பலவிதமான கைவினைப் பொருட்களை செய்து சந்தைப் படுத்தும் வாய்ப்பு இருக்கிறது. கைவினைப் பொருட்கள் செய்வதில், பலருக்கும் ஆர்வம் இருக்கிறது. அவர்களுக்கு கைவினைப் பொருட்கள் செய்வது எப்படி? என்பதை கற்றுக் கொடுக்க பயிற்சியாளர்கள் இருக்கிறார்கள். கூகுளில் தேடியும் கற்றுக் கொள்ளலாம்.
பெயின்டிங் என்பதில், சுவரை அலங்கரிக்க சார்கோல் பெயின்டிங், குழந்தைகளின் தலையணையை அலங்கரிக்க மிக்கி மவுஸ் பேப்ரிக் பெயின்டிங், கிளாஸ் பெயின்டிங் மற்றும் புடவையில் லிக்விட் எம்பிராய்டரி, ஜப்பானின் சஷிகோ எம்பிராய்டரி, துப்பட்டாவை அலங்கரிக்கும் குரோஷா பூக்கள், பேப்பர் பூக்கள், கிறிஸ்துமஸ் ட்ரீ, பேப்பர் பாக்ஸ், காகித ரோஜா, ஜிமிக்கி, வளையல், நெக்லஸ், கம்மல், ஊதுவத்தி ஸ்டாண்ட், வீட்டிற்குத் தேவையான காலண்டர், ரங்கோலி விளக்கு என்று ஏராளமான கைவினைக் கலைகள் இருக்கின்றன.
ஒருவர் கைவினைப் பொருட்களை விற்று வருமானம் ஈட்ட முடியுமா என்றால்? கண்டிப்பாக முடியும். காரணம் நாடு முழுவதும், ஆன்லைன் தளங்களான அமேசான், ஃப்ளிப்கார்ட் போன்ற தளங்கள் பரவிக் கிடக்கின்றன. பலர் கைவினைப் பொருட்கள் செய்முறைகளைக் கற்றுக் கொண்டு பயிற்சி வகுப்புகள் எடுக்கிறார்கள்; மற்றும் அங்கேயே அவர்கள் தயாரிக்கும் பொருட்களையும் விற்கிறார்கள். அதன் மூலம் வருமானம் ஈட்டுகிறார்கள். நிறைய கைவினைப் பொருட்களுக்கான கண் காட்சிகள் ஏற்பாடு செய்யப்படுகின்றன. அவற்றில் கலந்து கொண்டு கைவினைப் பொருட்களை விற்கிறார்கள். ஏற்றுமதி செய்பவர்களும் உண்டு.
இன்று கைவினைப் பொருட்கள் வாங்குபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. முறையாக கற்றுக் கொண்டு கைவினைப் பொருட்களை குறைந்த முதலீட்டில் செய்து விற்பனை செய்ய முயற்சிக்கலாம்.
பயிற்சி என்றவுடன் ஒரே நாளில் கற்றுக் கொண்டு நாளையே தொழிலாக தொடங்கி விட முடியுமா? என்று சிலர் ஆசைப்படுவார்கள். ஆனால், அப்படி முடியாது. பொறுமை மிக அவசியம்.
இன்று கைவினைப் பொருட்கள் செய்வதற்கான மூலப்பொருட்கள் நிறைய இடங்களில் கிடைக்கின்றன. சென்னையில் பிராட்வே – நாராயண முதலி தெரு முழுக்க கைவினைப் பொருட்களுக்கான மூலப்பொருட்கள் விற்பனை நடைபெறுகிறது. மொத்த விலையில் கிடைக்கின்றன. பத்தாயிரம் ரூபாய் என்ற அளவுக்கு தொடக்க முதலீடு இந்த தொழிலைத் தொடங்குவதற்குப் போதுமானது ஆகும்.
– திருமதி. மு.வி. நந்தினி.