Latest Posts

தடைகளைத் தாண்டும் உறுதி படைத்த மாண்புமிகு மா. சுப்பிரமணியன்!

- Advertisement -

தமிழ்நாடு முழுவதும் அதிக நண்பர்களைக் கொண்டவர், அமைச்சர் மா.சுப்பிரமணியன். அதிலும் சென்னையில் இவர் நண்பர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகம். பதவியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் ஒரே மாதிரியாகப் பழகக் கூடியவர். இவர் சென்னை மேயராக இருந்த போது, இவர் பணியாற்றும் வேகம் கண்டு சென்னை மக்கள் வியப்பில் ஆழ்ந்தபடி இருந்தனர். அப்போது முதலமைச்சராக இருந்த கலைஞர் எள் என்பதற்குள் எண்ணெயாக இருந்தவர். இன்றைக்கு  இவருக்கு ”மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை” கொடுக்கப்பட்டு இருக்கிறது. பதவி ஏற்ற உடனேயே தன் பணிகளை விரைவாகத் தொடங்கி விட்டார். இவர் செயலாற்றும் பாங்கு கண்டு மக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். அதிலும் இவருக்கு வாக்கு அளித்த சைதாப்பேட்டை மக்கள் கூடுதலாக மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

மா. சு. பிறந்தது, வாணியம்பாடி அருகில் இருக்குமு ஒரு சின்ன கிராமம். ஆனால், சின்ன வயதிலேயே சித்தூர் பக்கத்தில் இருக்கும் புல்லூர் கிராமத்தில் குடியேறிய சூழலில், அங்கேதான் தொடக்கக்கல்வி படித்தார். இதன் பின்னர் சென்னைக்கு குடி பெயர்ந்தனர். மா. சு. அப்பாவுக்கு மீன் பிடிப்பதுதான் தொழில். நிறைய தமிழர் குடும்பங்களில் உள்ளதைப் போலவே, குடும்பத்திலேயே  முதல் பட்டதாரி இவர்தான். தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா கொள்கைகளால் ஈர்க்கப்பட்டவர். சமூகநீதி கருத்துகளில் உறுதியானவர்.

இவர் மனைவி பெயர் காஞ்சனா.இரண்டு மகன்கள். ஒருவர் பெயர், இளஞ்செழியன், லண்டனில் மருத்துவராக இருக்கிறார். மருமகளும் மருத்துவர். இரண்டு பேரக் குழந்தைகள். பேரன் பெயர் இன்பன்; பேத்தி மகிழினி. இன்னொரு மகன் அன்பழகன். மாற்று திறனாளியாக இருந்த இவர், அண்மையில் காலமாகி விட்டார்.
சென்னை சைதாப்பேட்டை தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர். சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயர். தி.மு.க-வின் சென்னை தெற்கு மாவட்டச் செயலாளர். சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞரும்கூட.

எந்நேரமும் சுறுசுறுப்பாக இயங்கக் கூடியவர் என்று அனைத்து ஊடகர்கள் நடுவிலும், மக்களிடமும் பெயரெடுத்தவர். இதை எல்லாம் தாண்டி அறுபது வயதை தாண்டிய நிலையில் மாரத்தான் போட்டிகளில் கலந்து கொண்டு பல கிலோ மீட்டர்கள் ஓடி பன்னாட்டு அளவில் சாதனை புரிந்தவர்களில் இவரும் ஒருவர்.
இத்தனைக்கும் 2004-ம் ஆண்டு நிகழ்ந்த ஒரு விபத்தில், `இனி இவரால் நடக்க முடியுமா’ என்று மருத்துவர்களே சந்தேகப்பட்ட நிலையில், அதையும் தகர்த்து, இன்று மாரத்தான் ஓடிக்கொண்டு இருக்கிறார்.

தன்னுடைய உடல் நலன் பற்றிக் கூறும்போது, “எனக்கு சர்க்கரைநோய் பாதிப்பு இருப்பது, 1995-ம் ஆண்டுதான் தெரிய வந்தது. அதற்குப் பிறகுதான் முறையாக நடைப் பயிற்சி போகத் தொடங்கினேன். கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளாக  நடைப் பயிற்சி மட்டும்தான்.

2004-ம் ஆண்டு அக்டோபர் மாதம் ஒரு கட்சி விழாவுக்காக மதுரைக்குப் போயிருந்தோம். எங்க கார் மேல ஒரு கன்டெய்னர் லாரி மோதி விட்டது. அது மிகப் பெரிய விபத்து. என் கூட வந்த என் நண்பர் ஜம்புலிங்கம் ஸ்பாட்லயே இறந்து விட்டார். எனக்கு வலது கால் மூட்டு உடைந்து விட்டது. மருத்துவர்கள், கம்பி போட்டு, காலை ஒட்ட வெச்சாங்க. `இனிமே வாழ்நாள் முழுக்க உங்களால சம்மணம் போட்டு உட்கார முடியாது, ஓட முடியாது’ ன்னும் சொன்னாங்க..

அதன்பிறகு என்னோட காலைச் சரி பண்றதுக்காக பிசியோதெரபி ட்ரீட்மென்ட் ஆறு மாசம் எடுத்துக்கிட்டேன். ஆனா, அதனால பெரிய மாற்றம் ஏதுவும் ஏற்படலை. அடுத்ததா, யோகா கத்துக்கத் தொடங்கினேன். கொஞ்ச நாள்லயே எல்லா வகை ஆசனங்களையும் செய்யக் கத்துக்கிட்டேன். நான் பத்மாசனம் செய்யிறதைப் பார்த்த என் டாக்டர் வியந்து போயிட்டார்.

அதனாலே கால் நிலைமை ஓரளவுக்குச் சரியாகிடுச்சு. அடுத்த ஏழெட்டு ஆண்டுகளுக்கு வாக்கிங், ஜாக்கிங் மட்டும்தான் போயிட்டிருந்தேன். 2013 -ம் ஆண்டுலதான் `சரி ஓடிப் பார்க்கலாம்’ னு முடிவு பண்ணினேன். ஆரம்பத்துல கொஞ்ச தொலைவு ஓடினேன். நாளுக்கு நாள் கொஞ்சம் கொஞ்சமா ஓடுற தொலைவை அதிகப்படுத்திக்கிட்டேன். முதன்முறையா, 2014-ம் ஆண்டு பிப்ரவரியில பாண்டிச்சேரி ஆரோவில்லில் நடந்த மாரத்தான் போட்டியில நண்பர்களோட சேர்ந்து கலந்துக்கிட்டேன். மொத்த தொலைவூ 21 கி.மீட்டர். என் கூட வந்த நண்பர்கள் எல்லாரும் மூணு மணி நேரத்தைத் தாண்டியும் ஓடிட்டு இருந்தாங்க. நான் வெறும் 2:30 மணி நேரத்துல 21 கி.மீட்டர் தூரத்தை ஓடி முடிச்சுட்டேன். இத்தனைக்கும் என்கூட வந்த நண்பர்கள் என்னைவிட 20 வயசு குறைஞ்சவங்க.

அப்பத்தான், என்னால முடியும்னு எனக்குள்ளயே ஒரு நம்பிக்கை வரத் தொடங்கியது.  `இனி எந்த மாரத்தான் போட்டியையும் விடக் கூடாது’ னு முடிவு பண்ணி, எங்க போட்டி நடந்தாலும் தேடித்தேடிப் போய் ஓடத் தொடங்கினேன். இந்திய அளவுல டெல்லி, மும்பை, புனே, சிம்லா, ஹைதராபாத், சென்னை, நெல்லை, கோவை போன்ற மாநகரங்கள்லேயும், உலகளவுல லண்டன், கத்தார், இத்தாலி, ஆஸ்திரேலியா, ஆஸ்திரியா, நார்வே போன்ற நாடுகள்லயும் மாரத்தான்ல ஓடியிருக்கேன். ஓடத் தொடங்கின ரெண்டு ஆண்டுகளில 25 போட்டிகள் – ல கலந்துக்கிட்டு ஓடி முடிச்சேன். இதனால, `இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்’ ல தேசிய அளவிலான சாதனையாளரா என் பேர் வந்துச்சு. 29 போட்டிகள்ல ஓடி முடிச்சதும், `ஆசியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்’ல என் பேர் வந்தது. 50 மாரத்தான் போட்டிகள்ல ஓடி முடிச்சதும் `வேர்ல்டு ரெக்கார்ட்ஸ் யுனிவர்சிட்டி’ (World records university) எனக்கு டாக்டர் பட்டம் கொடுத்துச்சு.  என் அறுபது வயசுக்குள்ள 100 போட்டிகள்ல ஓடி முடிக்கணும்னு இலக்கு வெச்சுக்கிட்டேன். இதுவரை, 75 மாரத்தான் போட்டிகள்ல ஓடிப் பதக்கங்கள் வாங்கியிருக்கேன். 50 வயசுக்கு மேல இருக்குற ஒருத்தர், இத்தனை மாரத்தான் போட்டிகள்ல கலந்துகிட்டு ஓடுறதை கௌரவிக்கத்தான் இந்த விருதுகள் எல்லாம்.

நான் காலைல 5 மணிக்கு மேல தூங்கி ஒரு 28 வருஷம் இருக்கும். எந்த வெளிநாட்டுல, வெளி மாநிலத்துல, வெளியூர்ல இருந்தாலும் 5 மணிக்கு எழுந்து நடக்கத் தொடங்கி விடுவேன். ஒருவேளை அதிகாலைல வெளியூர்களுக்கு போறதா இருந்தா செங்கல்பட்டு / பூந்தமல்லி தாண்டினதும் வண்டிய விட்டு இறங்கி 10 கி.மீ ஓடிடுவேன், வண்டி பின்னாடியே வரும். அப்புறம் ரோடு ஓரத்துல கிணறு, பம்புசெட் இருந்தா அங்கேயே குளிச்சிட்டு டிரெஸ் சேஞ்ச் பண்ணிக்குவேன். அப்படி எதும் இல்லன்னா, பக்கத்துல இருக்க ஹோட்டல்ல போய் ஃப்ரெஷ் ஆகிடுவேன். ஏதாச்சும் போட்டிக்குப் போறதுக்கு முன்னாடி வழக்கமா தினமும் செய்யும் உடற்பயிற்சிகளை மட்டும்தான் செஞ்சிட்டுப் போவேன்.

சாப்பாட்டு விஷயத்துல எந்தக் கட்டுப்பாடும் வெச்சுக்கறதில்லை. மீனையும் சிக்கனையும்தான் அதிகமா விரும்பிச் சாப்பிடுவேன். வாரத்துல ரெண்டு, மூணு நாள் பழையசோறு கூட சாப்பிடுவேன். பொதுவா சர்க்கரை நோயாளிகள் பழையசோறு சாப்பிடக் கூடாதுன்னு சொல்லுவாங்க. ஆனா நான் அதைப் பத்திக் கவலைப்படுறது இல்லை. எல்லா வகை பழச்சாறுகளையும் குடிப்பேன். இனிப்பு சாப்பிடுவேன். விருப்பப்படுவதையெல்லாம் சாப்பிடுறேன். ஆனாலும், என்னோட சர்க்கரை அளவு கன்ட்ரோல்லதான் இருக்கு.”

இதுக்கிடையிலே மாசத்துல குறைஞ்சது ரெண்டு படமாவது தியேட்டர்ல போய் பார்த்துடுவேன். நான் சிவாஜி ரசிகன். சமூகக் கண்ணோட்டத்தோட வர்ற படங்களை யார் நடிச்சிருந்தாலும் பார்ப்பேன். நெறயா புத்தகங்களும் படிப்பேன்.” என்றவரிடம் மறக்க முடியாத நிகழ்ச்சி ஏதாவது ஒன்றை சொல்லுங்க? -ன்னு கேட்ட போது, ஒவ்வொரு ஊர்ல ஓடும் போதும், நீங்க தான் இன்ஸ்பிரேஷன்னு ஒரு 10 பேராச்சும் சொல்லுவாங்க. ஒரு முறை புனேவில் பவ்தான் மலையில் கிறிஸ்துமஸ் மாரத்தானில் கலந்து கொண்டிருந்தேன். அப்போ என்ன மாதிரியே ஒரு பெரியவரும் ஓடிட்டு இருந்தாரு. அவருக்கிட்ட பேச்சுக் கொடுத்தப்போ, மும்பைல இருந்து வந்திருக்கறதாகவும், ஒன்றரை ஆண்டில் 60 வயசாகப் போகுதுன்னு சொன்னாரு. உங்களுக்கு என்ன லட்சியம்ன்னு அவர் கிட்ட கேட்டேன். இதுவரைக்கும் 48 மாரத்தான் ஓடியிருக்கேன். 10 வருஷமா ஓடிட்டு இருக்கேன். 60 வயசுல 60 மாரத்தான் முடிக்கணுன்னு சொன்னாரு. ஏன் இந்த இலக்குன்னு கேட்டேன், சென்னைல சுப்பிரமணியன்னு ஒருத்தர் 5 வருஷத்துல 100 மாரத்தான் ஓடியிருக்காரு. அவர் தான் இன்ஸ்பிரேஷன்னு சொன்னாரு. அப்புறம் நான்தான் அந்த சுப்பிரமணியன்னு அறிமுகப்படுத்திக்கிட்டேன். பிறகு 2,3 மாரத்தான்ல அவரைப் பாத்தேன். மொழி கடந்து மானசீகமா அவர் என்ன நினைச்சிருந்தது, எனக்கு ஊக்கமா இருந்துச்சு.” என்றார்.

அடிக்கடி மா.சு. தன் நண்பர்களுக்கு சொல்லும் செய்தி :
பெரும்பாலானவர்களின் உடல்நலப் பிரச்னைகளுக்குக் காரணம், மன அழுத்தம்தான். அதனாலே இன்றைய காலகட்டத்தில் எல்லா வயதினருக்கும், எல்லா தரப்பினருக்கும் அவசியமானது உடற்பயிற்சி. வெகுவாக மாறிய வாழ்க்கை முறைகளால் சிறு வயதிலேயே பல்வேறு நோய்களுக்கும் ஆளாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. மூச்சுப் பயிற்சியை விடாம செய்யுங்க. ஏன்னா இதுக்கு தனியா எந்த இடமும் தேவைப்படாது. கார்ல போகும் போது, சும்மா உட்கார்ந்திருக்கும் போதும், காலை மாலை இரு வேளையும் தொடர்ந்து செய்யலாம்.

என்று உடல் நலம் சார்ந்தே அனுதினமும் இயங்கிக் கொண்டிருக்கும் மா. சுப்பிரமணியன் அவர்களுக்குப் பொருத்தமாகவே, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை கொடுக்கப்பட்டு உள்ளது.

– செந்தில் குமார்

Follow Thiru. Ma. Subramanian on Twitter

In the picture: Thiru. M.  Subramanian, Minister for Health and Family Welfare, Tamil Nadu in a marathon race.

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

Subscribe to our latest news