(இந்த கேள்வியைக் கேட்டு இருப்பவர், திருவாரூரைச் சேர்ந்த திரு. செல்வக் களஞ்சியம். உங்கள் கேள்விகளை [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கலாம்)
இது போன்ற கேள்விகளுக்கு சரியாக வழி காட்டிக் கொண்டு இருப்பவர் சேமிப்பு ஆலோசகர் திரு. ஆனந்த் சீனிவாசன்தான். இவருடைய பேட்டிகள் நிறைய இணையத்தில் உள்ளன. கண்டிப்பாக பார்க்க வேண்டிய பேட்டிகள்.
அவர் எதையுமே கடனுக்கு வாங்காதீர்கள் என்கிறார். எந்தப் பொருளை வாங்க வேண்டுமானாலும் சேமித்து, அந்த பொருளுக்கான தொகை சேர்ந்த உடன் வாங்குவதுதான் சிறந்தது என்கிறார். அல்லது நம் சம்பாத்தியத்தில் பெரும்பங்கு வட்டி கட்டவே போய் விடும் என்று எச்சரிக்கிறார். குறிப்பாக கார் வாங்க வேண்டும் என்றால் கூட சேமித்து வாங்கச் சொல்கிறார். இப்படிப்பட்ட வீட்டுப் பயன்பாட்டுப் பொருட்களின் விலை மதிப்பு வாங்கிய உடனேயை குறையத் தொடங்கி விடும். எனவே கடன் மூலம் வாங்கினால் இரட்டை இழப்பு என்று அவர் சொல்வது முழுக்க முழுக்க உண்மை.
30% சேமிப்பு ஆகட்டும்
இன்னும் ஒரு முதன்மையான ஆலோசனையையும் சொல்கிறார். அது, எவ்வளவு சம்பளம் வாங்கினாலும், அல்லது பொருள் ஈட்டினாலும் அதில் இருந்து 30 விழுக்காட்டை சேமிப்பாக்கி விட வேண்டும் என்கிறார். கிரடிட் கார்டு, டெபிட் கார்டு மூலம் வீட்டுப் பொருள்கள் வாங்குவது குறித்தும் அவர் எச்சரிக்கிறார். கையில் பணத்தைக் கொண்டு போய் பொருட்களை வாங்கினால் தேவைக்கேற்ப செலவழிப்போம். கார்டு என்றால் தேவையற்ற பொருட்களை வாங்கவும் தயங்க மாட்டோம் என்று அவர் கூறும் எல்லோரும் எடுத்துக் கொள்ள வேண்டிய கருத்து. அதே நேரத்தில் தங்கத்தை காயின்களாக வாங்கி வைத்துக் கொள்வதை அவர் ஆதரிக்கிறார். நகைகளாக வாங்கும்போது சேதாரம் என்று நிறைய கூட்டி விடுவார்கள். அதிலும் கல் வைத்த நகைகளை வாங்கவே கூடாது என்கிறார். இதற்குக் காரணம், தங்கத்தின் விலை வாங்கியதற்குப் பிறகு குறையாது என்பதோடு அவசரத்தேவைக்கு கைகொடுப்பதிலும் தங்கத்துக்கு நிகர் எதுவும் இல்லை என்கிறார்.
ஓரளவுக்கு சேமிப்பு இருந்தவர்களே இந்த கொரோனா காலத்தை கடன் இல்லாமல் தாக்குப் பிடித்துக் கொண்டு இருப்பதைப் பார்க்கும்போது, இனியாவது வாழ்வில் இவர் சொன்ன வழிமுறைகளை அனைவரும் நிச்சயம் கையாள வேண்டும் என்று தோன்றுகிறது.
ராசிபலன், ராகுகாலம் பார்ப்பது நல்லதா?
– என். சண்முகம், திருவண்ணாமலை
நேரத்துக்கும், பணத்துக்கும் கேடு. நிச்சயமாக நல்லது இல்லை. அறிவியல் சார்ந்து சிந்திப்பவர்களுக்கு இந்த ராசிபலன், ஜோசியம், ஜாதகம், வாஸ்து, பரிகாரம், நல்ல நேரம், கெட்ட நேரம் மீது எல்லாம் நம்பிக்கை இருக்காது. இவைகள் குறித்த அச்சம் இல்லாமல் சுதந்திரமான மனநிலையுடம் செயல்படுவார்கள். நீங்களும் இத்தகைய நம்பிக்கைகளில் இருந்து விடுபட்டு வாழ்ந்து பாருங்கள்; அது தரும் தன்னம்பிக்கையே தனி.