Latest Posts

கை கொடுத்த, 17-வது தொழில்

- Advertisement -

ஓயாத போராட்டத்திற்கு பிறகுதான் வெற்றி! என்பது வரலாறு நமக்குச் சொல்லித் தரும் மாறாத பாடம். ஆனால், திரு. மாரிமுத்து அவர்கள் தம் தொழிலில் வெற்றி பெறுவதற்காக மேற்கொண்ட முயற்சிகள் கூடுதலானவை.பல்வேறு தொழில்களில் கால்பதித்து அதில் வெற்றி கிடைக்காமல், தான் ஈடுபட்ட பதினேழாவது தொழிலில்தான் அவரால் வெற்றிக்கனியை எட்டிப் பிடிக்க முடிந்திருக்கிறது.

காதல் மணம் புரிந்து, இரண்டு குழந்தைக்குத் தந்தை (இதில் ஒரு குழந்தை SPECIAL CHILD), உடன் பிறந்த இரண்டு தங்கைகளுக்கு ஆற்ற வேண்டிய கடமை. இப்படி குடும்பத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்துக்கொண்டு கூடவே சமூகத்திற்கு ஆற்ற வேண்டிய பணிகளையும் செய்தபடி இந்த வெற்றியை ஈட்டி உள்ளார்.

அவர் மேற்கொண்ட தொழில் பயணத்தை நம்முடன் பகிர்ந்து கொண்டார். அவருடைய பேட்டியிலிருந்து…

“எங்களுடைய பூர்வீகம் உத்தரமேரூர். தொழில் வாய்ப்பு தேடி சென்னைக்கு என் முன்னோர் குடிபெயர்ந்தனர்.

மயிலாப்பூரில் மிகப்பெரிய குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளில் ஒன்றான பல்லக்கு மாநகரில், நான் பிறந்தது முதல் வசித்து வருகிறேன்.

என் தந்தையார் மிகச்சிறந்த’ பிளம்பர்’. இது தொடர்பான ஒப்பந்த பணிகளை எடுத்து ஆட்களை வைத்து செய்வார்.

தொழிலில் நல்ல வருமானம் ஈட்டினார். ஆனால் குடிப்பழக்கம் அவரை ஆட்கொண்டது. பணி முடித்து மாலையில் பணத்துடன் வரும் அவரை ஒரு கும்பல் சூழ்ந்து கொள்ளும்.அனைவரும் குடித்து, என் தந்தையார் பாக்கெட்டில் இருக்கும் பணத்தை காலி செய்து விடுவார்கள். நாளடைவில் நிலைமை மோசமானது. குடிப்பழக்கம் எங்கள் குடும்ப நிம்மதியை சீர்குலைத்தது. என் தந்தையாரையும் செயல் இழக்க வைத்தது.என் தாயார் சரோஜா நான்கு பிள்ளைகளையும் காப்பாற்ற போராடினார்.

நான் பள்ளிப் படிப்பை முடிக்கும் முன்பே வருவாய் ஈட்ட வேண்டிய நிலையில் இருந்தேன்.

எல்டாம்ஸ் ரோட்டில் கிளினிக் வைத்து நடத்திய பிரபல மருத்துவரிடம் மாலை நேரத்தில் வேலை பார்த்துக் கொண்டே ப்ளஸ் டூ மற்றும் டிப்ளமா முடித்தேன்.

அதன்பிறகும் அப்பணியில் தொடர்ந்தபடி, பகல் நேரங்களில் பழரசம் விற்பனை செய்வது, துணி-மணிகள் விற்பது, அடுக்குமாடி குடியிருப்பு வீடுகளுக்கு காய்கறிகள் வாங்கி கொடுப்பது, போன்ற சிறு சிறு தொழில்களை செய்தேன். ஒரு கட்டத்தில் கம்ப்யூட்டர் உதிரி பாகங்களை வாங்கிவிற்றேன். கம்ப்யூட்டர் பழுது பார்க்கக் கற்றுக் கொண்டு அது தொடர்பான பணியிலும் ஈடுபட்டேன்.

இத்தகைய முனைப்புகளுக்கு இடையே என் இரண்டு சகோதரிகளின் திருமணத்தை நடத்தி முடித்தேன்.

மேற்கொள்ளும் தொழிலில் சீரான வளர்ச்சி கிடைக்காதபோது அடுத்த தொழிலுக்கு மாறினேன்.

2003 ம் ஆண்டில், சிறீ எஸ்.கே.எஸ் சப்ளையர்ஸ்(SRI S. K. S SUPPLIERS) என்ற பெயரில் துணிப்பந்தல்(Shamiyana) ,சாப்பாட்டு மேசை, நாற்காலி, சமையல் பாத்திரங்கள் போன்ற பொருட்களை வாடகைக்கு விடும் தொழில் தொடங்கினேன். ஒரு சிறிய கடையை வாடகைக்கு எடுத்து இதை செய்யத் தொடங்கியபோது ஆரம்பம் மிகவும் சிரமமாக இருந்தது.

கடை ஆரம்பித்த புதிதில் ஒரு நடுத்தர வயது பெண் “எனக்கு நான்கு பெண் குழந்தைகள் உள்ளனர். நான்தான் கஷ்டப்பட்டு வளர்த்தேன். முதல் பெண்ணுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு உள்ளது. சமையல் பாத்திரம் வேண்டும்,” என்றார்.என் தாயார் பட்ட சிரமங்கள் கண் முன் வந்தது. அப்போதுதான் புதிய “டபரா “வாங்கி வைத்திருந்தேன். மதிப்பு ரூ 6,000. அதை பெற்றுக்கொண்டு முன் பணம்கூட கொடுக்காமல் அப்பெண் சென்றார்.

உரிய காலத்தில் அவர் திரும்பத் தராததால் அவர் கொடுத்த முகவரிக்கு சென்றோம். அப்படி யாரும் அங்கு இல்லை என்று தெரிய வந்தது. தொடக்கமே அதிர்ச்சியை ஏற்படுத்திய தொழிலாக இருந்தது. ஆனாலும் முயற்சி செய்தேன். இராப்பகலாக கடினமாக உழைத்தேன் என் நண்பர்கள் நிறைய தொடர்புகளை ஏற்படுத்திக் கொடுத்தனர்.

வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை சீராக வளர்ந்து வருமானம் அதிகரித்தது.பத்தாயிரம் ரூபாய் முதலீடு படிப்படியாக உயர்ந்து பத்து லட்சம் ஆனது.என் தம்பி திரு. சுந்தரும் பக்கபலமாக இருந்து தொழில் வளர்ச்சிக்கு உதவுகிறார்.

தற்போது 300 சிறந்த வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள்.அவர்கள் வீட்டு நிகழ்ச்சிகள் என்றால் முதல் அழைப்பு எனக்கு தான் வரும்.மயிலாப்பூர், மந்தைவெளி, ராஜா அண்ணாமலைபுரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரவலாக இவர்கள் உள்ளனர்.

நிகழ்ச்சிகளுக்கு என்னிடம் தொடர்பு கொள்ளவும் போது, எது கேட்டாலும் ஒப்புக்கொண்டு, இல்லாத பொருளை என்னைப்போன்ற வணிகம் செய்யும் நண்பர்களிடம் வாங்கித்தருகிறேன் என்றார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மலைப்பகுதி கிளை செயலாளரான திரு. மாரிமுத்துவின் துணைவியார் திருமதி. சாமுண்டீஸ்வரி, இருவரும் காதல்மணம் புரிந்தவர்கள்.

திரு. மாரிமுத்து ஒரு புத்தகப் பிரியர். பண்டிகை தோறும் ஏராளமான புத்தகங்களை வாங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். “நேரம் கிடைக்கும்போது புத்தகங்கள் படிப்பேன்.பெரியார் எழுதியவற்றை விரும்பி படிப்பேன், என்கிறார் மகிழ்ச்சிபொங்க திரு. கா. மாரிமுத்து.

-ம.வி. ராஜதுரை

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

Subscribe to our latest news