பத்து கிலோ கருப்பட்டிக்குப் பின்னால் உள்ள உழைப்பு பற்றி இயற்கைக் கரங்கள் என்ற அமைப்பை நடத்தி வருவதோடு, கலப்படமற்ற கருப்பட்டியை விற்பனை செய்து வரும் பர்கூரில் உள்ள திரு. ஆர். மணிவண்ணன் விளக்கிக் கூறிய போது,
”ஒரு ஆண் அதிகாலை 4 மணி முதல் மரம் ஏறணும் இருபது முதல் இருபத்தைந்து மரம் ஏறி பாளைய சீவி ஊறி இருக்குற தெளுவு (பதநீரை) எடுத்து கொண்டு வந்து வடிகட்டி தரணும்
எட்டு ஒன்பது மணி தாண்டினா தெளுவு புளிச்சிடும். பனை வெல்லம் தரமா வராது. மழை வந்து விட்டாலும் வெல்லம் தரமா இருக்காது. சுண்ணாம்பு அதிகமா இருந்தாலும் சரியா வராது, சுண்ணாம்பு குறைவா இருந்தாலும் தரமா இருக்காது.
ஒரு நேரம் மரம் ஏறவில்லை என்றாலும் பதனீர் போதுமான அளவுக்கு கிடைக்காது. காலையில் எத்தனை மரம் ஏறினோமோ அத்தனை மரங்களையும் மாலையிலும் ஏறி பாளையை சீவி விடணும். அனைத்தையும் ஏறி முடிக்க இரவு 11 மணி ஆகி விடும்
அடுத்து ஒரு பெண் அடுப்பின் அருகே உட்கார்ந்து பதநீரைக் காய்ச்சி, பாகு எடுத்து அச்சுகளில் ஊற்றி, ஒரு வாரம் நிழலில் காய வைத்து தர வேண்டும்..
இது மட்டுமல்ல; அடுப்புக்கு விறகு தேவை. அதுவும் பெரிய கட்டை விறகா கவும் இருக்கக் கூடாது. அடுப்பு முழுவதும் படர்ந்து எரிய வேண்டும் அதற்கு தகுந்தாற் போல் சிமிர் விறகாக மட்டுமே இருக்க வேண்டும் அதற்காக குடும்பமே காட்டுக்குப் போய் விறகு வெட்டி எடுத்து வர வேண் டும் அல்லது பணம் கொடுத்து வாங்க வேண்டும்.
இவ்வளவு வேலை செய்தால்தான் ஒரு குடும்பம், ஒரு நாளில் எட்டு முதல் பத்து கிலோ பனை வெல்லம் உற்பத்தி செய்ய முடியும்.
பதினைந்து ஆண்டுகளுக்கு முன் எங்க ஊர்ல மட்டும் 150 பேர் மரமேறினாங்க, அப்பா உட்பட. இன்று மூன்றில் ஒரு பங்கு ஆட்கள் கூட மரம் ஏறுவதற்கு இல்லை. காலையில் இறக்கிய அசல் பதநீர் 11 மணிக்கு மேல தாங்காது கெட்டு விடும். (அதுவும் நாலு மாச பனை சீசன்லதான் கிடைக்கும்)
சில பதநீர் அருந்துவதில் ஆர்வம் உள்ளவர்கள், மரமேறும் தோழிலாளியிடம் லிட்டர் 50 ரூபாய்க்கு பனை மரத்தடியில் இருந்தே பதநீரை வாங்கிக் கொண்டு போய் விடுகிறார்கள்.
இவ்வளவும் தாண்டி தரமான கருப்பட்டியை உற்பத்தி செய்து விற்பனை செய்கிறோம். குறைந்தது ஐந்து கிலோ அளவுக்கு வாங்குபவர்களுக்கு அவர்கள் முகவரிக்கே அசல் கருப்பட்டியை அனுப்பி வைக்கிறோம். நல்ல கருப்பட்டியை விற்பனை செய்கிறோம் என்ற மனநிறைவு எனக்கு இருக்கிறது. இப்போது கருப்பட்டி இனிப்பு வகைகளையும் தயாரிக்கிறோம்” என்கிறார், திரு. மணிவண்ணன். (9487624149)
- மலர்