பெரிய நிறுவனங்களின் மேலாளர்கள், தங்களிடம் பணி புரிவோரை சிறப்பாக பணிபுரிய வைக்க என்ன செய்யலாம்?
உங்கள் எதிர்பார்ப்புக்கு ஏற்ப செயல்படும் பணியாளர்களை அவ்வப்போது அழைத்து பாராட்டுங்கள். வெற்றிப் பயணத்தின் தொடக்கம் அதுதான். ஆனால் இந்த பாராட்டுரைகள் அர்த்தமுள்ளதாக இருக்க வேண்டுமென்றால், பாராட்டுக்குப் பின், ”இன்னும் அதிகமாக உங்களிடம் எதிர்பார்க்கிறேன்” என்று கூறுங்கள்.
குழுவாகச் செயல்பட கூப்பிடுங்கள்
குழுவாக இணைந்து பணியாற்றும் மனப்பான்மையை உங்கள் தொழிலாளர்களுக்கு இடையே உருவாக்குங்கள். அதே போல் அவ்வப்போது மொத்த குழுவினரையும் பாராட்ட மறக்காதீர்கள். அப்போதுதான் குழுவின் பணி வலிமையை அனைவரும் உணர்வார்கள். தொழிற்சாலையின் இலக்குகளை எட்ட இது உங்களுக்கு உதவும். நீங்கள் அவர்களிடம் வேலை வாங்குபவராக இருக்கலாம். உங்களுக்கு எல்லாம் தெரிந்திருக்கலாம். ஆனால் அதைக் காட்டிக் கொள்ளாமல் “வாருங்கள், நீங்கள் இப்படி முயற்சிக்கலாம்” என ஆலோசரனயாகச் சொல்லுங்கள். அவர்கள் விருப்பத்துடன் செய்வார்கள்.
முன்மாதிரியாக நடந்து கொள்ளுங்கள்
உங்களை உங்கள் பணியாளர்களும், தொழிலாளர்களும் எப்படி நடத்த வேண்டும் என விரும்புகிறீர்களோ அவ்வாறே நீங்களும் அவர்களை நடத்துங்கள். உங்களுக்கும் மகிழ்ச்சி, அவர்களுக்கும் மகிழ்ச்சி. உங்கள் வாடிக்கையாளர்களுக்கு இணையாக பணியாளர்களையும் நடத்த வேண்டிய காலக் கட்டம் இது.
செய்திகளை நீங்களே கூறுங்கள்
உங்கள் தொழிலாளர்களுக்கும், அலுவலர்களுக்கும் உங்கள் நிறுவனத்தில் என்ன நடக்கிறது என்பது உங்கள் மூலமாகத் தெரியட்டும். அவர்களுக்கு நீங்களே அனைத்தையும் கூறுங்கள். எப்படி உங்கள் வணிகம் நடக்கிறது, அலுவலகம் இயங்குகிறது, என்ன சாதிக்கிறது என்று கூறுங்கள். நிறுவனம் ஈடுபடும் தொழில் பிரிவில் புதிதாய் ஏற்படும் சூழ்நிலைகளை அவ்வப்போது அவர்களுக்கு நீங்களே கூறுங்கள். தொழிலில் வரும் போட்டிகளை எப்படி எதிர்கொள்ளலாம் என்று விவரமான தொழிலாளர்களிடம் ஆலோசனைகளைக் கேளுங்கள்.
நீங்களே நிர்வாகம் செய்யுங்கள்
நிர்வகிப்பது என்பது நம்பிக்கையின் அடிப்படையில் எழுவது, அமைவது. நல்ல முடிவுகளை உங்கள் தொழிலாளர்கள் எடுக்கும் போது அவற்றின் மீது நம்பிக்கை வையுங்கள். ஆனால் செயல்படுத்தும்போது அவை உங்களுடையதாக இருக்கட்டும். உங்கள் நிறுவனத்தின் நடத்துநர் நீங்களே. ஒவ்வொரு திசையிலிருந்தும் என்ன இசை வரவேண்டும் என்பதைத் தீர்மானித்து அதனை வாவழைப்பதே உங்கள் பணி. அப்படி இல்லாமல் உங்கள் கண்காணிப்பு இல்லையேல் இசைக்குப் பதிலாக ஓசைதான் வரும்.
– நிலவொளி
Also Read:
- குறைந்த முதலீட்டுத் தொழில்கள்!
- வாஸ்து பார்த்தால் ஜோதிடருக்கு லாபம், பார்க்காவிட்டால் நமக்கு லாபம்!
- கடன் பெற்று வீட்டுப் பயன்பாட்டுப் பொருட்களை வாங்கலாமா?