நாம் அன்றாடம் பயன்படுத்தும் கணினி, தொலைக்காட்சிப் பெட்டி, கைபேசி, குறுந்தகடு, அச்சு மற்றும் இசைப் பதிவு கருவிகள் அனைத்தும் தேய்வு அடைந்து, மேலும் பயன்படுத்த முடியாமல் போனால், அவை வீணாகி மின் கழிவுகள் ஆகின்றன. இவை உலகு எங்கிலும், அதிகரித்து தேங்கிய வண்ணம் உள்ளன. இவற்றை சேகரித்து மொத்தமாக விற்கும் மறுசுழற்சி தொழில் தொடர்ந்த நடந்து வருகிறது. இவற்றில் இருந்து பிளாஸ்டிக் பாகங்களை தனியே பிரித்தும், உலோகப் பகுதிகளை தனியே பிரித்தும் மறுசுழற்சிப் பொருட்கள் கடைகள் (காயலான் கடைகள்) அவர்களுக்கு அடுத்த மொத்த வியாபாரிகளுக்குக் கொடுக்கிறார்கள். மொத்த வியாபாரிகள் அவற்றை லாரிக் கணக்கில் ஆலைகளுக்கு விற்பனை செய்கிறார்கள்.
அமெரிக்காவில் மட்டும் சுமார் 100 மில்லியன் கணினிகள் தூக்கி எறியப்பட்டு, அவற்றில் 20% மட்டுமே மறு சுழற்சிக்குப் பயன்படுகின்றன.
ஒவ்வொரு ஆண்டும் சுமார் 600 மில்லியன் மெட்ரிக் டன் மின் கழிவுகள் பூமியில் குவிகின்றன. பெரும்பாலான மின்கழிவுகள் முறையாக அப்புறப்படுத்தப் படாததாலும், வெட்டவெளியில் சிதறிக் கிடப்பதாலும் பல தீங்குகள் ஏற்படுகின்றன.
கழிவுகளில் இருந்து வெளிவரும் திரவப் பொருள்கள் இயற்கைக்கும், நமக்கும் தீமைகளை ஏற்படுத்துகின்றன. சரியான முறையில் கழிவுகளை பிரித்து எடுக்காமல் விடுவதால், அவற்றில் கலந்து இருக்கும் மறு சுழற்சிக்குப் பயன்படாமல் வீணாகின்றன.
இந்த மின் கழிவுகளை நிர்வகிப்பது தொடர்பான கருத்தரங்கு ஒன்றை மும்பை உலக வர்த்தக மையம் அண்மையில் நடத்தியது. கழிவுகளை கையாளுவது என்பது பெரிய சவாலாகவும், சுமையாகவும் உள்ளது. இந்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் மின் கழிவுகளை கையாளும் சட்ட வடிவ செயல்முறை, விரிவாக்கப்பட்ட பொறுப்புகள் என்னவென்று, வகைப்படுத்தி சொல்கிறது.
மின்கழிவுகளை வகைப்படுத்தி மறு சுழற்சிக்கு பயன்படுத்த நன்கு மேம்படுத்தி விரிவாக்கப்பட்ட தொழிற்சாலை இருந்தால் தான் தொழில் நுட்பமும், சிக்கனமும் ஓங்கித் தழைக்கும். ஆண்டுக்கு ஆண்டு 30% கழிவுகள் பெருகுகின்றன.
Also read: கொரோனா – சிக்கித் தவிக்கும் ஆயத்த ஆடைகள் உற்பத்தித் தொழில்
பழைய பொருட்களை தெருவுக்குத் தெரு சென்று வாங்கி, பாகுபடுத்தி விற்பவர்களால் பெரும்பாலான பொருட்கள் மறுசுழற்சிக்கு கொண்டு வரப்படுகின்றன.
நமது வாழ்க்கை முறை மின்னணு சாதனங்களுடன் இரண்டறக் கலந்து விட்டதால், மின் கழிவுகள் 70% அதிகரிக்கும் சிக்கல் உண்டு. இதை சமாளிக்க பயன் பாட்டாளர்களின் உதவி பெரிய அளவில் தேவைப்படும்.
அதிக அளவில் மின் கழிவுகள் சேருவது, சுகாதார கேட்டிற்கும் சுற்றுச் சூழல் மாசுபடுவதற்கும் காரணமாக அமையும். ஒவ்வொரு மின், மின்னணு சாதன உற்பத்தியாளர்களும், தமது மின் கழிவுகளை எவ்வாறு அகற்றுவது, அவற்றை எவ்வாறு மறு சுழற்சிக்குப் பயன்படுத்துவது என்பதை பயனாளர்களுக்கு தெளிவு படுத்த புதிய சட்டம் வலியுறுத்துகிறது.
இந்த சட்டத்தில் கூறப்பட்டு உள்ள வழி முறைகளைத் தெரிந்து காயலான் கடைகளைத் தொடங்கி நடத்துவதற்கான வாய்ப்பு உள்ளது. இதற்குத் தேவை, அனைவர் கண்களிலும் படும் வகையில் ஒரு கடை, எடை போட ஒரு தராசு. கையில் ஓரளவுக்கு பணம்.
தங்கள் கடைக்கு வந்து இந்த பயன்படாத பொருட்களை விற்பவர்களிடமும் வாங்கலாம். வாரத்துககு ஒருமுறை, குறிப்பாக ஞாயிற்றுக் கிழமைகளில் தெருத் தெருவாகச் சென்றும் சேகரிக்கலாம். இத்தகைய கடைகளில் பழைய பிளாஸ்டிக், பேப்பர்கள், உலோகம் சார்ந்த பொருட்களையும் வாங்கலாம். உங்களுக்குத் தெரிந்த காயலான் கடைகளை கூர்ந்து கவனித்தால் அவர்கள் செயல்படும் விதத்தை தெரிந்து கொள்ளலாம்.
-முத்து செல்வராஜா