”தொழில், வியாபாரம் என எதைத் தொடங்குவதாக இருந்தாலும் முதலில் அதற்கொரு அமைப்பு வேண்டும். தொழிலைத் தொடங்கும் போது அதற்கான முதலீடு மற்றும் அனைத்துத் தேவைகளையும் தனிப்பட்ட ஒருவரே ஏற்பாடு செய்து தொடங்குவது என்பது இன்றைய சூழலுக்கு ஒத்துவராத ஒன்றும் கூட.
குடும்ப வணிகமாக நடத்திக் கொண்டிருந்தாலும் கூட பிள்ளைகள் வளர்ந்தவுடன் அவர்களையும் நிறுவனத்திற்குள் கொண்டு வர விரும்புகிறோம். அல்லது பல பேரிடம் கடன் வாங்குகிறோம். பலருடைய உதவி தேவைப்படுகிறது. இதனால் தொழிலைத் தொடங்கும்போதே கூட்டாண்மை (Partnership) நிறுவனமாகத் (firm) தொடங்குவது, சாதாரணமாக, இயல்பாக நடந்து கொண்டிருக்கிறது. தொழில்முனைவோர்களும் பெரும்பாலும் கூட்டாண்மை நிறுவனமாகத்தான் தொடங்க விரும்புகிறார்கள். கார்ப்பரேட்களாக (Private Limited or Limited) பதிவு செய்து நடத்தலாமே என சிந்திப்பது இல்லை.
கம்பெனிச் சட்டத்தின் கீழ் பதிவு கொண்டால், நிறைய கட்டுப்பாடுகள் இருப்பதாக நினைக்கிறோம். ஆண்டுக்காண்டு கணக்குகளை தணிக்கை செய்ய வேண்டும், கம்பெனித் துறையினருக்கு படிவங்கள் அனுப்ப வேண்டும் போன்ற கட்டுப்பாடுகளைப் பற்றி அதிகப்படியாகக் கவலைப்படுகிறார்கள். ஆனால் கம்பெனியாக நிறுவுவதில் உள்ள நன்மைகள் பற்றி கவனத்தில் கொள்வதில்லை.
பங்கு நிறுவனங்களில் பங்குதாரர்களிடையே வேறுபாடுகள், பிணக்குகள் ஏற்பட்டால் தீர்த்துக் கொள்வது எளிதாக இல்லை. நீதிமன்றம் மூலம்தான் தீர்க்க வேண்டும் என்ற நிலை ஏற்பட்டால் அந்த வியாபாரத்தை நடத்த முடியாது. நீதிமன்றம் மூலம் தீர்க்க வேண்டுமானால் இடைக்காலத்தில் ரிசீவர் (Receiver) ஏற்படுத்த வேண்டும் என்பது முக்கிய கோரிக்கையாக இருக்கும். எந்தவொரு கூட்டாண்மை நிறுவனத்தையும் ஒரு நோட்டீஸ் மூலம் உடைத்து விட (dissolution) முடியும். இதனால் உடனடியாக கூட்டாளிகள் நிறுவனம் கலைக்கப்படுகிறது. பிறகு வியாபாரத்தை எப்படி தொடர்வது? என்பதே பெரிய சிக்கலாகி விடும்.
பல பங்குதாரர் இருக்கும் நிறுவனம் ஒன்றில் ஒரு பங்குதாரருக்கு வேறுபட்ட கருத்துத் தோன்றிவிட்டால் அந்தக் கூட்டாளிகள் நிறுவனத்தைக் கலைக்க முயல்வர். அப்படி நடந்தால் கடன் கொடுத்தவர்கள் உடனே திருப்பிக் கேட்பார்கள். இதனால் அந்த நிறுவனத்தை நடத்த முடியாமல் நொடித்துப் போவதற்குக் கூட வாய்ப்புகள் இருக்கின்றன.
இதே சமயம் பிரைவேட் லிமிடெட் அல்லது லிமிடெட் பங்குநர்களிடையே மனவேறுபாடுகள் ஏற்பட்டால் கம்பெனிச் சட்டத்தின் மூலம் தீர்வு காண முடியும். முரண்பாடுள்ள பங்குநர் கம்பெனி சட்ட அலுவலர்கள் மூலம் தனது குறைகளை எடுத்துக் கூறினால், அதற்கான தீர்வைக் காணலாம்.
வங்கிகள் பெரும்பாலும் கம்பெனிகளுக்கு கடன் கொடுப்பதையே விரும்புகின்றன. அதிகப்படியான கடன் கொடுக்க வேண்டும் என்ற நிலை வந்தால் கூட்டு நிறுவனங்களை கம்பெனியாக மாற்ற வேண்டிய கட்டுப்பாட்டை (Conditions) விதிக்கின்றன.
மேலும் தவிர்க்க முடியாத சில காரணங்களால் தொழிலில் நட்டம் ஏற்படும் போது, கடனைத் திருப்பி தர இயலாமல் போகலாம். அந்தத் தொழிலின் உரிமையாளராகவோ அல்லது அவர் கூட்டாண்மை நிறுவனத்தில் (firm)பங்குதாரராகவோ இருந்தால் நொடித்துப் போய்விடுகிறார். திவால் (இன்சால் வென்ட்) ஆகிறார். ஆனால் கம்பெனியின் பங்குநராக இருப்பின், கம்பெனி கடன்களுக்கு அவர் உறுதி (கேரண்டி) அளித்து இருந்தால் மட்டுமே தனிப்பட்ட முறையில் அவரைப் பாதிக்கும். மற்றபடி பாதிப்பில்லை. இந்த நிலையை வரையறுக்கப்பபட்ட பொறுப்பு (Limited Liability) என்பர், இது கம்பெனிகளுக்குக் கிடைப்பது முக்கிய நன்மையாகும்.
இந்த கம்பெனிச் சட்ட நடைமுறைதான் மேல்நாட்டு பொருளாதார வளர்ச்சிக்கு பேருதவி செய்ததாக பொருளியல் வல்லுநர்கள் கூறுகின்றனர். ஏனென்றால், வரையறுக்கப்பட்ட பொறுப்பு (Limited Liability) இருப்பதால், தொழிலில் இயற்கையாக உள்ள இடர்ப்பாடுகளை துணிவோடு சந்திக்க முடியும்.
ஆனால், நம் நாட்டில் உள்ள தொழில் அதிபர்கள் நினைப்பது போல் கம்பெனியில் பதிவுச் செய்வதால் வரக்கூடிய கட்டுப்பாடுகள், சட்டத் திட்டங்களை பெரிய தடையாகச் சொல்ல முடியாது.
ஒரு நிறுவனத்தின் உற்பத்தி நுணுக்கமோ, வணிக நுட்பமோ தான் ரகசியமாக இருக்க முடியும். மற்றதை எல்லாம் ரகசியமாக வைத்திருக்க வேண்டியதில்லை. இந்த ரகசியத்தைப் பற்றிய கண்ணோட்டமே இன்றைக்கு மாறி வருகிறது. இதனால் கம்பெனியாக இருப்பதை பெரிய தடையாகவோ, கட்டுப்பாடாகவோ நினைக்க வேண்டியதில்லை.
பிரைவேட் லிமிடெட் அல்லது லிமிடெட் கம்பெனியாக பதிவு செய்ததால், பெரிய நிறுவனங்கள், பெரிய தொழில்கள் நம்நாட்டில் வளர்ந்து உயர்ந்திருப்பதற்கு நிறைய எடுத்துக்காட்டு சொல்ல முடியும். அவர்களுடைய வளர்ச்சிக்கு கம்பெனியாகப் பதிவு செய்தது ஒரு போதும் தடையாக இருந்ததில்லை.
கம்பெனியாக செயல்படுவதிலும் சில சிரமங்கள் இருக்கின்றன. கம்பெனியின் லாபத்திற்கு ஒரு தொழில் அதிபர் வரி கட்டுவதோடு பங்கு ஈவுக்கும் (டிவிடெண்ட்) வரி கட்ட வேண்டும். இதை அதிகப்படியான வரியாக எல்லோரும் கருதுகிறார்கள்.
தணிக்கை (ஆடிட்) செய்வது, ஆண்டுக்காண்டு படிவங்கள் அனுப்புவது, எவ்வளவு கடன் இருக்கிறது, அடமானம் எவ்வளவு இருக்கிறது என்பதைக் கம்பெனித் துறைக்கு கொடுக்க வேண்டி இருப்பதை கடினமாக நினைப்பதை விட தொழிலின், நிறுவனத்தின் உண்மை நிலைமையை அறிந்து கொள்வதற்கும், அடுத்துச் செல்வதற்கான வழியை அவ்வப்போதே தீர்மானித்துக் கொள்வதற்கும் வாய்ப்பாக தொழில் முனைவோர் இதை எடுத்துக் கொள்ள வேண்டும்.
தொழில் செய்யும் பல பேர் கடன் வாங்கிக் கொண்டே செல்கிறார்கள். எவ்வளவு வாங்கினோம், எப்படி திருப்பிக் கொடுக்கப் போகிறோம் என்ற திட்டம் இருக்காது. பணம் நிறைய வந்துக் கொண்டே இருக்கும். கடன் கொடுத்தவர்கள் கேட்கும் வரை எதுவும் தெரியாது.
கடனை திருப்பிச் செலுத்த வேண்டிய நெருக்கடி ஏற்படும் போது, அதை செலுத்த முடியாமல் திவால் (இன்சால்வென்ட்) ஆகி விடுவார்கள். இவை எல்லாம் சாதாரணமாக நடந்து கொண்டு இருக்கிறது. கம்பெனியில் இவ்வாறு நடப்பதற்கான வாய்ப்பு குறைவு. தணிக்கை, ஆண்டறிக்கை, தெளிவாக அவ்வப்போது உண்மை நிலையை எடுத்துச் சொல்லி விடும்.
ஆனால், பெரிய கம்பெனிகள் மூன்று மாதத்திற்கு ஒரு முறை கணக்கு முடித்து கொடுத்தாக வேண்டும். அதை பத்திரிக்கைகளிலும் வெளியிட வேண்டும். இந்தக் கட்டுப்பாடுகளால் அவை எல்லாம் பன்மடங்கு வளர்ச்சி அடைந்திருக்கின்றனவே தவிர ஒரு போதும் தேக்கமடைந்து விடவில்லை.
இப்படிக் கம்பெனியாகப் பதிவு செய்து நிர்வாகத்தை நடத்துவதை தொழில் முறை மேலாண்மை (Professionly Management)யில் நடத்துவதாகும். இதனால் தொழிலுக்கும், நிர்வாகத்திற்கும் அதிகப்படியான நன்மைகளும், வளர்ச்சிகளும் கிடைக்கின்றன. எந்தவொரு தொழிலும் வளர்ச்சி அடையும் போது தனிப்பட்ட ஒருவராக இருந்து தொடங்கும் தொழில் கூட்டுத் தொழிலாகிறது (firm), அது மேலும் விரிவடையும் போது கம்பெனியாக மாற வேண்டும். அது தொடக்கத்தில் பிரைவேட் லிமிடெட் கம்பெனியாக இருக்கும்.
நாளடைவில் அதிக முதலீடு தேவைப்படும் போது பொது நிறுவனமாக (Public Limited Company) மாறுகிறது. இன்னும் விரிவடையும் போது அது லிஸ்டட் கம்பெனியாகிறது. பங்குச் சந்தையில் பங்குநர்கள் அதன் பங்குகளை எளிதாக வாங்குவதற்கும், கொடுப்பதற்கும் வசதியாகிறது. தொழில், வணிகம் இவற்றில் ஈடுபடும் ஒவ்வொரு தொழில் முனைவோரும் இந்த வளர்ச்சியைக் காண முயற்சிக்க வேண்டும். இது காலத்தின் கட்டாயம் மட்டுமல்ல, தொலைநோக்குக் கொண்ட எந்த தொழில் அதிபரும் தமது கொள்கையாகக் கொள்ள வேண்டிய, அவசியமான ஒன்றாகும்”.
– இராஜரத்தினம்.