Latest Posts

ஐஐஎம் எம்பிஏ.வில் இடம் பிடிப்பது எப்படி?

- Advertisement -

(இந்த கேள்வியைக் கேட்டு இருப்பவர் – ச. மகாலட்சுமி, வள்ளியூர்)

எம்.பி.ஏ. என்ற மாஸ்டர் ஆஃப் பிசினஸ் அட்மினிஸ்ட் ரேஷன் என்ற படிப்பு இன்று உலகம் முழுவதும் பெரிதும் மதிக்கப்படுகிறது. குறிப்பாக தொழில் – வணிக உலகத்தில் இதற்கு இருக்கும் வரவேற்பே தனிதான். காரணம் தொழில் னனநிர்வாகத்துக்குத் தேவையான ஏராளமான பாடங்கள், செய் முறைகள் எம்.பி.ஏ., வில் இடம் பெறுகின்றன.

இதனால் பெரிய தொழிலதிபர்களின் வாரிசுகள், எதிர்காலத்தில் தொழிலில் கால்பதிக்க எண்ணும் இளைஞர்கள் – இளைஞிகள், மிகப்பெரிய நிறுவனங்களின் நிர்வாகிகளாக பொறுப்பேற்க விரும்பும் மாணவர்கள் என்று பலரும் எம்.பி.ஏ. படிக்க விரும்புகிறார்கள்.

Valar.in வாசகர்களாக இருக்கும் மாணவர்களுக்கும், மற்றவர்களுக்கும் கூட எம்.பி.ஏ. படிக்கும் விருப்பம் இருக்கக்கூடும். தொழிலியல் சார்ந்த படிப்பு என்பதால் இதைப் பற்றிய விவரங்கள் அனைத்தையும் இங்கே தொகுத்துத் தருகிறார் பேராசிரியர் நெல்லை கவிநேசன் எம்.பி.ஏ.,
ஒரு கம்பெனியை எப்படி நிர்வகிக்க வேண்டும் என்ற விவரங்களை இரண்டே ஆண்டுகளில் கற்றுத் தரும் படிப்பு இது.
முன்பெல்லாம் பி.ஏ., பி.எஸ்சி பட்டதாரிகள்தான் இதில் சேர்ந்தார்கள். ஆனால் இப்போது நிலைமை மாறி விட்ட து. பி.இ. (B.E.), பி.ஆர்க் (B.Arch) எம்.இ., (M.E) எம்.எஸ்சி, எம்.ஏ. பட்டம் பெற்றவர்கள் கூட விரும்பி எம்.பி.ஏ.வில் சேருகிறார்கள்.
எம் பி .ஏ. வில் மார்க்கெட்டிங், உற்பத்தி, நிதி, மூலப்பொருள் வாங்குதல், ஆட்களை நிர்வகித்தல் போன்ற பல முக்கிய பாடங்களை கற்றுத் தருகிறார்கள்.

இதில் சேர குறைந்தது பட்டப் படிப்பில் 50 முதல் 55 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். சில கல்வி நிறுவனங்கள் 50 சதவீத மதிப்பெண் பெற்றவர்களை எம்.பி.ஏ. படிப்பில் சேர்த்துக் கொள்கின்றன. ஆனால் பல நிறுவனங்கள் 55 சதவீத மதிப்பெண் பெற்றவர்களைத்தான் நுழைவுத் தேர்வு எழுதவே அனுமதிக்கின்றன.

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தின் பட்டம் பெற்றவர்கள் எம்.பி.ஏ. நுழைவுத் தேர்வு எழுத தகுதி உடையவர்கள். பட்டப்படிப்பில் மூன்றாம் ஆண்டு படித்துக் கொண்டிருப்பவர்களும் நுழைவுத் தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம்.

எம்.பி.ஏ. படிப்பில் மாணவர் சேர்க்கை 3 கட்ட தேர்வுக்குப் பின்னரே நடைபெறும். அவை

  • நுழைவுத்தேர்வு (Entrance Exam)
  • குழுவிவாதம் (Group Discussion)
  • நேர்முகத்தேர்வு (Personal Interview)

நுழைவுத்தேர்வு

எம்.பி.ஏ. நுழைவுத்தேர்வில் ஆங்கிலம் (General English), கணிதம் (Arithmatics), கொடுக்கப்பட்ட தகவல்களிலில் இருந்து விவரங்களை தெரிந்து கொள்ளுதல் (Data interpretation) போன்றவற்றில் கேள்விகள் அமையும். இந்த தேர்வில் வெற்றி பெற்றவர்கள் குழுவிவாதத்திற்கு அழைக்கப்படுவார்கள்.

எம்.பி.ஏ. நுழைவுத் தேர்வு தொடர்பான பல புத்தகங்களை படித்து அதில் கேட்கப்படும் கேள்வி முறைகளை தெரிந்து கொள்ள வேண்டும். சில பயிற்சி நிறுவனங்களிலும், கல்லூரிகளிலும் எம்.பி.ஏ. நுழைவுத் தேர்வுக்கான பயிற்சிகளை அளிக்கிறார்கள்.

குழுவிவாதம்

குழு விவாதம் (Group Discussion) என்பதில் நான்கு முதல் ஆறு பேர்கள் கொண்ட குழு உறுப்பினர்கள், விவாதத்தைக் கவனித்து மதிப்பெண் வழங்குவார்கள். இந்த விவாதத்தில் ஏதேனும் தலைப்பினை கொடுப்பார்கள்.

சான்றாக சமுதாயமும், வணிகமும் (Society and Business) என்ற தலைப்பினை குழுவில் உள்ளவர்களுக்கு கொடுத்து ஆங்கிலத்தில் விவாதிக்கச் சொல்வார்கள்.

குழு உறுப்பினர்கள் எப்படி விவாதத்தில் கலந்து கொள்கிறார்கள், கருத்தை எப்படி மறுக்கிறார்கள்? கண்ணியமுடன் நடந்து கொள்கிறார்களா? கருத்துடன் விவாதிக்கிறார்களா? என்பன போன்ற பல விஷயங்களை கவனித்து மதிப்பெண் வழங்குவார்கள். குழு விவாதத்தில் வெற்றி பெற்றவர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள்.

நேர்முகத்தேர்வு

நேர்முகத் தேர்வில் மாணவரின் அறிவுத்திறன், தோற்றம், பழகும் முறை, முடிவெடுக்கும் தன்மை போன்றவற்றை சோதனை செய்கிறார்கள். நேர்முகத் தேர்வில் வெற்றி பெற்றவர்களை எம்.பி.ஏ. படிப்பில் சேர்த்துக் கொள்கிறார்கள்.

மூன்று கட்ட தேர்விலும் வெற்றி பெற மாணவர்கள் தொடக்க காலத்திலிருந்தே கடுமையாக உழைக்க வேண்டும்.

எல்லாவற்றிற்கும் மேலாக எந்தெந்த கல்வி நிறுவனங்களில் எம்.பி.ஏ. படிப்புகள் உள்ளன. அவை அரசு அங்கீகாரம் பெற்றவைதானா? இந்திய அளவில் புகழ்பெற்ற கல்வி நிறுவனங்கள் எவை? போன்ற செய்திகளையும் கூர்ந்து கவனித்து தொடக்கம் முதலே செயல்பட வேண்டும்.

பட்டப்படிப்பில் இரண்டாமாண்டு முடிந்ததில் இருந்தே பல கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்க வேண்டியதிருப்பதால் பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்கள் முதலாண்டு தொடக்கத்திலேயே எம்பிஏ. நுழைவுத் தேர்வுக்கு தயார் செய்யத் தொடங்கி விடவேண்டும். எம். பி. ஏ. படிப்பு எங்கெல்லாம் உள்ளது!

இந்தியாவிலேயே தலைசிறந்த மேலாண்மைக் கல்வி (Management Education) நிறுவனமாக செயல்படுவது “ஐ.ஐ.எம்.” (I.I.M.) என அழைக்கப்படும் “இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் மேனேஜ்மென்ட் ” (Indian Institute of Management) ஆகும்.

இந்த கல்வி நிறுவனம் அகமதாபாத் பெங்களூர், கல்கத்தா, லக்னோ, திருச்சி, பெங்களூரு, கோழிக்கோடு, இந்தோர், ராஞ்சி, ரோட்டக் ஆகிய இடங்களில் உள்ளன.

பட்டப்படிப்பில் மூன்றாமாண்டு படிக்கும் மாணவர்கள் கூட இதில் சேர நடத்தப்படும் நுழைவுத் தேர்வில் கலந்து கொள்ளலாம். இந்த நுழைவுத் தேர்வை ‘கேட்’ (CAT – Common Admission Test) என அழைப் பார்கள். இந்த நுழைவுத் தேர்வு பற்றிய அறிவிப்பு பொதுவாக ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதங்களில் வெளியிடப்படும். இப்போது கொரோனா அனைத்தையும் தள்ளிப் போடச் செய்து இருப்பதால் பெரிய மாற்றங்கள் நடந்து கொண்டு உள்ளன. கல்வி நிறுவனங்களின் அறிவிப்புகளுக்காக காத்திருந்து அவற்றிற்கேற்ப செயல்பட வேண்டும்.

அனைத்து இடங்களிலும் உள்ள ஐ.ஐ.எம் நிறுவனங்களுக்கெல்லாம் சேர்த்து ஒரே நுழைவுத்தேர்வுதான் (CAT) நடத்தப்படுகின்றது. பட்டப் படிப்பில் குறைந்தது இரண்டாம் வகுப்பு (Second Class) மதிப்பெண்கள் எடுத்தவர்கள் இந்த நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். நுழைவுத் தேர்வுகள் பெரும்பாலும் டிசம்பர் மாதம் நடத்தப்படும்.

கேட் (Cat) எனப்படும் நுழைவுத்தேர்வு மொத்தம் இரண்டு மணி நேரம் நடைபெறும். இந்த இரண்டு மணிநேரத்தில் 255 கேள்வி களுக்கு விடையளிக்க வேண்டும். எனவே ”எவ்வளவு குறுகிய நேரத்தில் எத்தனை கேள்விகளுக்கு சரியான விடை எழுதுகிறோம்” என்பதுதான் எம்.பி.ஏ. நுழைவுத் தேர்வில் மிகமுக்கியமான அம்சமாகும்.

கல்லூரியில் படிக்கும் சில மாணவர்கள் “இது அகில இந்திய அளவில் நடக்கும் தேர்வு, நமக்கெல்லாம் எங்கே இதில் இடம் கிடைக்கப்போகிறது” என எண்ணி இந்த தேர்வை எழுதாமல் விட்டு விடுகிறார்கள். அவர்களின் எண்ணம் தவறானது. முயன்றால் நிச்சயம் வெற்றி பெறலாம். iim இணையத்தில் தேடினால் மேலும் தேவையான தகவல்களைப் பெறலாம்.

– பேராசிரியர் நெல்லை கவிநேசன்

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

Subscribe to our latest news