Latest Posts

சிந்தனையில் தெளிவு எப்போது இருக்கும்?

- Advertisement -

ஏன் தன்னைப் பற்றிய அலசல், தெளிந்த அறிவு தேவை? நமது மகிழ்ச்சிக்கும், முன்னேற்றத்துக்கும் அடிப்படையாக அமைவதே தன்னை அறிதல்தான்.

உங்கள் திறமைகள் என்ன? எண்ணிப் பாருங்கள். சிலர் தங்கள் குறைகளைப் பற்றியே அதிகம் சிந்திப்பார்கள். ஆனால், அதற்கு மாறாக எனக்குத் தன்னம்பிக்கை உண்டு; என்னால் நன்கு செயல்பட முடியும்; நான் நிறைய திறமைகள் உள்ளவன் என்று அடிக்கடி எண்ணுவது ஒரு நல்ல பழக்கம்.

குறிக்கோள் இருக்கிறதா? உங்கள் குறிக்கோள் என்ன என்பதில் தெளிவாக இருக்கிறீர்களா? பலரிடம் இந்த கேள்வியைக் கேட்கும்போது விடை சொல்ல திணறுவதைப் பார்க்க முடியும். நான் பெரிய ஆள் ஆக வேண்டும் என்று பொதுவாகச் சொல்வார்கள். நான் பெரிய ஆள் ஆக வேண்டும் என்றால் எதில் பெரிய ஆள் என்பதில் தெளிவு இருக்க வேண்டும். தெளிவான குறிக்கோள்களை அமைத்துக் கொண்ட பின், இக்குறிக்கோள்களை அடைய நம்மிடம் திறமை இருக்கிறதா, நம்மிடம் உள்ள குறைகள் இக்குறிக்கோள்களை அடைய தடையாக இருக்குமா, நம்முடைய குடும்பத்திடம் இருந்து எந்த ஆளவுக்கு உதவிகள் கிடைக்கும் என்றெல்லாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். அதற்கேற்ப முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

மன எழுச்சி உங்களிடம் என்னென்ன மன எழுச்சிகள், குறிப்பாக எதிர்மறை மன எழுச்சிகள் ஆதிக்கம் செலுத்துகின்றனவா? எடுத்துக்காட்டாக சிலருக்கு எதற்கெடுத்தாலும் கோபம் வரும். பதட்டம், தவிப்பு, பொறாமை வரும். இதைப் போன்ற மன எழுச்சிகள் எப்போது, எந்த அளவு என்று எண்ணிப் பார்ப்பது மிகத்தேவை. மன எழுச்சி வருவதே தவறு என்று சொல்ல முடியாது. அதை எப்படி வெளிக்காட்டுகிறோம் என்பதில்தான் நமது திறமை இருக்கிறது. மன எழுச்சிகளை நெறிப்படுத்தி நேர்மறையான மன எழுச்சிகளை உரிய வகையில் வெளிப்படுத்துவதுதான் ஆளுமை வளர்ச்சிக்கு அடையாளம். மன எழுச்சிகளின் தாக்கம் இல்லாமல் சிந்திக்கும்போதுதான் சிந்தனையில் தெளிவு இருக்கும்.

சரியான மனப்பான்மை எல்லா மதங்களில் உள்ளவர்களிலும் எல்லா விதமான குணங்களும் உள்ளவர்கள் இருக்கிறார்கள். மத நம்பிக்கை இல்லாதவர்களும் இருக்கிறார்கள். ஜாதி மனநிலை உள்ளவர்களும் இருக்கிறார்கள். ஜாதிகள் ஒழிய வேண்டும் என்று எண்ணுபவர்களும் இருக்கிறார்கள். ஒரு ஜாதியில் பிறந்து விட்டதாலேயே நான் உயர்ந்தவன் என்று எண்ணும் மனப்போக்கு உள்ளவர்களை, குறிப்பாக பிராமணர்களிடம் இருப்பதைப் பார்க்க முடிகிறது. முற்போக்காக சிந்திக்கும் பிராமணர்கள் இந்த மனநிலையில் இருந்து மாறுபட்டு இருப்பதைப் பார்க்க முடியும். ஒடுக்கப்பட்ட ஜாதியினரிடேயே தாழ்வு மனப்பான்மை இருப்பதைப் பார்க்க முடியும். உயர்வு மனப்பான்மையும் தவறு; தாழ்வு மனப்பான்மையும் தவறு. பெரியார், அம்பேத்கர் சிந்தனைகளைப் படித்தால் இந்த மனச் சிக்கலில் இருந்து விடுபட்டு விடலாம்.

சரியான சிந்தனை தெளிவான, ஆக்கப்பூர்வமான, தர்க்கரீதியான சிந்தனை இருப்பவரால்தான் சரியான முடிவுகளை எடுக்க முடியும். ஒரு மனிதரின் தவறான முடிவால் அவரது குடும்பமும், ஒரு நாட்டுத் தலைவரின் தவறான முடிவால் அந்த நாடும் துன்புறுவதை நாளும் காண்கிறோம்.

– சோஃபியா

 

 

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

Subscribe to our latest news