கொஞ்சம் பேர்கள் வாங்கினாலும் போதும்!
தொழில் தொடங்குவதற்கு இது மட்டும்தான் ஃபார்முலா என்று எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. மாறுதலாக சிந்திப்பவர்கள், புதிது புதிதாகச் சிந்திக்கிறார்கள். செயல்படுகிறார்கள். அவர்களுக்கு இருக்கும் வாய்ப்புகளை முழுமையாகப் பயன்படுத்துகிறார்கள். பெரிய பணக்காரக் குடும்பத்தில் பிறந்து விட்டோம்; நாம் எதற்கு பொருளீட்ட வேண்டும் என்று இத்தகைய குடும்பத்தில் பிறந்த புதிய தலைமுறையினர் நினைப்பதாகத் தெரியவில்லை. முதலீட்டுக்கு பணம் ஒரு பொருட்டு இல்லை எனும்போது, துணிச்சலாக முடிவெடுக்கிறார்கள்.
முப்பது ஆண்டுகளாக உலோகம் சார்ந்த பொருள்கள் விற்பனைத் தொழிலில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் குடும்பத்தைச் சார்ந்த திரு. ஷிஷிர் மேத்தா (Shishir Mehta), தொடங்கியது விலை அதிகம் உள்ள சென்ட் விற்பனைத் தொழில். ஏதாவது மாறுதலான தொழில் ஒன்றைத் தொடங்க வேண்டும் எண்ணிய இவர் கண்டு பிடித்தது, பர்ஃப்யூம்கள் விற்பனை.
பொதுவாகவே ப,ர்ஃப்யூம் பயன்படுத்தும் வழக்கம் பெரிய அளவில் அதிகரித்து உள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை, முன்பெல்லாம் முஸ்லீம்கள்தான் அதிகமாக சென்ட் பயன்படுத்துபவர்களாக இருந்தார்கள். அதனாலேயே இன்றைக்கும் பொதுவாக சென்ட்கள் விற்பனைக் கடைகளை அவர்களே அதிக அளவில் நடத்தி வருகிறார்கள். அண்மைக் காலமாக மணமூட்டும் திரவங்களை அனைவருமே பயன்படுத்தத் தொடங்கி விட்டார்கள். இதனால் இதன் சந்தையும் பெரிதாகி விட்டது. அழகழகான பாட்டில்களில், விதம்விதமான நறுமணங்களுடன் உலகம் முழுவதும் பெரிய சந்தையைப் பிடித்து உள்ளது. இன்றைக்கு சற்று பெரிய மளிகைக் கடைகளில் கூட இத்தகைய நறுமணத் திரவங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. நகரங்களில் உள்ள மால்களில் இதற்கென தனிக் கடைகளே போடப்பட்டு உள்ளன.
நறுமண திரவங்களை விரும்பிப் பயன்படுத்தும் திரு. ஷிஷிர் மேத்தா, தனது பர்ஃப்யூம் கடை மாறுதலாக இருக்க வேண்டும் என்பதற்காகவும் கூடுதலாக லாபம் வரும் வகையில் இருக்க வேண்டும் என்பதற்காகவும் தீவிரமாக சிந்தித்து, அதிக விலை கொடுத்து வாங்கத் தயாராக உள்ள பணக்காரர்களை மட்டுமே குறி வைத்து தனது தனது சென்டிடோ (Scentido) விற்பனையகத்தை அமைத்தார். ஆயிரம் சதுர அடியில் அழகான இன்டீரியருடன் அமைக்கப்பட்ட கடையில், ஏழாயிரம் ரூபாயில் தொடங்கி இரண்டரை லட்ச ரூபாய் வரை விலை உள்ள பர்ஃப்யூம் பாட்டில்களை அடுக்கினார்.
இப்படி விலை கூடிய நறுமண திரவங்களை விற்பனை செய்வதில் இவரை முந்திக் கொண்ட வேறு நிறுவனங்களும் இருக்கின்றன. அல்லி மட்டான் கிரியேஷன், 2004-ல் அகல்யா மட்டான் என்பவரால் தொடங்கப்பட்டது. 2015- ல் பர்ப்யூம் லைப்ரரி தொடங்கப்பட்டது. அதைத் தொடரந்து பாம்பே பர்ஃப்யூமரி 2016-ல் தொடங்கப்பட்டது.
பர்ஃப்யூம் துறையில் நல்ல அனுபவம் பெற்ற திருமதி. ஜான்வி டேமரான் நந்தன் எனபவரால் தொடங்கப்பட்ட பர்ஃப்யூம் லைப்ரரி பற்றி அவர் கூறும்போது, எங்கள் நிறுவனம் உலகிற்கு கிடைத்தற்கு அரிய கிராஸ்மித், மேரி கிரீன்வெல் போன்ற நறுமணங்களை அளிக்கிறோம் என்கிறார்.
இதே போல திரு. மனன் காந்தி என்பவரின் பாம்பே பர்ஃப்யூமரி, சாய் மஸ்க், மதுரை டாக்கீஸ், காலிகட் போன்ற நறுமணங்களை வழங்குகிறது.
இந்த சந்தை நுகர்பொருள் சந்தை போன்ற பெரிய சந்தை இல்லையென்றாலும், இந்த சந்தையின் குறிப்பிட்ட வாடிக்கையாளர்கள் தொடர்ந்து நறுமணங்களின் மீது ஆர்வம் காட்டுபவர்கள் என்பதால், விற்பனை அதிகரிக்கிறது.
ஷிஷிர் மேத்தா, உலகம் முழுவதும் சுற்றி, எங்கெங்கே மாறுதலான நறுமண திரவங்கள் கிடைக்கின்றனவோ, அவற்றை நேரடியாக இவரே கொள்முதல் செய்கிறார். ”எங்கள் வாடிக்கையாளர்கள் குறிப்பிட்ட எண்ணிக்கையில் உள்ளவர்கள்தான். இருப்பினும் அவர்களின் தொடர் தேடல் எங்கள் வணிகத்தை வளர்த்துக் கொண்டிருக்கிறது.” என்கிறார், இவர். தமிழ் நாட்டைப் பொறுத்தவரை இந்த அளவுக்கு உச்ச விலை வைத்து விற்பனை செய்யக்கூடிய பர்ஃப்யூம் கடைகளை அவ்வளவாக பார்க்க இயலவில்லை. வழக்கமான கடைகளில் ஒன்றிரண்டு அதிக விலை உள்ள பர்ஃப்யூம்களை பார்க்க முடிகிறது.
– நேர்மன்