-ஆர்க்கிடெக்ட் செல்வி. கிருத்திகா
சென்னையில் உள்ள முகமது சதக் கல்லூரியில், பி. ஆர்க்., முடித்த பின் நண்பர் திரு. மணிகுமாருடன் இணைந்து டிடீடி ஸ்டுடியோ (D. T. D. Studio) என்கிற பெயரில் கட்டடங்களுக்கான வரை படங்களை உருவாக்கித் தருவதோடு, கட்டுமான பணிகளையும் மேற்கொண்டு வருகிறார், செல்வி வெ. கிருத்திகா.
சிமென்ட், சுட்ட செங்கல், ஜல்லி, இரும்புக் கம்பிகளைப் பயன்படுத்தாமல் வீடு கட்டும் திட்டங்களை நிறைவேற்றி வருகிறார், செல்வி. கிருத்திகா.
”சிமென்டை பயன்படுத்தி மேற் கொள்ளப்படும் கட்டுமானத்தை விட இது உறுதியானதாகவும், இரண்டு மடங்கு ஆயுட்காலம் கொண்டதாகவும் இருக்கும்.” என்கிறார், கிருத்திகா. இந்த கட்டுமான முறை பற்றி அவர் மேலும் கூறும்போது,
இத்தகைய வீடுகளில் வெளியில் உள்ள வெப்பத்தைவிட 3 முதல் 4 டிகிரி குறைவாக இருக்கும். இதே போல குளிரையும் குறைத்துக் கொடுக்கும்.
எங்களைப் பொறுத்தவரை இது போன்ற கட்டுமானங்கள் ஒரு புதுமை அல்ல. காலத்திற்கு தேவையானவை. செங்கல், சிமெண்ட், இரும்பு, மற்றும் ஆற்றுமணல், சேர்க்காமல் புதுச்சேரி ஆரோவில்லில் 6 மாடி கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. அந்த கட்டிடம் இத்தகைய கட்டுமானத்துக்கு ஒரு முன் மாதிரியாக உள்ளது.
கருத்தரங்குகள், ஆய்வுக் களங்கள், பயிற்சி வகுப்புகளுக்கு தன்னார்வலர்களாக நாங்கள் பயணித்த போது ஆர்கிடெக்ட் திரு. சுதீர் எங்களுக்கு அறிமுகமானார். அவர் சுற்றுச் சூழல் ஆர்வலர். பகுதி நேர பேராசிரியராக (விசிட்டிங் ஃபேக்கல்டி) யாக பல்வேறு ஆர்க்கிடெக்சர் கல்லூரிகளுக்குச் சென்று வருபவர். பியூசிஎல் அமைப்பில் உள்ள அவர் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வீடுகளை உருவாக்குவதில் ஆர்வம் காட்டி வருகிறார். அவரிடமிருந்து நிறைய தகவல்களை தெரிந்து கொண்டோம்.
எங்களுக்கு இப்படிப்பட்ட வீட்டைக் கட்டும் முதல் வாய்ப்பை சென்னை, கூடுவாஞ்சேரியில் உள்ள திரு. ராஜ்குமார் கொடுத்தார். தரைத் தளம் மற்றும் முதல் மாடியுடன் 3500 சதுர அடியில் அவருடைய வீட்டை கட்டி வருகிறோம். வீட்டுப் பணிகள் முடியும் நிலையில் உள்ளன.
நான்கு படுக்கை அறைகள், இரண்டு சமையல் அறைகள், இரண்டு பொது அறைகள் மற்றும் இரண்டு வரவேற்பு அறைகளை உள்ளடக்கியது, இந்த வீடு. கட்டுமானத்திற்குத் தேவையான மணலை பெரும் பாலும் அந்த கட்டுமானம் நடைபெறும் பகுதியில் இருந்தே எடுத்துக் கொண்டோம். அடித்தளத்துக்கு கருங்கற்களையும், அதோடு சுண்ணாம்பு, மற்றும் களி மண் சாந்தை பயன்படுத்தினோம். சுவருக்கு கம்ப்ரஸ் செய்யப்பட்ட மணல் கற்களைப் (Compressed Blocks) பயன்படுத்தினோம்.
கம்ப்ரஸ் கற்கள் செய்ய திரு. ராஜ்குமார் கேட்டுக் கொண்டதற்கு இணங்க 8% சிமென்ட கலந்தோம்
இந்த வீட்டைப் பார்த்து விட்டு அதே பகுதியைச் சேர்ந்த திரு. காசிராமன் என்பவரும் இதே மாதிரி வீட்டைக் கட்டித் தரும்படி எங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளார், அந்தப் பணியும் தொடங்கி நடைபெற்று வருகிறது. இவர் அறவே சிமென்ட கலக்க வேண்டாம் என்று கூறி இருக்கிறார். 1700 சதுர அடியில் தரைத்தளம் மற்றும் முதல் மாடியுடன் இந்த வீட்டின் பணியும் விரைவில் நிறைவு பெற உள்ளது.
திராய் உள்ளிட்ட பயன்பாடுகளுக்கு உள்ளூரிலேயே வளரும் மரவகைகளை பயன்படுத்துவது சிறப்பு. நாற்பது ஆண்டுகளுக்கு மேல் ஆயுட்காலம் கொண்ட மரங்களை பயன்படுத்தும்போது கட்டடங்கள் உறுதியாக இருக்கும் பூச்சி தொல்லை வராது.
நாங்கள் மேற்கொள்ளும் சுற்றுச் சூழலுக்கு உகந்த கட்டுமானங்களுக்கு (Eco Friendly Constructions) தேவையான மண், மற்றும் மரப் பொருட்களை முடிந்த வரை அதே பகுதியில் இருந்தே பெற்றுக் கொள்கிறோம்
நாங்கள் ஆய்வுக்காக திருத்தணி அருகில் உள்ள அத்திமாஞ்சேரிக்கு சென்றிருந்தோம். அங்குள்ள மலையடிவாரத்தில் மலைவாழ் பழங்குடி மக்களான இருளர்களின் 35 குடும்பங்கள் உள்ளன. 2015ஆம் ஆண்டு பெய்த பெருமழையின் போது நான் அங்குதான் இருந்தேன். வெள்ளத்தில் அவர்களின் வீடுகள் அடியோடு பாதிக்கப்பட்டன. மழை முடிந்ததும் அங்குள்ள மண்ணையும், தாவரங்களையும் பயன்படுத்தி மிக உறுதியான வீடுகளை ஒரு சில நாட்களில் கட்டிக் கொண்டார்கள். அவர்கள் வீடு கட்டும் முறையை வியப்புடன் அருகில் இருந்து பார்த்துக் கொண்டிருந்தேன். ஒரு தேர்ந்த பொறியியல் திறமை அவர்கள் வீடு கட்டும் முறையில் இருந்தது.
நாங்கள் சிமென்ட், சுட்ட செங்கல்கள், ஜல்லி பயன்படுத்தாமல் கட்டும் வீடுகள் பற்றி அறிந்த ஆர்கிடெக்ட் நண்பர்கள் பலர் வந்து கட்டுமானப் பணிகளைப் பார்வையிட்டனர். தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். தமிழகத்துக்கு வந்த கட்டுமான துறையில் ஆர்வம் உள்ள வெளிநாட்டு நண்பர்களும் வந்து பார்த்து பாராட்டிச் சென்றனர்.
இது போன்ற இயற்கை நட்பு வீடுகள் தமிழகம் முழுவதும் உருவாக வேண்டும் என்பதற்காக பயிற்சி வகுப்புகளும் நடத்தி வருகிறோம். திண்டிவனத்தில் நாங்கள் நடத்திய பயிற்சி வகுப்பில் 102 பேர் கலந்து கொண்டு, பயிற்சி பெற்றனர்.” என்றார் செல்வி. வெ கிருத்திகா. (7904010879)
-ம. வி. ராஜதுரை