வீடுகள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு மினரல் வாட்டர் பிளான்ட் அமைத்து தருகிறது, சென்னை அயப்பாக்கத்தில் உள்ள “அக்வா தூய குடிநீர்’ நிறுவனம். இதன் திரு. பூபேசு அவர்களைச் சந்தித்து பேசியபோது,
“”நான் பொறந்து வளர்ந்தது எல்லாமே அம்பத்தூர்தான். அதனால் எந்தப் பக்கம் திரும்பினாலும் ஏதாவது ஒரு தொழில் நம்ம கண்ணுல விழும். நாமும் ஒரு தொழிலைத் தொடங்க வேண்டும் என்கிற ஆசை அதிகரித்துக் கொண்டே இருந்தது. அதற்குள் கல்லூரி படிப்பையும் முடித்துவிட்டேன்.
Also read: ஃப்ரேம் போடும் தொழிலுக்கு இன்னும் வாய்ப்பு இருக்கிறது
மனதிற்குள் பதியம் போட்ட தொழில் ஏராளம். ஆனால், எதை மரமாக்குவது? முதலீடு திரட்டுவது எப்படி? என்ற சிந்தனை பலநாள் தூக்கத்தை கெடுத்தது. முதலில் ஒரு வேலைக்குப் போகலாம் என்று முடிவெடுத்தேன். ஒரு தனியார் வங்கியில் பர்சனல் லோன் சந்தைப்படுத்தும் வாய்ப்பு கிடைத்தது. இரண்டு ஆண்டுகள் செய்தேன்.
அப்போதுதான் மினரல் வாட்டர் தொழில் என் கவனத்தைக் கவர்ந்தது.
மினரல் வாட்டர் பிளான்ட் சிஸ்டம் உற்பத்தி செய்ய மிகப் பெரிய முதலீடு தேவை. முதலீடு இல்லாமல் அந்தத் தொழிலில் ஈடுபடுவது எப்படி? என சிந்தித்தேன். ஒரு பொறி தட்டியது. மினரல் வாட்டர் பிளான்ட் நிறுவனத்திடம் முகவராகி, அந்தப் பொருளை விற்பனை செய்வது என்று முடிவெடுத்தேன்.. 2015- ல் சென்னை, அயப்பாக்கத்தில் ஒரு அலுவலகம் தொடங்கினேன். மதுரை, காரியப்பட்டியில் ‘ஸ்வான் ஆர்.ஓ சிஸ்டம் புரடக்சன்’ நிறுவனத்தின் முகவர் ஆனேன்.
ஸ்வான் ஆர்.ஓ சிஸ்டம் புரடக்சன் நிறுவனம் வீட்டுக்குத் தேவையான ஆர்.ஓ சிஸ்டம் கருவிகளைத் தயாரித்துக் கொடுக்கும் நிறுவனம் ஆகும். அந்தக் கருவிகளில் என்னுடைய நிறுவனத்தின் பெயரை பொறித்துக் கொள்ளலாம் என்று அனுமதித்தார்கள். இந்த ஒப்பந்தம் எனக்கு ஊக்கம் தருவதாகவே அமைந்தது.
தனி ஒருவனாக ஆர். ஓ சிஸ்டம் விற்பனை செய்யும் தொழிலில் இறங்கினேன். ஒரே ஆண்டில் வீட்டுக்குப் பயன்படுத்தக்கூடிய 30 ஆர்.ஓ சிஸ்டம்களை விற்பனை செய்தேன். கூடுதலாக இரண்டு பள்ளிகளுக்கு 250 லிட்டர் மற்றும் 500லிட்டர் ஆர்.ஓ பிளான்ட் அமைத்துக் கொடுத்தேன்.
Also read: முந்திரிப்பருப்பு வாங்கி விற்கலாம்
எந்த ஒரு ஆர்.ஓ சிஸ்டமும் ஒரு ஆண்டு வரை பழுது ஏற்பட வாய்ப்பு இல்லை. அதற்கு பின்பு ஏற்படும் பழுதுகளைச் சீரமைக்க கட்டணம் உண்டு.
வீட்டுக்குப் பயன்படுத்தப்படும் ஆர்.ஓ சிஸ்டம்கள் ரூ.7,500 முதல் ரூ.25,000 வரை விற்பனைக்கு உள்ளன. வாடிக்கையாளரின் வசதிகேற்ப வாங்கிக் கொள்கிறார்கள்.
பள்ளி, கல்லூரிகளுக்கு அமைக்கப்படும் ஆர்.ஓ பிளான்டுக்குத் தேவையான கருவிகளையும் ஸ்வான் ஆர்.ஓ.சிஸ்டம் புரடக்சன் நிறுவனத்திடமே வாங்கிக் கொள்கிறோம். வங்கியில் கடன் சந்தைப்படுத்துதல் பணியின் கிடைத்த மார்க்கெட்டிங் அனுபவம், இந்தத் தொழிலில் நூறு விழுக்காடு பயன்பட்டது. இந்த ஆண்டு நூற்றுக்கும் மேற்பட்ட ஆர்.ஓ சிஸ்டங்களை விற்பனை செய்வோம் என்ற நம்பிக்கை இருக்கிறது”’ என்றார் திரு. பூபேசு. மினரல் வாட்டர் தொடர்பான தொழில் தொடங்க விரும்புகிறவர்கள் இணையத்தில் தேடினால் எண்ணற்ற நிறுவனங்கள் பற்றிய விவரங்கள் உள்ளன.
– தா.மு. குறளமுதன்
Join our list
Subscribe to our mailing list and get interesting stuff and updates to your email inbox.