இப்போது அலுவலகங்கள், விடுதிகள், திருமண் மண்டபஙகள், அரங்குகள், வீடுகளில் தூய்மைப் பணிக்கான வாய்ப்புகள் அதிகரித்து வருகின்றன. குறைந்த முதலீட்டில் செய்யத்தக்க பணி இது என்றாலும் சரியான, நம்பிக்கையான ஆட்களைத் தேர்வு செய்து அவர்களுக்கு பயிற்சி அளித்து வேலை வாங்கத் தெரிய வேண்டும். அதே போல தூய்மைப் பொருட்கள் பற்றிய அறிவியல் சார்ந்த புரிதலும் வேண்டும். குறிப்பாக லைசாலை எதற்குப் பயன்படுத்த வேண்டும், ஹார்பிக்கை எதற்குப் பயன்படுத்த வேண்டும் என்பது போன்ற அடிப்படை செய்திகளையும், கண்ணாடிக் கதவுகள், கம்ப்யூட்டர் மேஜைகளை எப்படி, எந்த தூய்மைப் பொருட்களைப் பயன்படுத்தி தூய்மை செய்ய வேண்டும் என்பதையும் அறிந்து இருக்க வேண்டும்.
ஓட்டல் மேனேஜ்மென்ட் பயிற்சி நிறுவனங்களில் ஹவுஸ் கீப்பிங் என்ற பாடப் பிரிவு உண்டு. அதைப் படித்தவர்களுக்கு இந்தத் தொழில் பற்றிய அடிப்படை அறிவு இருக்கும். அல்லது அந்த பாடத்துக்கு என தயாரிக்கப்பட்டு இருக்கும் புத்தகங்களை வாங்கி நாமாகவும் படித்து நுட்பங்களை அறிந்து கொள்ளலாம்.
தூய்மைப் பணி தொடர்பான பொதுவான வேலைகள் அனைத்துமே நமக்குத் தெரிந்ததுதான் என்றாலும் தொழில் முறையில் செய்யும்போது அதற்கான நேர்த்தியை வழங்கத் தெரிந்து கொள்ள வேண்டும்.
இந்த பணிக்குத் தேவையான துடைப்பம், மாப்கள், வாளிகள், புதிதாக வந்து இருக்கும் நவீன தூய்மை தொடர்பான பிளாஸ்டிக் பொருட்கள், தூய்மைப் படுத்தும் திரவங்கள்தான் இந்த தொழிலுக்கான மூலப்பொருட்கள். வாய்ப்பு இருந்தால் தரையைத் தூய்மைப் படுத்தும் எந்திரம் ஒன்றை வாங்கிக் கொள்ளலாம்.
வீட்டில் இருந்தபடியே செய்யலாம் என்றாலும், சின்னதாகவாவது ஒரு அலுவலகம் இருப்பது தொழில் வளர்ச்சிக்கு மிகவும் உதவும். ஆட்களை தேர்வு செய்யவும், குறிப்பிட்ட இடங்களுக்கு அனுப்பவும், மூலப்பொருட்களை வைத்து எடுக்கவும் அலுவலகம் தேவை.
முழுநேர அலுவலக உதவியாளர் ஒருவர் இருப்பது தகவல் தொடர்புகளை சிறப்பாக மேற்கொள்ள உதவும்.
முதலில் நாம் செய்யவிருக்கும் தூய்மைப் பணிகள் குறித்த பட்டியலுடன் விசிட்டிங் கார்டுகளை ஆயிரம் அளவுக்கு அச்சடித்து சிறிய, பெரிய அலுவலககங்கள் என்று அனைத்து அலுவலகங்களிலும், திருமண மண்டபங்களிலும், அரங்குகளிலும் நிறைய கொடுக்க வேண்டும். தெரிந்தவர்கள் இந்த இடங்களில் இருந்தால் அவர்களிடன் பேசி நம்மைப் பரிந்துரைக்க வேண்டுகோள் விடுக்க வேண்டும். திருமண் மண்டப மேலாளர்கள் கமிஷன் அடிப்பவர்களாக இருந்தால் அதற்கேற்ப அவர்களிடம் பேசிக் கொள்ள வேண்டும்.
முதலில் ஏற்கெனவே தூய்மைப் பணிகள் நன்கு தெரிந்த இரண்டு பேர்களை நாள் சம்பளத்துக்கு அமர்த்திக் கொள்ள வேண்டும். ஒரு அலுவலகம் நமக்கு இந்த தூய்மைப் படுத்தும் பணியை வழங்கினால், முதலில் அந்த அலுவலகத்தைப் பார்வையிட்டு, தூய்மைப் பணிகளை எவ்வாறு மேற்கொள்ளலாம் என்பதை முடிவு செய்து கொள்ள வேண்டும். ரெஸ்ட் ரூம்கள் எத்தனை என்பது போன்றவற்றைப் பார்த்துக் கொள்ள வேண்டும். இதற்கேற்ப அவர்களிடம் கொட்டேஷன் கொடுத்து ஒப்புதல் வாங்க வேண்டும். கொட்டேஷனில் 50% அட்வான்ஸ் தர வேண்டும் என்பதையும் குறிப்பிட்டு இருக்க வேண்டும். கூடுதலாக வாடிக்கையாளர்களைப் பிடிக்க நியாயமான கட்டணம் உதவும். இது மாதம் ஒருமுறை தூய்மை செய்வது என்பதற்கான ஆலோசனை. நாள் தோறும் செய்வதற்கான வாய்ப்பாக இருந்தால் செக்யூரிட்டி சர்வீஸ் போல மாத சம்பளத்துக்கு ஆட்களை அனுப்பி வைக்கலாம்.
தொடக்கத்தில் நாமும் கூடவே நின்று வேலைகளைச் செய்ய வேண்டும். அலுவலக ஊழியர்களிடம் நட்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும். குறிப்பாக ரெஸ்ட் ரூம்களை கொஞ்சமும் கறை, அழுக்கு இல்லாமல் தூய்மைப் படுத்திக் கொடுக்க வேண்டும். அது நமது பணியின் சிறப்பை எடுத்து உரைக்கும்.
உள்ளூர் இதழ்களில் குறைந்த கட்டணத்தில் விளம்பரம் கொடுக்கலாம். அனைத்தையும் விட தொடர்ந்து அலுவலகங்கள் வாடிக்கையாளர்களிடம் தொடர்பில் இருக்க வேண்டும். சுமார் பத்து பணிகளில் நல்ல அனுபவம் வந்து விடும். ஆட்களும் அமைந்து விடுவார்கள். மூன்று ஆண்டுகள் இடைவிடாமல் இந்த தொழிலை அக்கறையுடன் செய்தால் உங்கள் நிறுவனத்துக்கு என நிறைய வாடிக்கையாளர்கள் அமைந்து விடுவார்கள். நல்ல வருமானமும் வரத் தொடங்கி விடும். கொரானா முடிந்த பிறகு எல்லா அலுவலகங்களும் இயங்கத் தொடங்கி விடும். அதன் பிறகு இந்த தொழிலில் நாட்டம் உள்ளவர்கள் முயற்சிகளை மேற்கொள்ளலாம்.