கடனை வாங்குவதை நம் முன்னோர் ஆதரிக்கவில்லை. ”கடன்பட்டார் நெஞ்சம் போலக் கலங்கினான் இலங்கை வேந்தன்” என்றெல்லாம் கூட இலக்கியங்களில் படித்து இருக்கிறோம். ஆனால் அந்தக் காலத்தில் கடன் வாங்கத் தேவை இல்லாத சூழ்நிலை இருந்து இருக்கக் கூடும். மேலும் கடன் வாங்கி விட்டால் திரும்பக் கட்டுவது பற்றிய அச்ச உணர்வு அதிகம் இருந்திருக்கலாம். இன்றைக்கும் கூட கடன் வாங்காமல் இருப்பது என்பது கொள்கை அளவில் நல்லதுதான். இப்போதும் கூட வீட்டுச் செலவுக்கு என்று கடன் வாங்குவது அத்தனை வரவேற்கத்தகுந்த செயல் அல்ல.
ஆனால் தொழில் என்று வரும்போது இந்தக் கருத்துக்கு அங்கே இடம் இல்லை. தொழில் வளரவளர அதில் உருவாகும் வாய்ப்புகளைப் பயன்படுத்தி வளர்ச்சி அடைய எண்ணுபவர்கள் கடன் வாங்கித்தான் ஆக வேண்டும். தேடித்தேடிப் பார்த்தாலும் இன்று உலகில் கடன் வாங்காத தொழில் நிறுவனங்களே கிடையாது. தொன்னுற்று ஒன்பது விழுக்காடு நிறுவனங்கள் கடன் வாங்கித்தான் தங்கள் தொழிலை வளர்க்கின்றன. எனவே கடன் வாங்காமல் யாரும் தொழிலில் வளர முடியாது.
தொழில் தொடங்க நிறைய முதலீடு தேவைப்படுகிறது. அவ்வளவு பணம் யாரிடமும் ரொக்கமாக இருக்காது. தங்களிடம் இருக்கும் சொத்தை பிணையமாக காட்டி தொழிலுக்குத் தேவையான ரொக்கப் பணத்தைப் பெற முடியும் என்கிறபோது அதைப் பயன்படுத்துகிறார்கள். பெரிய, சிறிய என்று எந்தத் தொழில்கள் ஆனாலும் அவற்றில் அவர்கள் சொந்தப் பணம் என்பது கால் பங்குதான் இருக்கும்.
எந்த திட்டத்துக்கும் தொடங்குநர் முதலீடு குறைந்த அளவாக இருபத்தைந்து விழுக்காடு வேண்டும். பெரிய திட்டங்களில் இந்த அளவுக்கு தொடங்குநர் முதலீடு இல்லாவிட்டால் பொது மக்களுக்கு பங்குகளை வெளியிட்டுத் திரட்டிக் கொண்டு பின்னர் நிதி நிறுவனங்களிடம் கடனுக்குச் செல்கிறார்கள். எனவே தொழிலுக்கு கடன் வாங்குவது தவறு அல்ல. வாங்கிய கடனைத் தவறாகப் பயன்படுத்தினால் அதுதான் தவறு.
ஒரு தொழில் முனைவோர் கடன் பெறுவது குறித்து எப்போது திட்டமிட வேண்டும்? ஒரு தொழில் முனைவோரின் முதல் தேவை என்ன தொழில் செய்யலாம் என்பது குறித்த ஐடியா. அதாவது தொழில் தேர்வு. என்ன தொழில் என்ற ஐடியா வந்தவுடன் அது தொடர்பான திட்டம் இரண்டாவது தேவை ஆகும். தொழில் தொடங்க பணம் மட்டும் போதாது. இன்றைக்கு ஐடியாதான் விலை மதிப்பு இல்லாதது. அடுத்ததாக தொடங்குநர் முதலீட்டுத் தொகை, நிர்வாக அறிவு, பிணையம் கொடுப்பதற்கான சொத்து இவை அனைத்தும் இருந்தால் அதுதான் கடன் பற்றிய முயற்சிகளைத் தொடங்க சரியான நேரம் ஆகும். நல்ல திட்டம் ஆக இருந்தால் எத்தனையோ நிதி நிறுவனங்கள் கடன் வழங்கக் காத்துக் கொண்டு இருக்கின்றன. வங்கிகள் புதியபுதிய கடன் திட்டங்களையும்
அறிவித்துக் கொண்டு இருக்கின்றன.
கடன் வாங்கித் தொழில் செய்யும் போது வீண் செலவுகள் செய்யக் கூடாது. குறிப்பாக சிறு தொழில் அதிபர்கள் நட்சத்திர ஓட்டல், உடனே கார் என்று தேவையற்ற செலவுகளில் பணத்தைச் செலவழித்து விட்டு மாட்டிக் கொள்ளக் கூடாது.
பொது முடக்கம் நிறைய தொழில்களை பாதித்து இருக்கிறது. இதில் இருந்து மீண்டு வர தொழில் முனைவோர் கடுமையான உழைப்பைச் செலுத்த வேண்டிய நேரம் இது. புதிய தொழில்களை தொடங்க திட்டம் இடுவோர் பொது முடக்கத்தில் இருந்து முழுமையான தளர்வுகள் வரும் வரை காத்திருந்து பின்னர்தான் தொடங்க வேண்டும்.
– வி. கே. சுப்புராஜ், ஐஏஎஸ் (மேனாள் இயக்குநர், தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் – TIIC)