Latest Posts

தொடர் லாபத்திற்கு சுழற்சி முறையில் சாகுபடி

- Advertisement -

தட்டைப் பயிர், பீன்ஸ், காராமணி என்ற வரிசையில் இருக்கும் வணிகப் பயிர்களில் ஒன்றுதான் ‘பொரியல் தட்டை’. இது, கேரள மாநில மக்களால் விரும்பி உண்ணப்படும் காய்கறிகளில் ஒன்றாக உள்ளது. அவியல், பொரியல், கூட்டு என்று விரும்பியவாறு இதைச் சமைத்து உண்கிறார்கள். அதிலும் தமிழ்நாட்டில் விளையும் பொரியல் தட்டையின் ருசி அதிகமாக இருப்பதால், கேரளத்தில் அதற்கு வரவேற்பு அதிகம்.

‘‘இந்தப் பொரியல் தட்டை பயிர் எல்லா வகை நிலத்திலும் விளையக் கூடியது. வருடத்தின் 12 மாதங்களும் சாகுபடி செய்யலாம். ஒரு ஏக்கரில் சாகுபடி செய்ய இதற்கு 3 கிலோ விதை தேவைப்படுகிறது. நாட்டு ரகம், வீரிய ரகம் என்று இரண்டு வகை விதைகள் உள்ளன. நாட்டு ரகத்தில் விளைச்சல் அவ்வளவாக இல்லை என்பதால் 85 % விவசாயிகள் வீரிய ஒட்டு ரகத்தைப் பயன்படுத்துகின்றனர். நாட்டு ரக விதைகளை விவசாயிகளே பாதுகாத்து வைத்து பயன்படுத்துகிறார்கள். வீரிய ரக விதைகள் கடைகளில் கிடைக்கின்றன.

விதை ஊன்றிய ஐம்பதாவது நாள் காய்களை பறிக்கலாம். அதிலிருந்து தொடர்ந்து 90 நாட்கள் வரை தினமும் பறிக்கலாம். ஏக்கருக்கு 100 முதல் 150 கிலோ வரை தினமும் கிடைக்கிறது. பயிரின் காலம் 140 நாட்கள். ஆனி முதல் மார்கழி மாதம் முடிய மிதமான நிலை உள்ளதால், காய்ப்பு திறன் நிறைய கிடைக்கும். தை மாதத்துக்குப் பிறகு கோடை காலங்களில், 25 % விளைச்சல் குறையும். அதேநேரம், இந்தக் கால கட்டத்தில் விலை கொஞ்சம் கூடுவதால், பெரிதாக நட்டம் வராது.

ஆண்டு முழுவதும் பயிர் செய்யலாம் என்பதால், சுழற்சி முறையில் சாகுபடி மேற்கொள்வது தொடர் லாபத்துக்கு வழி வகுக்கும். ஒரு ஏக்கர் நிலம் இருந்தால் ஒரே நேரத்தில் முழுக்க பொரியல் தட்டை பயிரைச் சாகுபடி செய்யக் கூடாது. முதலில் அரை ஏக்கர் அளவுக்கு விதைத்துவிட்டு, கொஞ்சம் இடைவெளி கொடுத்து, அடுத்த அரை ஏக்கர் விதைத்தால் வருடமெல்லாம் வருமானம் சீராக கிடைக்கும். பெரும்பாலும், சிறு மற்றும் குறு விவசாயிகளே இதைப் பயிரிடுவதால், வீட்டில் உள்ளவர்கள்தான் எல்லா வேலைகளையும் செய்கிறார்கள்.

தண்ணீர் பாசனத்தைப் பொறுத்தவரை, குறைந்த அளவு இருந்தால் போதுமானது. பத்து நாட்களுக்கு ஒரு முறை பாசனம் செய்யலாம். பொதுவாக, கோடை காலங்களில் மட்டும் நோய் தாக்குதல் காணப்படும். உரிய இடைவெளியில் மூன்று முறை பூச்சி மருந்து தெளிக்க வேண்டும்.

பயிர் பாதுகாப்பு, உள்ளிட்ட பராமரிப்பு செலவு ஏக்கருக்கு 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் ரூபாய் வரை செலவு ஆகும். மொத்த உற்பத்தியாக ஏக்கருக்கு 8 முதல் 10 டன் வரை மகசூல் கிடைக்கும்.

”தினந்தோறும் வருமானம் தரும் பயிர் ஆகும். வியாபாரிகள் பலர் நேரடியாகவே வந்து இதை வாங்கிச் செல்கிறார்கள். நான்கைந்து கிராமங்களுக்கு ஒரு இடம் என்று ஏதாவது ஒரு மரத்தடியில் தராசைக் கட்டித் தொங்கவிட்டபடி வியாபாரிகள் இருப்பதை சாதாரணமாக பார்க்க முடியும். பொரியல் தட்டை பயிரை பெரிய அளவில் நேரடியாக கொள்முதல் செய்து வருபவர்களில் ஒருவரான கேரள மாநிலத்தைச் சேர்ந்த வியாபாரி ஜாஃபர் கூறியதாவது, ”எங்கள் மாநிலத்தில் ‘பொரியல் இல்லா ஊண் வீண்’ என்று சொல்வார்கள். பொரியல், அவியல், வறுவல் என்று ஏதாவது ஒன்று இருந்தால்தான் எங்களுக்கு சாப்பாடு இறங்கும். அந்த வகையில், இந்தப் பொரியல் தட்டை எங்கள் மாநில மக்களால் விரும்பி சாப்பிடப்படுகிறது. அதனால், அதன் தேவை அதிகம். அதை மனதில் கொண்டே கோவை மற்றும் ஈரோடு மாவட்ட விவசாயிகள் அதிக அளவில் பயிர் செய்து வருகிறார்கள்.

பல்லடம், கிணத்துக்கடவு, பொங்கலூர், தாராபுரம், குண்டடம், சத்தியமங்கலம், புளியம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 15 ஆயிரம் ஏக்கரில் சாகுபடி செய்துள்ளார்கள். நாள் ஒன்றுக்கு 15 லோட் என்கிற அளவுக்கு கேரளாவுக்கு அனுப்பப்படுகிறது. பாலக்காடு, வடக்கஞ்சேரி, திருச்சூர், சாலக்குடி, மஞ்சேரி, மன்னார்காடு, கோழிக்கோடு உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவில் இது விற்பனையாகிறது.

வரும் காலங்களில் இதற்கான தேவை இன்னும் அதிகரிக்கும் வாய்ப்பு இருக்கிறது. எனவே, தமிழ்நாட்டில் பொரியல் தட்டை விவசாயிகளுக்கு வளமான வாய்ப்பு இருக்கும் என்பதில் சந்தேகமில்லை’’ என்கிறார் ஜாஃபர்.

– த. செந்தமிழ்ச் செல்வன்

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

Subscribe to our latest news