செலவுகளைக் கட்டுப்படுத்த வெளியாட்களிடம் ஆலோசனை கேட்பதை விட, அத்தொழிலில் இருக்கும் சீனியர்களின், புத்திசாலி ஊழியர்களின் சொல்லைக் கேட்பதில் லாபம் அதிகம். தொழிற்சாலைகளிலும், நிறுவனங்களிலும் பணியாற்றுவோர் தம் நிறுவனம் என்னென்ன செலவுகளை மேற்கொள்கிறது என்பது குறித்து தெளிவாக அறிந்திருப்பர். அவர்களை அழைத்து செலவுகளை குறைப்பதற்கான ஆலோசனைகளைக் கேட்கலாம். நல்ல ஆலோசனை சொல்பவருக்கு வெகுமதியும் வழங்கலாம்.
பாட்டிலில் விற்கப்பட்டு வரும் குளிர்பானங்களை வீட்டிற்கு எடுத்துச் செல்வதற்கு வசதியாக பெட் பாட்டிலில் அடைக்கும் யோசனையைக் கூறியது ஒரு சாதாரண தொழிலாளிதான். இதனால் பாட்டிலைத் திரும்ப எடுத்துச் செல்லும் செலவு, நிறுவனத்திற்கு குறைந்தது. மேலும் பெட் பாட்டிலை தனியாக தயாரித்து விற்றதால் லாபமும் கூடியது.
வட்ட வடிவில் இருக்கும் மாத்திரையை டியூப் வடிவிற்கு மாற்றியதும் ஒரு சாதாரண பணியாளரின் சிந்தனைதான். இப்படி மாற்றியதால் மாத்திரைகள் உடைந்து வீணாவது குறைந்தது.
இட்லி விற்பனையில் விற்காமல் போன இட்லியால் ஏற்பட்ட இழப்பை எப்படி ஈடு கட்டுவது என்று சிந்தித்ததனால், இன்று இட்லிக்கு பதிலாக இட்லி மாவையே விற்கும் தொழில் தமிழ்நாட்டில் கொடிகட்டிப் பறக்கிறது. இட்லிக்கடை போட்டாலும் ஒரு இடத்தில் தான் வியாபாரம் செய்ய முடியும். ஆனால் இட்லி மாவையே விற்றால் அது நான்கு நாட்கள் வரை கெடாமல் இருக்கும் என்பதால் நகரம் முழுக்க விற்பனை செய்யும் வாய்ப்புகளும் தோன்றின.
இந்தச் சிந்தனைகள் எல்லாம் வெளியிலிருந்து பார்ப்பவருக்கு ஏற்பட்டதல்ல. அத்தொழிலிலேயே உழன்று ஒவ்வொரு நாளும் கடுமையாக உழைக்கும் பணியாளர்களின் சிந்தனையில் உதித்தவையே. உங்கள் நிறுவனத்திலும் ஊழியர்களை நீங்கள் சிந்திக்கச் செய்தால் செலவுகள் குறையும். புதிய தொழில் வாய்ப்புகளும் பெருகும்.
வெகுமதிகள் மூலம் ஊழியர்களை ஊக்குவிக்கலாம்!
எந்தச் சிக்கலுக்கும் நேர்மறை, எதிர்மறை என இரண்டு வகையான தீர்வுகள் உண்டு. ஒரு தொழிற்சாலையில் பல தொழிலாளிகள் தொடர்ந்து தாமதமாக வந்து கொண்டிருந்தனர். நிர்வாகமோ ஊழியர்களின் காலதாமதத்தை கட்டுப்படுத்த முடியாமல் நாள்தோறும் புதிய விதிமுறைகளை அறிமுகப்படுத்தியது.
‘மூன்று நாள் தாமதமாக வந்தால் அரை நாள் சம்பளம் கழிக்கப்படும், தொடர்ந்து தாமதமாக வருவோர் பொது மேலாளரைச் சந்தித்து உரிய காரணத்தைத் தெரிவிக்க வேண்டும். மீண்டும் தாமதமாக வந்தால் மன்னிப்பு கடிதம் எழுதித் தர வேண்டும்.’ என்றெல்லாம் ஊழியர்களுக்கு சட்டம் விதித்தது. ஆனாலும் பலனேதும் இல்லை.
இந்தச் சிக்கலை எப்படித் தீர்த்திருக்க வேண்டும்…?
மற்றொரு நிர்வாகம் செய்த வேலையைப் பாருங்கள். நாள்தோறும் முதலில் வரும் தொழிலாளிக்கு மாதம் ரூ.1,000 வெகுமதி, இரண்டாவதாக வருபவர்களுக்கு ரூ.500; மூன்றாவதாக வருவதற்கு ரூ.300 என வெகுமதிகளை அறிவித்தது. தாமதமாக வரும் ஒவ்வொரு நிமிடத்திற்கும் ஒரு ரூபாய் அபதாரம்.
கரும்பு தின்னக் கூலி என்றால் கேட்கவா வேண்டும்? தொழிலாளர்கள் மத்தியில் நிறுவனத்திற்கு தாமதமின்றி வரும் கலாச்சாரம் தோன்றத் தொடங்கியது. நன்றாக வேலை செய்பவரைத் தட்டிக் கொடுத்தும் தவறு செய்பவரை குட்டியும் வேலை வாங்கிய திட்டம் நல்ல பலன ளித்தது.
ஒரு மாதம் முழுவதும் விடுப்பே எடுக்காமல் வருபவருக்கு ரூ.1,000 என்ற மற்றொரு சலுகையையும் அதே நிர்வாகம் அறிவித்தது. மாதந்தோறும் இரண்டு நாட்கள் சம்பளத்துடன் விடுப்பு எடுக்கலாம் என்ற நிலை இருந்த போதிலும்கூட வெகுமதிக்கு ஆசைப்பட்டு தொழிலாளிகள் விடுப்பிற்கு விடுப்பு விட்டனர்.
சிந்தித்துப் பாருங்கள். சுமார் 100 தொழிலாளர்கள் பணியாற்றும் ஒரு இடத்தில் இது போன்ற சலுகையால் நிர்வாகத்திற்கு ஓரளவு கூடுதல் செலவுகள் இருக்கத்தான் செய்யும். ஆனால், பணியாளர்களின் கூடுதல் உழைப்பின் மூலம் கிடைக்கும் வருமானத்தை கணக்கிட்டால் இந்தச் செலவு மிகக் குறைவே!
பணியாளர்கள் செலவுகளை நிர்ணயுங்கள்!
ஊழியர்களோ, அதிகாரிகளோ வெளியூருக்கு பயணம் மேற்கொண்டால் அவர்களுக்கான பயணச் செலவுகளை நிர்வாகமே ஏற்றுக் கொள்வது வழக்கம். பொதுவாக போக்குவரத்து செலவுகளில் எந்த வரம்பையும் ஒரு நிறுவனம் மேற்கொள்ள முடியாது. ஆனால், தங்குமிடம், உணவு போன்றவற்றிற்கு ஆகும் செலவுகளுக்கு தோராயமாக ஒரு குறிப்பிட்ட தொகையை ஒதுக்கிவிட்டால் நிறுவனத்துக்கும் செலவு அதிகமாகாது. பணியாற்றுவோருக்கும் பணத்தை மிச்சம் பிடித்து, சேமித்துக் கொள்ள வசதியாக இருக்கும்.
எடுத்துக்காட்டாக, ஒரு ஊழியர் வெளியூர் செல்லும்போது அவருக்கு பிடித்த ஏதேனும் ஒரு ஓட்டலில் தங்கி, அவர் விருப்பப்பட்ட உணவுகளையெல்லாம் சாப்பிட்டு நிறுவனத்திற்கு செலவுகளை அதிகப்படுத்தக் கூடும். அந்தச் செலவு நாளொன்றுக்கு ரூ.2000 ஆகவும் இருக்கலாம். ரூ.4000 ஆகவும் இருக்கலாம். அவர் எவ்வளவு செலவழிப்பார் என்பது தெரியாமல் இருப்பதைவிட, நிர்வாகமே முன்வந்து நாளொன்றுக்கு ரூ.2,500 எனக் கொடுத்துவிட்டால், அவர் தம்முடைய சொந்தக்காரர் வீட்டில் கூட தங்கிக்கொண்டு காசை மிச்சப்படுத்துவார். இது நிறுவனத்திற்கும் கூடுதல் செலவைத் தவிர்க்கும்.
இப்படி எல்லாச் செலவுகளுக்கும் ஒரு குறிப்பிட்ட தொகையை நிர்ணயித்து விட்டால் செலவு கட்டுக்கடங்காமல் போவது கட்டுப்படுத்தப்படும்.
–இராம்குமார் சிங்காரம், நிதிஆலோசகர்