இரண்டு கைகள் தட்டினால் தான் ஓசை வரும். அதைப்போலதான் நாமும் தொழி லாளர்களும். ஒருவருக்கு ஒருவர் முரண்பட்டால் நட்டம் என்னவோ நமக்குதான். அதனால் தொழிலாளர்களிடம் கண்டிப்புடன் இருக்க வேண்டும் அதேநேரம் தோழமையுடன் பழக வேண்டும். கடந்த காலத்தில் நாம் பெற்ற அனுபவமே நாளடைவில் நமது மனப்பான்மையாக மாறி விடுகின்றது. நாம் வாழ்க்கையில் புதுப்புது அனுபவம் பெறப் பெற நமது மனப்பான்மையும் மாறிகொண்டே வருகின்றது. ஒருகால கட்டத்தில் அதுவே நிலைத்து விடுகின்றது. ஒரு நிறுவனத்தின் வளர்ச்சி தொழிலாளர்களால் நிர்ணயிக்கப்படுவதால் அதைப் பற்றி அறிந்து கொள்வது அவசியம்.
உற்சாகத்தொழிலாளர்கள்:
நல்ல உள்ளங்களை பெற்றிருக்கும் தொழிலாளர்களை கொண்டிருக்கும் நிறுவனங்களில் சிக்கல்கள் குறைவு. லாபம் அதிகம். இவர்களை உற்சாகத் தொழிலாளர்கள், ஊக்கமான தொழிலாளர்கள் என்று சொல்லலாம்.
ஊக்கமற்ற தொழிலாளர்கள்:
ஏதோ வந்தோமா, வேலை செய்தோமா என ஏனோதானோ மனதினைப் பெற்ற உற்சாகம் இல்லாத தொழிலாளர்களை கொண்டிருக்கும் நிறுவனங்களில் சிக்கல்கள் அதிகம்; லாபம் குறைவு. அதனால் பணியாளர்களை தேர்வு செய்யும் நேரம் ஊக்கமுடைய தொழிலாளர்களாக தேர்வு செய்திட வேண்டும்.
சமயங்களில் இந்த குணம் கொண்ட தொழிலாளர்கள் பணியில் சேர்ந்து விடுவதுண்டு. இவர்கள் தொழிற்சாலையின் முன்னேற்றத்திற்கு விருப்பம் இல்லாதவர்களாகவும், பல சிக்கல்களுக்கு காரணமானவர்களாகவும் இருப்பார்கள். சரி, இது இவர்களுக்கு எதனால் ஏற்படுகின்றது. பொறாமை, சுய இரக்கம், உற்சாகமின்மை, குறை காணுதல், பணி முரண்பாடு, பணியில் களைப்பு, வயோதிகம், சட்டென்று உணர்ச்சிவசப்படுதல், தோல்விக்கு பிறரை காரணமாக சொல்லுதல், பயம், வயிற்றுக் கோளாறு, பணியில் கவனமின்மை, போதை மருந்து, மதுவுக்கு அடிமையாதல், குடும்ப சூழ்நிலை, குறைந்த வருமானம் ஆகிய ஏதாவது ஒரு காரணத்தால் ஏற்படுகின்றது. இப்படிப்பட்ட பணியாளர்களை கவனித்து, தனிப்பட்ட முறையில் அவர்களிடம் பேசி, நல்ல மனநல மருத்துவரை ஆலோசித்து சிகிச்சை அளிப்பது முக்கியம்.
குடும்ப சிக்கல், இருந்தால் தகுந்த ஆலோசனை வழங்குதல் தேவை. பணியிடத்தில் அவருக்கு சிக்கல் இருந்தால் அதனையும் கேட்டறிந்து சரிசெய்திட வேண்டும். முதலாளி தனிப்பட்ட முறையில் விசாரித்தாலே தொழிலாளர்கள் உற்சாகமடைந்து விடுவார்கள். பாதி சிக்கல் அதனாலேயே தீர்ந்து விடும். இந்த அணுகுமுறையை மட்டும் ஒவ்வொரு நிறுவன தலைவரும் கடைப்பிடித்தால் அவர்கள் தொழில் வளர்ச்சி அடைவதோடு நிறைந்த லாபமும் காண்பார்கள்.
-வேலன்