஃப்ரேம் போடும் தொழிலுக்கு இன்னும் வாய்ப்பு இருக்கிறது

- Advertisement -

முன்பெல்லாம் வீட்டுக்கு வீடு தாங்கள் எடுக்கும் ஒளிப்படங்களை ஃப்ரேம் போட்டு மாட்டி வைக்கும் பழக்கம் இருந்தது. அனைவர் வீட்டிலும் குழந்தைகள் படங்கள், திருமணப் படங்கள், குடும்பப் படங்கள், சுற்றுலாப் படங்கள் என்று அணி வகுத்த படி இருக்கும். இதனால் எல்லா ஊர் களிலும் ஃப்ரேம் போட்டுத் தரும் கடைகள் இருக்கும். அடுத்து ஆல்பங்கள் தயாரித்து வைத்துக் கொள்ளும் பழக்கம் அறிமுகம் ஆனது. ஃப்ரேம் போடும் பழக்கம் குறையத் தொடங்கியது. கணினியில், செல்பேசி களிலேயே படங்களை பாதுகாக்கும் பழக்கம் வந்த பிறகு ஃப்ரேம் தொழிலில் இருந்த வாய்ப்பு இன்னும் குறைந்து விட்டது.

ஃப்ரேம் தொழிலில் இருந்த பலர் வேறு தொழில்களுக்கு மாறினார்கள். ஆனாலும் இன்றைக்கு ஃப்ரேம் தொழிலில் ஏற்பட்ட மாற்றங்களை உள்வாங்கி அந்த தொழிலில் தாக்குப் பிடித்துக் கொண்டு இருப்பவர்களும் இருக்கிறார்கள்.

தொழிலில் ஏற்பட்டு வந்த பின்னடைவுகளுக்கு இடையே புதிய வாய்ப்புகளை கண்டறிந்து ஃப்ரேம் தொழிலில் தனி முத்திரை பதித்து வருகிறார், திரு. கே. பழனி.

Also read: ஹேர் ஆயில், ஸ்கின் ஆயிலுக்கு விற்பனை வாய்ப்பு

இவர் நடத்தி வரும் சுலக்சனா பிக்சர் ஃபிரேமிங் நிறுவனம் சென்னை, இராயப் பேட்டை, ஐஓஏ வளாகத்தில் உள்ளது. அங்கு சென்று அவரை சந்தித்தோம். பிரபல ஓவியர்களின்  கைவண்ணம் அக்காட்சிக் கூடத்தின் சுவர்களை அலங்கரித்துக் கொண்டு இருத்தன. அவற்றின் சிறப்புத் தன்மைகள் குறித்து நமக்கு, எடுத்துரைத்த அவர், ஃபிரேம் தொழிலில் தான் வளர்ந்தது எப்படி? என்பது குறித்த விரிவான தகவல் களை நம்முடன் பகிர்ந்து கொண்டார். அவருடைய பேட்டியில் இருந்து

”மதுராந்தகம் அருகே உள்ள கீழ்ப்பட்டு கிராமம்தான் என் சொந்த ஊர். படிக்க வேண்டுமானால்,பக்கத்தில்உள்ள தச்சூருக்குதான் போக வேண்டும். விவசாயத் தொழிலாளர்களான என் பெற்றோர், கன்னியப்பன் – லட்சுமி என்னை தச்சூரில் உள்ள பள்ளியில் சேர்த்தனர். மூன்றாம் வகுப்புக்கு மேல் பள்ளிக் கூடம் செல்லவில்லை.

கிராமத்தின் சக சிறுவர்களுடன் சேர்ந்து கொண்டு காடு,மேடு எனத் திரிந்தேன். எனக்கு வயது 11-ஐ எட்டிய போது ஓட்டல் பாய் வேலைக்குப் சென்றேன். மாமண்டூரில் நூறாண்டு பழமை வாய்ந்த நரசிம்ம விலாஸ் ஓட்டலில் மூன்று ஆண்டுகள் வேலை செய்தேன். பாத்திரங்களை கழுவிக் கொடுப்பது, தண்ணீர் நிரப்புவது போன்ற பணிகளை என்னிடம் ஒப்படைத்து இருந்தனர். பின்னர் மீனம்பாக்கத்தில் உள்ள ஒரு ஓட்டலில் சேர்ந்தேன். ஏற்கனவே செய்த அதே வேலைதான். இங்கு இரண்டு ஆண்டுகள் பணி புரிந்தேன். ஓட்டலில் பணிபுரிந்த ஐந்து ஆண்டுகளில் பெரிதாக எதையும் நான் சேமிக்கவில்லை. ஆனால், சோர்வில்லாமல் உழைப்பதற்கு என் உடம்பு பழகிக் கொண்டது.

மீனம்பாக்கம், ஓட்டலில் இருந்து விலகி, மயிலாப்பூரில் உள்ள ஜெய்கணேஷ் பிரின்டிங் என்ற அச்சகத்தில் உதவியாளராக சேர்ந்தேன். அங்கு சில மாதங்கள் பணி புரிந்து விட்டு நுங்கம்பாக்கத்தில் உள்ள சைல்ட் டிரஸ்ட் மருத்துவமனைக்கு மாறினேன். அப்போது எனக்கு பதினேட்டு, பத்தொன்பது வயது இருக்கும். வார்டு பாய் வேலை, நிறைய நண்பர்கள் அறிமுக மாயினர். பணிநேரம் போக சென்னை நகரில் சுற்றினேன்.

என்னைத் தொடர்ந்து கண்காணித்து வந்த என் தந்தையாருக்கு முதன் முறையாக என்னைப் பற்றிய பயம் ஏற்பட்டது. நண்பர்களுடன் சேர்ந்து கெட்டுப் போய் விடுவேன் என்று பயந்து சென்னையில் இருந்து பெங்களூருக்கு அழைத்துச் சென்றார். அங்கு ஜெய்நகரில் இருந்த லட்சனா பிக்சர் ஃபிரேமிங் கடையில் வேலைக்கு சேர்த்து விட்டார். இதுதான் எனக்கு திருப்பு முனையாக அமைந்தது.

ஃபிரேம் தொழிலில் அடிப்படை அறிவு இல்லாத எனக்கு அங்கே எடுபடி வேலைதான் கொடுத்தனர். திரு. சந்திரபாபு என்ற தொழில் நுட்பம் தெரிந்த பணியாளரிடம் உதவியாளராக இருந்தேன். ஃபிரேம், கண்ணாடி போன்றவற்றை எடுத்துக் கொடுப்பது படங்களைத் துடைப்பது என்று அவர் சொன்ன வேலைகளைச் செய்தேன்.

திரு. சந்திரபாபு, ஃபிரேம் தொழிலில் அனைத்து தொழில் நுட்பங்களையும் அறிந்தவர் என்றாலும் அவருடைய இலட்சியக் கனவு புகழ் பெற்ற ஓவியர் ஆக வேண்டும் என்பதாக இருந்தது. இதனால் நேரம் கிடைத்தபோது எல்லாம் வரைந்து தள்ளிக் கொண்டே இருந்தார். ஒரு நாள் திடீர் என ஃபிரேம் தொழிலுக்கு முழுக்கு போட்டு விட்டு ஓவியம் வரையச் சென்று விட்டார்.

அப்போதுதான் கடை உரிமையாளர் திரு. ரவேந்திரன், திரு. சந்திரபாபு இருந்த இடத்தை நீதான் நிறைவு செய்ய வேண்டும் என்று கூறினார்.

ஃபிரேம் போடும் தொழில் நுட்பம் அனைத்தையும் கற்றுக் கொண்டேன். ஐந்து ஆண்டுகள் அங்கு பணியாற்றினேன். 23-ம் வயது நிறைவடைந்த நிலையில் தந்தையாரின் அறிவுறுத்தலின் பேரில் சென்னை திரும்பினேன்.

அதே ஆண்டு மயிலாப்பூரில் எனக்கு திருமணம் நடைபெற்றது. திரு. ரவேந்திரன் என்னை அழைத்து, ”இனி, சென்னையில் என் தம்பி மது ஃபிரேம் கடை நடத்துகிறார். அதில் பணி செய்” என்று கூறினார். இந்தக் கடையும் லக்சனா பிக்சர் ஃபிரேமிங் என்ற பெயர்தான் இயங்கி வருகிறது. திரு. மது, அசாத்திய துணிச்சல் கொண்டவர். எவ்வளவு பெரிய வேலை என்றாலும் துணிச்சலாக எடுப்பார். அதே சமயம் வெற்றிகரமாக நிறைவு செய்து கொடுப்பார். என்னுடைய மாத வருமானம் ஒரு குடும்பத்தை நடத்தும் அளவுக்கு இல்லை. என் மனைவி ஜெயலட்சுமி, அடையாறு கிராண்ட் ஸ்வீட்ஸ் கடையில் பணியாற்றி, ஒரு பாதி செலவை ஈடுகட்டினார். கூடுதலாக வருவாய் ஈட்ட வேண்டிய கட்டாயம் எனக்கு ஏற்பட்டது. நிறைய சிந்தித்தேன்.

பெங்களூரில் இருந்த போது பிரபல ஓவியர்களான திரு. வாசுதேவ், திரு. ராமச்சந்திரன், திரு. ஜெகதீஷ், திரு. மூர்த்தி, திரு. நஞ்சுண்டராவ் ஆகியோரின் நட்பு கிடைத்திருந்தது.

ஒவ்வொருவரும் ஒவ்வொரு பணியில் தனித்துவம் பெற்றவர்கள். அவர்களின் படைப்பாற்றலை உணர்ந்து ரசிக்கும் திறனை வளர்த்துக் கொண்டிருந்தேன். சென்னையிலும் இவர்களுக்கு நல்ல தொடர்பு இருந்தது. இதோடு, திரு. ரவேந்திரனிடம் கற்றுக் கொண்ட தொழில் நுட்பம், திரு. மதுவிடம் பெற்ற துணிச்சல் ஆகியவற்றைக் கொண்டு நாமே ஏன் ஒரு கடையைத் தொடங்கக் கூடாது? என்று எண்ணினேன்.

ராஜா அண்ணாமலைபுரத்தில் ரூ.1500 வாடகையில் 50 சதுர அடியில் சுலக்சனா பிக்சர் ஃபிரேமிங் கடையை 2007-ல் தொடங்கினேன். பக்கத்தில் நான் வாடகைக்கு இருந்த வீட்டின் மொட்டை மாடியில் தொழில் கூடத்தை அமைத்துக் கொண்டேன். பெங்களூரில் என்னுடன் பழகிய பிரபல ஓவியர் திரு. அல்போன்சா தாஸ் என்னுடைய புதிய கடைக்கு வந்தார். அவர் மூலமும், சிஐடி காலனியில் உள்ள விநாயகா பிரிமியர் ஆர்ட் கேலரி நிர்வாகியின் நட்பு காரணமாகவும் தொடர்ந்து நிறைய படங்களுக்கு ஃபிரேம் போடும் வாய்ப்புகள் கிடைத்தன.

ஓவியர்கள் திரு. இளங்கோ மற்றும் திரு. விநாயகா, விஜயா போன்றோர் மேலும், மேலும் வாய்ப்புகள் கிடைக்க உதவினர். தொழில் வளர்ச்சிக்கு ஏற்ப கடையையும் தொழில் கூடத்தையும் மாற்ற வேண்டிய அவசியம் ஏற்பட்டது. ராஜா அண்ணாமலைபுரத்தில் இருந்து மயிலாப்பூருக்கு மாற்றிய போது மேலும் ஒரு படி வளர்ச்சி பெற்றேன்.

விநாயகா கேலரியில் வாய்ப்பு ஏற்பட்டது போல வேறு சில ஆர்ட் கேலரிகளுக்கும் சென்று வாய்ப்புகளைப் பெற்றேன். நேரம் கிடைக்கும் போதெல்லாம் பல்வேறு ஆர்ட் கேலரிகளுக்குச் சென்று பார்வையிடுவேன். அங்கு புதிய நுட்பங்களும், ஓவியர்களின் அறிவுரையும் கிடைக்கும். என் வளர்ச்சிக்கு அவற்றைப் பயன்டுத்திக் கொள்வேன்.

மேலை நாடுகளில் ஆர்ட் கேலரிகள் எப்படி செயல்படுகின்றன, ஃபிரேம் போடுவதில் அவர்கள் கையாளும் நவீன தொழில் நுட்பம் ஆகியவற்றை “யூடியூபில் பார்ப்பேன்.

என்னைப் பொறுத்தவரை ஒரு ஓவியர், தன் ஓவியம் சிறப்பாக வர எப்படி எல்லாம் முயற்சி எடுப்பாரோ, அதே முனைப்பை ஃபிரேம் போடுவதில் நான் எடுத்துக் கொள்வேன். ஓவியம் அல்லது படத்துக்கு ஏற்ப ஃபிரேமின் நிறம் மற்றும் அளவை தேர்வு செய்வேன். ஃபிரேம் போடப்படும் ஓவியம் இரட்டிப்பு அழகு பெற வேண்டும் என்ற எண்ணத்துடன் பணி செய்வோம். இந்த எண்ணம்தான் தொழிலில் எனக்கு வெற்றியைக் கொடுத்தது.

Also read: கைவினைப் பொருட்களுக்கான மூலப் பொருட்கள் எங்கே கிடைக்கின்றன?

தற்போது ஒரே சமயத்தில் சுமார் பத்து பேர் வேலை செய்யும் வகையிலான எங்களுடைய தொழில் கூடம் மயிலாப்பூரில் உள்ளது. காட்சிக் கூடகத்துடன் கூடிய ஒரு கடையை உருவாக்க வேண்டும் என்பது என் நீண்ட நாள் கனவு. அண்மையில் இந்த எண்ணத்தை செயல்படுத்தினேன். இராயப் பேட்டை, ஐஓஏ வளாகத்தில் கடை மற்றும் காட்சிக் கூடத்தை அமைத்தேன்.

ஃபிரேம் தொழிலின் அனைத்து வேலைகளும் எங்களுக்கு தெரியும். என் குடும்பத்தைச் சேர்ந்தவர்களும், வெளி ஆட்களும் என்னிடம் பணிபுரிகிறார்கள். அனைவரையும் சமமாகத்தான் நடத்து கிறேன்.

ஃபிரேம் போட ரூ.100 கட்டணத்தில் தொடங்கி ரூ.36,000 வரை பெற்று இருக்கிறோம். படம் அல்லது ஓவியத்தின் அளவு மற்றும் ஃபிரேம், எப்படி இருக்க வேண்டும் என்ற வாடிக்கையாளரின் விருப்பத்திற்கு ஏற்ப கட்டணத்தை நிர்ணயிக்கிறோம். ஒரு முறை எங்களிடம் வரும் வாடிக்கையாளர் நிரந்தரமான வாடிக்கையாளர் ஆகிவிடுகிறார்கள், அந்த அளவுக்கு வாடிக்கையாளரிடம் நடந்து கொள்கிறோம்.

தற்போது நாங்கள் ஆர்ட் ஃபிரேம்கள், போட்டோ ஃபிரேம்கள், தஞ்சாவூர் பெயின்டிங்ஸ், ஐரோப்பிய ஃபிரேம்கள், மவுன்ட் சிங்க்ரேப் லேமினேஷன்ஸ் போன்ற பணிகளை செய்து தருகிறோம். எங்களுக்கு தேவைப்படும் மூலப் பொருட்களை மும்பை, டெல்லி மாநகரங்களில் இருந்து வாங்குகிறோம்.

ஒர் ஓவியத்திற்கு ஃபிரேம் போடுவதில் எவ்வளவு நேர்த்தி காட்ட வேண்டுமோ, அதே கவனத்தை ஒரு ஆர்ட் கேலரியில் படங்களை அலங்காரமாக அமைப்பதிலும் கவனம் செலுத்த வேண்டும். சென்னையில் எங்களைப் போல ஃபிரேம் போடும் தொழில் நுட்பம் தெரிந்தவர்கள் பலர் இருந்தாலும், ஆர்ட் கேலரியில் ஓவிங்களை அமைத்துக் கொடுக்கும் பணியை அவர்கள் செய்து கொடுப்பதாகத் தெரியவில்லை.

ஆனால் அதையும் நாங்கள் செய்வதால் ஓவிய உலகில் நாங்கள் தனித்துப் பார்க்கப் படுகிறோம். எங்கள் திறனை உலகத் தரத்துக்கு வளர்த்துக் கொள்ள விரும்புகிறேன். இதற்காக வெளிநாடுகளுக்குச் சென்று அங்கு இத்தொழில் நிலவரத்தை நேரில் அறிய வேண்டும், என்ற விருப்பமும் இருக்கிறது” என்கிறார், திரு. கே. பழனி.(9884414404)

-ம. வி. ராஜதுரை

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

Subscribe to our latest news