Latest Posts

அதிக வட்டி தருவதாகச் சொன்னவர்கள் அனைவரும் ஏமாற்றவே செய்து இருக்கிறார்கள். இவர்களை ஒரு போதும் நம்பாதீர்கள்!

- Advertisement -
பத்து ஆண்டுகளுக்கு முன்பு ஐந்து சதவீதம் பிரதி மாதம் தருகிறேன் என்று சொல்லி இரண்டு கோடிக்கும் மேல் பல நண்பர்களிடம் முதலீடாக வாங்கி, லீமென் பிரதர்ஸ் திவாலான நேரத்தில் முதலிட்டிருந்த மொத்த பணத்தையும் இழந்து, இதை எப்படி சமாளிப்பது என்று தெரியாமல், முதலீட்டாளர்களை எதிர்கொள்ள பயந்து, தாராசுரம் அருகே ரயில்வே தண்டவாளத்தில் தலைவைத்து மடிந்தான் பங்குவர்த்தகத்தில் என்னுடன் வேலை செய்த என் நண்பன் ஒருவன்.
அண்மையில் இதே போல ஒரு லட்சம் முதலீட்டுக்கு பிரதிமாதம் பத்தாயிரம் மதிப்புள்ள தங்கக் காசு தருவதாகச் சொல்லி, சில பல கோடிகளை முதலீடாகப் பெற்று, ஒரு கட்டத்தில் லாபம் தர முடியாமல், தலைமறைவான நபரை அறிவேன். இவரிடம் என் உறவினர்களே முதலீடு செய்திருப்பதை பின்னாளில் அறிந்து அதிர்ந்தேன்.
இங்கே முகநூல் நண்பர் ஒருவரும் இதே போல லட்சத்திற்கு ஏழாயிரம் மாதாமாதம் தருவதாக என்னிடமே சொன்னார்.
‘வாய்ப்பே இல்லீங் சார்’ என்றேன்.
‘இல்ல.. கரெக்டா கொடுத்திட்டிருக்கோம். டெக்னிக்ஸ் இருக்கு.. கொடுக்கிற ஏழே கம்மி, இன்வெஸ்ட்மெண்ட் ஜாஸ்தி இருந்தா பத்து பர்சண்ட் கூட கொடுக்க முடியும்’ என்றார்.
எந்த இரட்டை அர்த்தமும் இல்லாமல் ‘நல்லா பண்ணுங்க சார்’ என்றேன்.
இந்த தினுசில் ஷேர் மார்க்கெட்டில், கமாடிட்டி மார்க்கெட்டில், கரன்ஸி மார்க்கெட்டில், எந்த விதமான டிரேடிங் தளத்தில் returns தருவதாகச் சொன்னால் அது பொய்யே. அதை நம்பாதீர்கள்.
இப்படிச் செய்பவர்கள் இரண்டு வகையானவர்கள்.
1. உண்மையிலேயே டிரேடிங்கில் இந்த அளவு ரிட்டர்னை எடுக்க முடியும் என்று நம்புபவர்கள்.
2. எடுக்க முடியாது, ஆனால் கணிசமாக பணம் சேர்ந்தவுடன் எங்காவது தப்பித்துவிடலாம் என்று முன் கூட்டியே திட்டமிட்டு வசூல் செய்பவர்கள்.
இரண்டாவது வகையினர் மிகப் பெரிய அளவில் இந்த பிஸினஸை pitch செய்வார்கள். மிகுந்த வெளிப்படையாக இல்லாவிட்டாலும் closed marketingல் தீவிரமாக ஈடுபடுவார்கள். உள்ளரங்க கூட்டம், நெட்வொர்க்கிங் செய்வார்கள்.
ஊரில் ஒரு பெரிய கை இருந்தால், நாலைந்து பேராக சேர்ந்து காரில் வந்து இறங்கி அவரை கேன்வாஸ் செய்வார்கள். இவர்களின் தோரணையைப் பார்த்தே கேள்வி கேட்காமல் முதலீடு செய்பவர்கள் உண்டு. என் மைத்துனரின் நண்பர் ஒருவர்.. இப்படியான ஒரு பந்தா பார்ட்டியிடம் முதலில் இரண்டு லட்சம் முதலீடு செய்து மூன்று மாதம் லாபம் சரியாக கணக்கில் சேர்ந்த உடனேயே.. நாலாவது மாதம் முப்பது லட்சத்தை அவரிடம் முதலீடு செய்திருக்கிறார்.
அடுத்த இரண்டு மாதங்களில் ஆள் ஓடிவிட்டார். நண்பருக்கு பைத்தியம் பிடிக்காத குறை. எவ்வளவு பெரிய ஏமாற்றம். வலி. துயரம். அதை முதலிட்டு இழந்தால் தான் உணரமுடியும்.
முதல் வகையினருக்கு நாளடைவில் அப்படியொன்றும் இந்தத் தொழிலில் சொல்லி வைத்து எடுக்க முடியாது என்று நிஜம் சுட ஆரம்பிக்கும். எப்படித் தப்பிப்பது என்று குழம்புவார்கள். இந்தச் சுழலில் இருந்து எப்படியாவது தப்பிவிட மாட்டோமோ என்று ஏங்குவார்கள், அதன் பொருட்டு மேலும் கூட அவர்கள் முதலீட்டை வாங்கி இழப்பை சரிகட்ட முயற்சி செய்வார்கள். திரும்பவும் அதளபாதாளத்தில் விழுவார்கள். தீர்க்கமுடியாத பிரச்சனை இல்லை, மீண்டு விடலாம் என்று திடமனதுடன் போராடுபவர்கள் மீள்வார்கள். அப்படியும் முதலீட்டாளர்கள் அடைந்த நஷ்டம் நஷ்டம் தான். அதை ரெகவரி செய்வது கிட்டத்தட்ட வாய்ப்பே இல்லை. நின்று போராட முடியாதவர்கள் அவமானம், மன அழுத்தம் தாங்க முடியாமல் தற்கொலை வரை சென்றுவிடுவார்கள். நானறிய பலர் மடிந்திருக்கின்றனர்.
முதல் பாராவில் ரயில் சக்கரத்தில் இறந்த என் நண்பனிடம் முதலீடு செய்ந்திருந்தவர் ”இப்படி செய்வான்னு தெரிஞ்சிருந்தா.. நான் பணத்தை திருப்பி கேட்டிருக்க மாட்டேனே..’ என்று உளமார அழுதார். ஆனால் யாரும் இறந்த பின் தான் இரங்குவார்கள்.
பங்கு வர்த்தகத்தில் ஆதாரமாக தெரிந்து கொள்ள வேண்டிய சில விஷயங்கள் இருக்கின்றன.
1. சொல்லி வைத்து இதில் லாபம் எடுக்கவேஏஏஏஏ முடியாது.
2. மருத்துவருக்கும் மாரடைப்பு வருவது போல, திருப்பதி பெருமாளே வந்து டிரேட் செய்தாலும் நஷ்டம் வரும்.
3. கற்றுக் கொள்ளாமல் இதைச் செய்யக் கூடாது. எனக்கு நேரமில்லை.. நீ பண்ணிக் கொடு என்று யாரிடமும் பணத்தைக் கொடுக்காதீர்கள். if u cant learn u cant earn.
4. அடுத்த முறை உங்களை யாராவது assured returns சொல்லி அணுகினால் இந்தப் பதிவு தான் உங்களுக்கு ஞாபகம் வர வேண்டும்.
‘பல பேர் அப்படி இருக்கலாம்… ஆனா நாங்க அப்படி இல்லை..’ என்று கடவுளே வந்து சொன்னாலும் நம்பாதீர்கள்.
முறையாக கற்றுக் கொண்டு, அசாத்தியமான ஒழுங்குடன், சிறிய சிறிய லாபமாக எடுத்து, பெரிய அளவில் செட்டில் ஆன நண்பர்களையும், நபர்களையும் தெரியும்.
ஒரு வெற்றிகரமான டிரேடரை பணம் உருவாக்குவதில்லை, காலம்!
– அசோக்ராஜ்
- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

Subscribe to our latest news