Latest Posts

புறந்தூய்மை நீரான் அமையும்

- Advertisement -

“புறந்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை வாய்மையாற் காணப்படும்.” அதாவது ஒரு மனிதன் தனது உடலை நீரைக் கொண்டு கழுவிக் குளித்து சுத்திகரித்துக் கொள்ள முடியும். ஆயினும், அவனது உள்ளத்தூய்மையானது அவனது உண்மைத் தன்மையால் தான் கிடைக்கும். தூய எண்ணங்களை அவனது செயல்களும் எதிரொளிக்கின்றன.” என்கிறார். தொழில் முனைவோருக்கு இது முற்றிலும் பொருந்தும்.

தூய்மையான உற்பத்தி முறை என்பது, தொழில் முனைவோர் ஒவ்வொருவரும் தாமாகவே முன்வந்து தங்கள் தொழிற் சாலையில் இருந்து வெளியாகும் மாசுப் பொருள்களின் அளவுகளைக் குறைக்கவோ அல்லது மொத்தமாகக் நீக்கவோ எடுக்கக் கூடிய நடவடிக்கைகள் ஆகும். ஐக்கிய நாடுகள் சூழல் திட்டத்தின் கொள்கைப்படி, செயல்முறைகள், பொருள்கள் மற்றும் சேவைகளின்போது சில சுற்றுச்சூழல் பாதுகாப்பு முறைகள் பின்பற்றுவதன் மூலம் தொழிற்சாலையின் ஒட்டுமொத்த செயல் திறனை அதிகப் படுத்துவதுடன், மனிதர்கள் மற்றும் சுற்றுச்சூழலுக்கு ஏற்படக்கூடிய மாசை குறைக்கும் நடவடிக்கைகளே தூய்மையான உற்பத்தி முறை ஆகும்.

தொழில் உற்பத்தி முறைகளில் சில மாற்றங்களை செய்வதன் மூலம் மாசுக்களின் வெளிப்பாடுகளைத் தடுத்து அல்லது குறைத்து, கழிவுகளை அவை வெளிப்படும் இடத்திலேயே அகற்றி, மூலப்பொருள்கள், எரிசக்தியின் அளவைக் குறைக்க முடியும். இதன் மூலம், உற்பத்தி செலவுகள் குறைய வாய்ப்பு உள்ளது. தொழிற்சாலையின் வளர்ச்சி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு உறுதிசெய்யப்படும்.

Also read: கை கொடுத்த, 17-வது தொழில்

தூய்மையான உற்பத்தி முறைகளின் பயன்கள்:

தூய்மையான உற்பத்தி முறைகள் ஒரு தொழிற்சாலையில் நடைமுறைப் படுத்தப்பட்டால், அந்த நடவடிக்கைகளின் மூலம் மூலப்பொருள்களின் பயன்பாடு வெகுவாக குறைவதுடன், அவற்றின் வீண்செலவுகள் குறைக்கப்பட்டு நேரடி செலவுகளில் சேமிப்பு ஏற்படும். அதேபோல், உற்பத்தி செயல்பாட்டின்போது பயன்படுத்தப்படும் ஆற்றல் மற்றும் தண்ணீர் பயன்பாடு ஆகியவை குறைவாக இருக்கும் பட்சத்தில் மின் மற்றும் தண்ணீருக்கான கட்டணங்களையும் சேமிக்க முடியும். மூலப்பொருள், நீர் மற்றும் மின்சாரம் ஆகியவற்றில் சேமிப்பு ஏற்படும்போது, அது தொழிலாளியின் உற்பத்தித் திறன் மேம்பாட்டுக்கும் உதவுகிறது.

ஒவ்வொரு வணிக நிறுவனமும் தங்களுடைய விற்பனை இலக்குகளை அதிகரிப்பதன் மூலமும், உற்பத்தி செலவுகளைக் குறைப்பதாலும் கணிசமான லாபத்தை அடைய முடியும் என்பதை இதன் மூலம் உணரலாம். மேலும், உற்பத்தியின்போது கிடைக்கக் கூடிய துணை உற்பத்திப் பொருள்கள் மூலமும் கழிவு மற்றும் சேதாரங்களை விற்பதன் மூலமும் நிறுவனத்தின் வருமானத்தைப் பெருக்கிக் கொள்ள முடியும். சுற்றுச்சூழலுக்கு தொடர்ந்து பாதுகாப்பு அளிப்பதுடன், அதனால் விளையக்கூடிய நன்மைகளை அனுபவிப்பது மட்டுமல்லாமல் அடுத்த தலைமுறைக்கும் விட்டுசெல்ல முடியும்.

தொழிற்சாலைகளில் புதிய தொழில் நுட்பங்களை ஏற்படுத்துவதன் மூலம் தூய்மையான உற்பத்தி முறைகளைக் கடைப் பிடிக்கலாம். இதனால், குறைந்த செலவில் தரமான பொருள்களைத் தயாரித்து, அதனால் அடைந்த சேமிப்புகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்க இயலும். அதோடு மட்டும் அல்லாது, பொதுமக்களிடையே வளர்ந்து வரும் சுற்றுச்சூழல் பாதுகாப்பைப் பற்றிய அக்கறை, அவர்களை நம் பொருள்களை வாங்க தூண்டக் கூடிய காரணியாக அமையும். சுத்தமான உற்பத்தி முறைகளை செயல்படுத்துவதனால் உற்பத்தியில் வெளியாகும் நச்சுப் பொருள்கள் மற்றும் எச்சங்களின் அளவு குறைவதால், தொழிலாளர்கள் மற்றும் அலுவலக ஊழியர்களின் உடல்நலம் காக்கப்படும் பணியிடத்தில் பாதுகாப்பு நிலைகளும் அதிகரிக்கும்.

Also read: அறிவியல் போட்டியில் வெற்றி பெற்ற, தமிழக மாணவி ‘நாசா’வுக்கு  செல்கிறார்!

விரிவாக்கப்பட்ட தகவல் தொழில் நுட்பங்களால் உலகம் இன்று மிகவும் சுருங்கிவிட்டது. உற்பத்தி பொருள்களின் தரத்தில் நிறை, குறைகள் இருந்தால் அவை இணையதளத்தில் பல்லாயிரக்கணக்கான மக்களால் பேசப்படுகிறது. அந்தச் செய்திகள் பத்திரிக்கைகள், தொலைக்காட்சிகளின் வாயிலாக கணினி வசதி பெறாத மக்களை உடனடியாகச் சென்றடைகின்றன.

நிறுவனத்தின் நலன் கருதி எடுக்கப்படும் நடவடிக்கைகள், இணையதளம் மற்றும் பத்திரிகைகள், தொலைக்காட்சி வாயிலாக வாடிக்கையாளர்களுக்கு கொண்டு செல்ல பல்வேறு அரசு சாரா அமைப்புகள் இயங்கி வருகின்றன. தூய்மையான உற்பத்தி முறைகளை நிறுவனத்தில் செயல்படுத்தும் போது அவை, வாடிக்கையாளர்களின் வாங்கும் தன்மையை அதிகரிக்கும். எனவே, தொழில் முனைவோர் தாமாகவே முன்வந்து சுத்தமான உற்பத்தி முறைகளைக் கடைப்பிடிப்பதன் மூலம் வெற்றிகரமான இலக்கை எளிதில் அடையலாம்.

– த. செந்தமிழ்ச் செல்வன்

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

Subscribe to our latest news