முகநூல்(Facebook), இன்ஸ்டாகிராம், டிவிட்டர், வாட்ஸ் ஆப், லிங்கிட் இன்(LinkedIn) போன்று இன்னும் நிறைய சமூக வலைத்தளங்கள் உண்டு. இவற்றில் ஒன்றையாவது, நாள்தோறும் பயன்படுத்தி கொண்டுதான் இருக்கிறோம். பொதுவாக, சொந்த செய்திகள் பேசுவதற்கு அதிகம் பயன்படுத்தி வருகிறோம். இவற்றை எப்படி தொழில் வளர்ச்சிக்கு பயன்படுத்துவது என்பதை பற்றி பார்ப்போம்.
சமூகவலைத்தளத்தில் எவற்றை அதிக நபர்கள் பயன்படுத்துகிறார்கள் என்றால் முகநூல் என்று குறிப்பிடலாம். சான்றிற்கு, உங்களுக்கு எத்தனை சமூகவலைத்தளத்தில் கணக்கு உள்ளது. தினமும் எவற்றை அதிகம் பயன்படுத்துகிறோம் என்றால் முகநூல் முதலில் இருக்கும். முகநூலை அனைவரும் பயன்படுத்துவார்கள். அதில் மூன்றில் ஒரு பாதி டிவிட்டர் கணக்கு வைத்திருப்பார்கள்.
இன்ஸ்டாகிராம் பயன்படுத்துபவர்கள் அதி கம். குறிப்பாக, இளைஞர்கள், கல்லூரி படிக்கும் மாணவ/ மாணவிகள், வேலை தேடுபவர்கள் போன்றோர் அதிகம் பயன்படுத்துவார்கள். வாட்ஸ் ஆப் அனைவரும் பயன்படுத் துகிறார்கள். இவை எல்லாவற்றிலும் தொழில் தொடர்பான மார்க்கெட்டிங் செய்யமுடியும்.
சமூகவலைத்தளங்கள், தொழில் கணக்கு தொடங்க தனி பக்கத்தை வைத்து உள்ளது. அதில் முகநூல் தனித்து சிறந்ததாக விளங்குகிறது. முகநூலை மூன்று விதமாக பயன்படுத்த முடியும். முதலில், முகநூலில் கணக்கு தொடங்கி சொந்த பயன்பாட்டுக்கு பயன்படுத்தி கொண்டு இருப்போம். அதில், தினமும் நாம் செல்லும் இடங்கள், பார்க்கும் படங்கள், விருப்பமான செயல்கள், செல்ஃபி படங்கள் என்று அதிகம் பயன்பாட்டில் இருக்கும். இதே போல், முகநூலில் குழு(Group) ஒன்றை உருவாக்கி அதில் ஏதாவது ஒரு துறை பற்றிய பதிவுகள் மட்டும் விவாதிக்கப்பட்டு வரும். நாமும் நிறைய குழுவில் உறுப்பினராக இருப்போம். இன்று கோடிக்கணக்கான குழுக்கள் முகநூலில் இயங்கி வருகின்றன. குழுவில் நம் தின செயல்களை பதிவிட கூடாது. குழு எதற்காக உருவாக்கப்பட்டதோ அவை தொடர்பான பதிவுகள் மட்டும் இருக்குமாறு பார்த்து கொள்ளவேண்டும். சான்று, கார் தொடர்பான குழு என்றால் அதில் கார் விவாதங்கள், உங்களுக்கு தெரிந்த கார் செய்திகள், அவை தொடர்பான அண்மை செய்திகள் என்று இருக்குமாறு பார்த்து கொள்ள வேண்டும். அங்கு தனிப்பட்ட செய்திகள், கேளிக்கை செய்திகள் போன்றவற்றை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
நம் முகநூல் கணக்கில் நண்பர்களாக 5000 நபர்களை சேர்க்கலாம். அடுத்து வரும் நபர்கள் நம்மை பின் தொடரலாம்(Follow). ஆனால், நண்பர்கள் பட்டியலில் இணைய முடியாது. நாம் உருவாக்கும் குழுவில் நிறைய நபர்களை இணைக்கலாம். பத்து லட்சத்திற்கு மேற்பட்ட நபர்கள் கொண்ட குழுக்கள் உண்டு. இவை இரண்டும் தவிர மூன்றாவதாக, தொழில் பக்கம் (Business Page) என்ற ஒன்று முகநூலில் உண்டு. இவற்றில் தொழில் செய்யும் அனைவரும் தங்கள் தொழிலுக்கென்று ஒரு பக்கத்தை உருவாக்கி கொள்ளவேண்டும். அங்கு முழுக்க முழுக்க உங்கள் தொழில் தொடர்பான செய்திகள், படங்கள், விவாதங்கள், புதிய பொருட்கள் அறிமுகங்கள், நிகழ்ச்சி நிரல் உருவாக்குவது என்று நிறைய பயன்பாடுகள் தொழில் பக்கத்தில் உண்டு.
தொழில் பக்கத்தில் நண்பர்கள் சேர்ப்பு என்று இல்லை. அனைவரும் நம் பக்கத்தை பின்தொடர் பவர்கள் மட்டுமே. அவர்களுக்கு விருப்பம் இல்லையென்றால் பக்கத்தில் இருந்து வெளி ஏறலாம். தேவைப்படும் பொழுது மீண்டும் பின்தொடரலாம். ஆனால், இந்த வசதி குழுவில் இல்லை. அதில் இணைய அந்த குழு உருவாக்கியவர்களின் ஒப்புதல் வேண்டும். வெளியேறி, மீண்டும் இணைய குழு உருவாக்கியவரின் ஒப்புதல் வேண்டும். இந்த மூன்று கணக்கில் அதாவது நம் சொந்த பயன்பாட்டிற்கான (time line) இடத்தில், நாம் உருவாக்கிய குழுவில், தொழில் பக்கத்தில் எப்படி பதிவுகள் செய்வது, முகநூலில் Paid Advertisement என்ற ஒரு வழி உண்டு. இவை எல்லாம் தொடர்ந்து பார்ப்போம்.
– செழியன்.ஜா