எந்தவொரு உற்பத்தியில் ஈடுபடும் தொழிற்சாலையும் தொழிலாளர்கள், எந்திரங்களைக் கொண்ட அடித்தளத்தை நன்றாக அமைக்காத பட்சத்தில் அதன்மேல் கட்டப்படும் எந்தவொரு விரிவாக்கமும் சிறப்பாக இயங்க இயலாது. தொழிலாளர்கள், எந்திரங்கள், செய்முறைகளைக் கொண்ட இந்த அடித்தளப் பணியைச் சார்ந்து தான் உற்பத்தித் பொருள்களின் ‘தரம்’ (Quality Circle) அமைந்திருக்கிறது. இந்தத் தரத்திற்கான முழுப் பொறுப்பையும் அடித்தளமே ஏற்கச் செய்கின்றது ஜென்பா.
ஜப்பானியர்களின் வளர்ச்சிக்கு அடிப்படையான பல்வேறு உத்திகளில் முதன்மையானவற்றில் இதுவும் ஒன்றாகும்.
‘ஜென்பா’ என்ற ஜப்பானியச் சொல்லுக்கு ‘அசல் இடம்’ என்று பொருள்படும். சந்தையில் கோலாச்சும் நிறுவனம் முதல், எந்த நிறுவனமாக இருந்தாலும் அந்தப் பொருளை உற்பத்தி செய்யக்கூடிய உண்மையான இடமாகும். சாதாரண இரும்பாகவோ, காப்பராகவோ, அலுமினியமாகவோ இருக்கக் கூடிய ஒன்றை எந்திரங்களாக, கருவிகளாக மின்சாரம் கடத்தும் ஒயர்களாக மதிப்பூட்டப்பட்டு சந்தைக்கு, சமூகத்திற்கு அனுப்பும் உண்மையான உற்பத்தி இடமாகும். இதையே ஜப்பானிய மொழியில் ‘ஜென்பா’ என்பர்.
கான்ரி (Kanri) என்பது நிர்வகித்தல் அல்லது மேலாண்மை செய்தல் என்று பொருள்படும். அதாவது ஜென்பா கான்ரி என்பதற்கு உற்பத்தியாகக் கூடிய உண்மையான இடத்தை, பணிமனையை (workshop) மேலாண்மை செய்தல் என்று பொருள்படும்.
ஜென்பா கான்ரியின் செயல்முறை
ஜென்பா கான்ரி – உற்பத்திக்கான செய்முறைகளை (Production Operations) மேலாண்மை செய்வதற்கும், உற்பத்தியை விரைவாக முடித்துக் கொடுத்தலை நடைமுறைப்படுத்துவதுமாகும். ஜென்பா கான்ரி மேலாண்மை நுட்பம் என்ற வகையில் என்ற வகையில் ஐந்து அம்சங்களை நிர்வகிக்கிறது. (இதை ஆங்கிலத்தில்Five ‘M’ என்பர்) 1.மனித ஆற்றல் (Man Power) 2.எந்திரங்கள் (Machines) 3. பொருட்கள் (Materials) 4. செய்முறைகள் (Methods) 5. அளவீடுகள் (Measurements)
இவை ஒவ்வொன்றுக்கும் ஜென்பா கான்ரி ஏராளமான நெறிமுறைகளைக் (Standard) கொடுக்கிறது.
எதை? எப்படி? எப்பொழுது? யார்? செய்து முடிக்க வேண்டும் என்பதை விளக்குகிறது. ஒவ்வொன்றும் ஒன்றுக்கொன்று துணையாக இருக்கும் வகையில் அமைத்துக் கொடுக்கிறது. ஜென்பா கான்ரி, பிடிசிஏ (PDCA) முறையோடு நெருக்கமாக தொடர்பு கொண்டிருக்கிறது. (திட்டமிடுதல் (Plan)_ செயல்படுத்தல் (Do) _ சோதனையிடல் (Check) _ நடைமுறைப்படுத்துதல் (Action) _என்ற வட்டத்திற்குள் சுழன்று கொண்டிருப்பது தான் பிடிசிஏ).
ஜென்பா கான்ரியை நடைமுறைப்படுத்தத் தொடங்கியவுடன் தரத்தை உயர்த்த என்ன? எப்படி? எதிர்பார்க்கிறோம் என்பதை தெளிவாக வரையறுத்துக் கொள்ள வேண்டும்.
அதை அடைய அறிந்தவற்றில் சிறந்த முறையை கடைப்பிடிக்க வேண்டும். மெட்டீரியல் (சரக்கு) மேலாண்மை சிறந்ததாக இருக்க வேண்டும். இலக்கை அடைவதற்காக கடைபிடிக்கும் நெறிமுறைகள், கட்டுப்பாடுகள் உறுதியானதாக இருக்க வேண்டும். முன்னேற்றுவதற்கான முயற்சியில் தங்களுக்குத் தோன்றும் கருத்துக்களை செயல்படுத்திப் பார்க்க சுதந்திரமாக அனுமதிக்கலாம்.
ஜென்பா கான்ரிக்கான எடுத்துக்காட்டு
பிரிட்டனைச் சேர்ந்த நிறுவனம், ஒன்று, நீர்ம கட்டுப்பாட்டு மெக்கானிசம் (Fluid Control Machanism) ஒன்றைத் தயாரித்து சந்தைப்படுத்தி வருகிறது. வெற்றிகரமாக சந்தைப்படுத்தி வளர்ந்து கொண்டிருக்கும் சூழலில், உள்நாட்டுப் போட்டியாளர்கள் வெளிநாடுகளில் இருந்து குறைந்த விலையில் இறக்குமதி செய்து விற்பனை செய்து வந்தனர்.
இதனால் குறிப்பிட்ட அந்த நிறுவனம் இந்தப் போட்டியை சமாளிக்கும் வகையில் தயாராக வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகியது. இதற்காக எதைச் செய்வது? என்ன மாற்றத்தை ஏற்படுத்துவது? என்ற ஆராய்ச்சியில் இறங்கியது.
ஜென்பா கான்ரியின் ஐந்து ‘எம்’ களிலும் ஆராய்ந்தனர். பணிமனையின் அமைப்பு, உற்பத்திக்கான செய்முறை, இவற்றில் மாற்றம் ஏற்படுத்துவதற்கான வழிகள் கவனத்தில் கொள்ளப்பட்டு ஆராயப்பட்டன. இறுதியாக மெசினிங் மற்றும் அசெம்பிளிங் பகுதிகளின் மீது தங்களின் கவனத்தைக் குவித்தனர்.
எந்திரத்தின் அமைப்பு மற்றும் செய்முறை மாற்றியமைக்கப்பட்டது. அந்த எந்திரத்தை இயக்கும் ஆப்பரேட்டர் அதை இயக்குவதற்காக அந்த எந்திரத்தை சுற்றிச் சுற்றி நடந்து கொண்டிருந்தார். அதுவும் மாற்றியமைக்கப்பட்டு எளிமைப்படுத்தப்பட்டது. விளைவு வியப்படையும் அளவுக்கு தரமான உற்பத்தி கிடைத்தது.
பின்பு, இரண்டு துணைக் குழுக்கள் அமைக்கப்பட்டு பணிமனை முழுவதும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. இறுதியில் அசெம்பிளிங் சிஸ்டத்தை மாற்றியமைக்கும் முடிவுக்கு வந்தனர். இதனால் தரம் உயர்ந்தது. பணிமனைக்கென ஆகிக் கொண்டிருந்த 17 ஆயிரம் டாலர் செலவில், 10 ஆயிரம் டாலர் மிச்சமாகியது. உற்பத்தித் திறனும் 160 விழுக்காடு உயர்ந்தது.
ஜென்பா கான்ரியின் பயன்கள்
தரம், விலை, உற்பத்திக்கான பணிகள் அனைத்தும் முடிக்கப்பட்டு பொருளை அனுப்புவது (Delivery), உற்பத்தித் திறன் இவை குறித்தும், இவற்றை மேம்படுத்துவது குறித்தும் தொழிலாளர்கள் அறிந்து வைத்திருப்பர். தொழிலாளர்களிடம் தங்கள் பணியில் ‘சொந்த வழியில் சிறப்பாகச் செயல்படுவது’ என்ற சிந்தனை மேலோங்கி இருக்கும்.
பணிமனையில் எந்தவொரு மாற்றமும் வளர்ச்சியும் ஏற்படாமல் நிலையாக இருக்குமேயானால் கேள்விக்கு உள்ளாக்கப்படும், உள்ளாக்கப்பட வேண்டும். எந்தவொரு எந்திரமோ, கருவியோ கவனமாக பரிசீலிக்கப்பட்டு, உறுதிப்படுத்தப்படாத நிலையில் பராமரிப்புக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கப்பட மாட்டாது.
நிறுவனத்தின் அடித்தளம் பலத்தோடும், கால ஓட்டத்திற்கேற்ப மாறிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருப்பதோடு, தரமாக, விலை குறைவாக கொடுக்க முடிந்தால்தான் சந்தைப்படுத்துதலில் வெற்றியை சாதிக்க முடியும். இதற்கு துணை நிற்பதும், ஜப்பானியர்கள் உலகச் சந்தையை தாண்டிக் குதிக்க தூண்டுகோலாக இருந்ததுமான ஜென்பா கான்ரி எந்தவொரு நிறுவனத்தின் வளர்ச்சிக்கும் உதவும். தடைகள் அனைத்தும் கண்டறிந்து களையப்பட்டு உயர முடியும்.
– இளம்பூரணன்