கேள்வி: ஆடி மாதம் உறவு கொள்ளக் கூடாது, அப்படி உறவு கொண்டால் சித்திரை மாதம் குழந்தை பிறக்கும். அப்படி சித்திரை மாதம் குழந்தை பிறந்தால் தகப்பனுக்கு ஆகாது என்று கூறுகிறார்கள். இது உண்மையா? – மு. சங்கீதா, நாகப்பட்டினம்
பதில் – டாக்டர் டி. காமராஜ், எம்.டி.,: உலகம் முழுவதும் பல்லாயிரக் கணக்கான குழந்தைகள் சித்திரை மாதம் பிறக்கின்றன. அவ்வாறு பிறக்கும் குழந்தைகளால் அவர்களுடைய தந்தைகளுக்கு எந்த ஆகாத செயல்களும் நடப்பது இல்லை. சித்திரை மாதம் குழந்தை பிறந்தால் தகப்பனுக்கு ஆகாது என்பது மிகப்பெரிய மூடநம்பிக்கை.
மூடநம்பிக்கைகள் பல இப்போது சில ஊடகங்கள் மூலம் நியாயமற்ற முறையில் பரப்பப்படுகின்றன. ‘கோடீஸ்வரன் ஆக வேண்டுமா? பெயரை மாற்றுங்கள்; அல்லது பெயரில் உள்ள எழுத்துகளை மாற்றுங்கள்?’ என்கிறார், ஒரு ஜோசியர். ‘வீட்டின் அமைப்பை மாற்றுங்கள்; வாசலை மாற்றுங்கள்’ என்கிறார் வாஸ்து ஜோசியர். இவர்கள் பணம் கொடுத்து ஊடகங்களைப் பயன்படுத்தி மக்களை ஏமாற்றுகிறார்கள். இவை அனைத்தும் அறிவியலுக்குப் புறம்பானவை. நம் அறிவை பாழ்படுத்தக் கூடியவை.
பன்னிரெண்டு ராசிகள் மனிதர்களின் வாழ்வை தீர்மானிப்பதாக இவர்கள் எந்த விதமான ஆதாரமும் இல்லாமல் சொல்கிறார்கள். அறிவியல் மனப்பான்மை இல்லாத மக்கள் அனைவரும் ராசிபலனை படிக்கத் தவறுவது இல்லை. தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்புகிறார்கள்.
மிகத் தொலைவில் உள்ள கிரகம் சனி ஆகும். இதற்கு காலதேவனின் பெயரை ரோமானியர்கள் இட்டனர். நம்மவர்கள் இந்த சனி தொன்னூறு கோடி மைல் தாண்டி வந்து நம்மைப் பிடிப்பதாக நம்புகிறார்கள். இதில் ஏழரை நாட்டுச் சனி என்று வேறு சொல்லிக் கொள்கிறார்கள். எத்தனையோ பெண்களின் திருமணம் தடைபடுவதற்கு காரணமாக இருப்பது செவ்வாய் தோஷம். செவ்வாய் கிரகம் பூமியைப் போன்ற பருவ நிலைகள் கொண்ட கிரகம் ஆகும். அறிவியல் அறிஞர்கள் ராக்கெட் செலுத்தி செவ்வாயை ஆய்வு செய்து பல உண்மைளை அறிவித்து வருகிறார்கள்.
எனவே தகப்பனுக்கு ஆகாது என்பது போன்ற தவறான நம்பிக்கைகளில் இருந்து மீண்டு வாருங்கள். உங்களைச் சுற்றி உள்ள உறவினர்கள், நண்பர்கள் வீடுகளிலேயே சித்திரை மாதம் பிறந்தவர்களைக் காணலாம். அவர்கள் அப்பாக்கள் எந்த சிக்கலும் இல்லாமல் மகிழ்ச்சியுடன் இருப்பதையும் காணலாம்.
சித்திரை மாதம் கடுமையான வெயில் காலம்; அந்த மாதம் குழந்தை பிறந்தால் புழுக்கமாக இருக்கும், அதனால்தான் என்றும் சொல்வது உண்டு. இப்போது வீட்டுக்கு வீடு ஏசி வந்து விட்டது. எனவே இந்த காரணமும் பொருந்தாது.