Latest Posts

சிக்கல்கள் மேல் சிக்கல்கள். சமாளிப்பது எப்படி?

- Advertisement -

பொதுவாக வாழ்க்கையில் அடிக்கடி சிக்கல்கள் தோன்றும், சிக்கல் (பிரச்சனை) வருகின்ற பொழுது நாம் அதிர்ச்சிக்கு உள்ளாகின்றோம். “இதனால் என்ன பாதக விளைவுகள் ஏற்படுமோ! என்ற அச்சம் வருகின்றது. அதனால் மனக் கலக்கமும், கவலையும் ஏற்படுகின்றன. நம்மால் இயல்பாகப் பணி செய்ய முடிவதில்லை.

சிக்கல் வருவது இயல்பான ஒன்று. வாழ்க்கை நடப்பதன் அறிகுறியே அதில் தோன்றுகின்ற சிக்கல்கள்தான். இந்த அடிப்படைத் தெளிவு ஏற்பட்டு விட்டாலே, சிக்கலைப் பார்த்து அதிர்ச்சியோ கவலையோ ஏற்படாது.

எடுத்துக் காட்டாக, 2016-ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி நமது தலைமை அமைச்சர், ஆயிரம், ஐநூறு ரூபாய் பணத்தாள்கள் செல்லாது என அறிவித்ததைக் கூறலாம். ஆயிரம், ஐநூறு ரூபாய் நோட்டுகள் வைத்து இருந்தவர்கள் மக்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்தார்கள். இந்தக் காகிதப் பணத்தை நிறைய வைத்திருந்தவர்களுக்கு பெரும் அதிர்ச்சி என்றால் ஒன்றிரண்டு தாள்கள் வைத்திருந்தவர்கள் கூட அதுதான் அவர்கள் கையிருப்பு என்றால் அதற்கேற்ற அதிர்ச்சிக்கு ஆளாகி இருப்பார்கள். பொறுமையாக செய்தியைக் கேட்டவர்களுக்கு கையிருப்புப் பணத்தை வங்கியின் மூலம் மாற்ற வழி இருப்பது தெரிந்திருக்கும். சிக்கலின் அளவைப் பற்றிய அச்சம் குறைந்திருக்கும். ஆனால் அத்தோடு சிக்கல் தீரவில்லை.

பணத்தை புதிய இரண்டாயிரம், ஐநூறாக மாற்ற வேண்டும். இதற்காக வங்கிகளுக்குச் செல்ல வேண்டும். காத்திருக்க வேண்டும். அவற்றை மாற்ற வேண்டும். அல்லது கணக்கில் சேர்ப்பிக்க வேண்டும். இது ஒரு எதிர்பாராத சிக்கல். தொடர் நடவடிக்கையாக மேலும் சிக்கல்களைச் சந்திக்க நேரலாம். பொதுவாக, சிந்தித்துச் செயல்பட்டால், தெளிவு, ஏற்படும்; சிக்கலைத் தீர்க்கலாம். இந்த நம்பிக்கை வேண்டும்.

எடுத்துக் காட்டாக ஒரு தொழில் முனைவோராக இருப்பவர்களுக்க எப்படி சிக்கல்கள் வரக்கூடும்?

முதலாவது, நடைமுறைச் சிக்கல்கள். தொழிலை நடத்துவதற்கு மூலதனம், உழைப்பு, மூலப் பொருட்கள், மின்சாரம் போன்றவை வேண்டிய அளவிற்குத் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்க வேண்டும். இவற்றில் ஏதாவது ஒன்று தேவைக்கு ஏற்ப கிடைக்காமல் போய் விட்டால் சிக்கல் தோன்றும்.

அடுத்தது, இயற்கையின் நிகழ்வுகளால் ஏற்படக் கூடியவை. அரசியல் காரணங்களுக்காக கடையடைப்புகள், சாலை மறியல் போன்ற போராட்டங்களை சந்திக்க நேரலாம். 

Also read:நம்மிடம் உள்ள மாபெரும் குறையான இதில் இருந்து மீண்டு வருவது எப்படி?

அரசின் கொள்கை மாற்றங்களினால், ஜிஎஸ்டி போன்ற புதிய வரி விதிப்பு அறிவிப்புகளினால் கணக்குகள் வைத்துக் கொள்வதில் சிக்கல்கள் ஏற்படலாம்.

முற்றிலும் எதிர்பார்க்காத நிலையில் வாணிய தொழில் சூழல் மாறலாம். ஒரு நிறுவனத்தை முக்கிய பங்கேற்று நடக்கிக் கொண்டிருந்தவர் தொழிலை விட்டுப் போகலாம். சாலையை விரிவாக்கம் செய்வதாகக் தமது கட்டிடத்தை இடிக்கலாம். இடம் மாற்ற வேண்டிய நெருக்கடி வரலாம். இப்போது கொரோனா நெருக்கடியைச் சொல்லலாம்.

இப்படி எல்லா பிரிவுகளிலும் வாழ்க்கை நடத்திக் கொண்டு இருப்பவர்களுக்கு சிக்கல்கள் எப்படியும் எந்த நிலையிலும் எந்த வடிவத்திலும் வரலாம். பொதுவாக, ஒரு தீயணைப்புப் படையில் பணி செய்கின்ற வீரன் எங்கும் எப்பொழுதும் தீப்பிடிக்கலாம் என்ற முன் எச்சரிக்கையோடு காத்திருப்பதைப் போன்று அனைவரும் இருப்பதும், செயல்படுவதும் தேவையாகும்.

தீர்வு எங்கே? எங்காவது ஒரு சிக்கல் தோன்றுமானால், உறுதியாக அந்தச் சிக்கலுக்குத் தீர்வு உண்டென்ற நம்பிக்கையோடு சிக்கலை அணுக வேண்டும். முதலில் மனத்தின் சமநிலையை இழக்கக் கூடாது, ஆத்திரமோ கோபமோ படக்கூடாது.

ஏற்பட்டு இருக்கும் சிக்கலின் இயல்பைப் பகுத்தாய்ந்து பார்க்க வேண்டும். சிக்கலும் ஒரு நோய்தான். மருத்துவர் மன நிலையோடு அதனை அணுக வேண்டும். வள்ளுவர்,

‘நோய்நாடி நோய்முதல் நாடி அது தணிக்கும்                              வாய்நாடி வாய்ப்பச் செயல்’

என்கின்றார்.

அதாவது, முதலில் என்ன நோய், அதன் இயல்பு ஆகியவற்றை கவனிக்க வேண்டும். அடுத்து அந்த நோய்க்கான மூலகாரணத்தை ஆராய்ந்து அறிய வேண்டும். பின்பு அதனை எப்படி போக்குவது என்பதற்கான தீர்க்கும் வழிமுறைகளைத் தேர்ந்து தெளிய வேண்டும். அதனைத் தொடர்ந்து அதனைத் தீர்கக வேண்டிய மருத்துவத்தை, செயல்பாட்டு நடைமுறைகளை மேற்கொள்ள வேண்டும். 

Also read:பத்தில் ஒன்று – வெற்றியை நோக்கியே உங்கள் பார்வை இருக்கட்டும்

சிக்கல்களின் இயல்பை அறிந்து, அவற்றைத் தீர்க்க நடவடிக்கை எடுக்கலாம். அதற்குக் காலம் தேவைப்படலாம். ஒரு சிக்கலுக்கு ஒரு தீர்வுதான் இருக்குமென்று கூற முடியாது. ஒரு சிக்கலுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட தீர்வுகள் இருக்கலாம். அவற்றில் நமக்கு எது ஏற்ற தீர்வு என்பதை கண்டறிய வேண்டும்.

“தேடுங்கள் கண்டடைவீர்கள்”, என்பது வேத நூலில் இருக்கும் ஒரு வாக்கியம். தீர்வும் அப்படித்தான். தேடினால் கிடைக்கும். நமது அறிவு, தீர்வைத் தேடப் டான் பட வேண்டும். இதற்கு நூலறிவு மட்டும் போதாது, பட்டறிவும் வேண்டும். தீர்வுகளைத் தேடுவதற்கு தக்கவர்களின் துணையை நாடலாம். சிக்கல் எந்தத் துறை சார்ந்தது என்று கண்டு கொண்டால் அந்தத் துறை சார்பான வல்லுநர்களைச் கண்டறிந்து, அவர்களிடம் சிக்கல்களைக் கூறி தெளிவும், தேர்வும் பெறலாம்.

சிக்கல்களுக்குத் தேர்வைத் தேடும் பொழுது பொறுமை வேண்டும். உடனடியாகத் தீர்வு கிடைத்து விடும் என்று கூற முடியாது. தொடர் முயற்சி வேண்டும்.

வாழ்க்கை ஒரு போர்க்களம்.  இங்கு நடைபெறும் போரில் வெளிப்படையான கருவிகளைப் பயன்படுத்த மாட்டோம். இங்கு அறிவு என்ற கருவியைத்தான் மிகுந்த ஆற்றலோடு பயன்படுத்த வேண்டும்.  “நம்மால் முடியும்” என்ற தளராத நம்பிக்கையோடு முயல வேண்டும். “வருவதை எதிர்கொள்வோம், தொடங்கிய பயணத்தைத் தொடர்வோம்”. என்று செயல்படுபவன் தான் வெற்றியை அடைவான்.

– டாக்டர் மா. பா. குருசாமி

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

Subscribe to our latest news