1884-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதலே ஆயுள் காப்பீட்டு பாலிசிகளைஅஞ்சல் அலுவலகங்கள் வழங்கி வருகின்றன. அஞ்சல் அலுவலகங்களில் எடுக்கப்படும் ஆயுள் காப்பீட்டு பாலிசிகளுக்கு அதிக போனஸ் கிடைக்கும் என்பதால்தான் பலரும் இதில் சேர்ந்து பலனடைந்து வருகின்றனர். தற்போது, அதிகபட்ச காப்பீட்டுத் தொகை ரூ.50 லட்சமாகவும், குறைந்தபட்ச காப்பீட்டுத் தொகை 20,000 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
Also read: அஞ்சலகம் குறித்த கால வைப்பு திட்டம்
அஞ்சல் ஆயுள் காப்பீட்டுத் திட்டங்கள் அரசு ஊழியர்கள், நகர்ப்புற, கிராமப்புற மக்களுக்கு பயனளிக்கக் கூடியதாக அமைக்கப்பட்டுள்ளது. இதில் இரண்டு வகையான திட்டங்கள் உள்ளன. ஒன்று, அஞ்சல் ஆயுள் காப்பீட்டுத் திட்டம் (PLI). இரண்டாவது, கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீட்டுத் திட்டம் (RPLI). முதல் திட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவியுடன் நடைபெறும் நிறுவனங்களின் ஊழியர்கள், அனைத்து தனியார் கல்வி நிறுவனங்கள், வங்கி ஊழியர்கள், NSC/ BSC களால் வகைப்படுத்தப்பட்ட தனியார் கம்பெனி ஊழியர்கள் ஆகியோர் சேரலாம். இரண்டாவது திட்டத்தில் கிராமப் பகுதிகளில் வசிக்கும் அனைவரும் பாலிசி எடுத்துக் கொள்ளலாம்.
மற்ற நிறுவனங்களின் ஆயுள் காப்பீட்டுத் திட்டங்களைவிட அஞ்சல் அலுவலகங்களில் அளிக்கப்படும் ஆயுள் காப்பீட்டுத் திட்டங்களில் பல சிறப்புகள் உண்டு.
மற்ற இன்சூரன்ஸ் திட்டங்களைவிட குறைந்த பிரீமியம். அதிக போனஸ் ஒரு வருடத்துக்கு சுமார் ரூ.1,500 ஆகும். கட்டும் பிரீமியத்துக்கு வருமான வரிச் சலுகை உண்டு. முதிர்வுத் தொகைக்கு முழு வரி விலக்கு உண்டு.
பணியிலிருந்து விலகி விட்டாலும் பாலிசியைத் தொடரலாம்.
Also read: அஞ்சலக சேமிப்புக் கணக்குகளுக்கு ஏடிஎம், டெபிட் கார்டுகள்
குறைந்தபட்ச காப்பீட்டு தொகை ரூ.20,000. அதிகபட்சம் ரூ.50 லட்சம் வரை ஆகும். ஒருவர் எத்தனை பாலிசிகள் வேண்டுமானாலும் எடுக்கலாம்.
பிரிமீயத்தை இந்தியாவில் எந்த அஞ்சலகத்திலும் செலுத்தலாம். ஆன்லைன் மூலமாகவும் செலுத்தலாம்.
– த. செந்தமிழ்ச் செல்வன்