ஓவியத்துக்கு அடிப்படைக் கலைக் கூறுகளாக கோடு, வடிவம், இடப்பரப்பு, வண்ணம், தகை நேர்த்தி, இழைநயம் போன்றவைகள் எவ்வாறு இன்றி அமையாதவை ஆக இருக்கின்றனவோ, அவற்றைப் போலவே, ஓவியத்தின் பண்புக் கூறுகளாக சமநிலை (பேலன்ஸ்), கூட்டு ஒருமை (யூனிட்டி), மாறுபட்ட தன்மை (கான்ட்ராஸ்ட்), முதன்மை (எம்பசிஸ்), அசைவுத் தன்மை (மூவ்மென்ட்), நயம் (ரிதம்), பாங்கு (பேட்டர்ன்) போன்றவை சம அளவில் முதன்மை வாய்ந்தவை ஆக இருக்கின்றன. இவை ஓவியத்துக்கு மட்டும் அல்ல; டிசைன்களை உருவாக்குவதற்கும் பொருந்தும்.
ஒரு மரத்தைப் பார்ப்போமேயானால், அடி முதல் நுனி வரை சுற்றிலும் இயற்கை ஆகவே அமைந்து உள்ள கிளைகளிலும், இலைகளிலும் அசைவுத் தன்மையைப் பார்க்கலாம். ஒரு சுவரொட்டியில் (போஸ்டர்) எழுதப்படுகின்ற எழுத்தின் அளவிலும், பயன்படுத்தப்படுகின்ற வண்ணங்களிலும் மாறுபட்ட தன்மை இருக்கும். அந்த சுவரொட்டியின் சில பகுதிகள் முதன்மைப்படுத்தப்பட்டு (எம்பசிஸ்) இருக்கும். மாறுபட்ட தன்மை உள்ள வண்ணங்கள் (கான்ட்ராஸ்ட்) பயன்படுத்தப்பட்டு இருக்கும்.
ஒரு ஓவியத்தைப் பார்த்தால், அதை வரைந்த ஓவியன் எவ்வாறு ஒரு குறிப்பிட்ட வண்ணத்தை அல்லது வடிவத்தை திரும்பத் திரும்ப பயன்படுத்தி நயத்தை (ரிதம்) கொண்டு வருகிறான் என்பதைக் காணலாம்.
சமநிலை (Balance)
அடிப்படையில் மூன்று வகையான காட்சிச் சமநிலைகள் இருக்கின்றன. 1. சமச்சீர் அமைவு உடைய சமநிலை (Symmetrical). 2. சமச்சீர் அற்ற சமநிலை (Asymmetrical) 3. ஆரங்களை உடைய சமநிலை (Radial).
சமச்சீர் அமைவு உடைய சமநிலை அல்லது ஒழுங்கு முறை தவறாத சமநிலை என்பது, வரைபடத்தின் நடு செங்குத்துக் கோடு அல்லது நடுக் கோட்டை அடித்தளமாகக் கொண்டது. நுழைவு வாயில் முன்னால் இருந்து பார்த்தால் அதன் இருபுறமும் சம அளவில் இடைவெளி உள்ள சன்னல்களை உடைய கட்டடங்களை இதற்கு சான்றாகச் சொல்லலாம்.
சமச்சீர் அற்ற சமநிலை தற்போது பொதுவாக இக்கால ஓவியர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட முறையாக இருக்கிறது. ஒரு ஓவியத்தின் மையத்துக்கு அருகில் உள்ள ஒரு பெரிய வடிவம், மையத்துக்கு தொலைவில் உள்ள சிறிய வடிவத்தால் சரிசமநிலைப் படுத்தப்படலாம். இதற்கு செய்தித் தாள்களில் வரும் விளம்பரங்களைச் சான்றாகக் கூறலாம்.
ஆரங்களை உடைய சமநிலை, வட்டத்தை அடிப்படையாகக் கொண்டது. வடிவமைப்புகளின் கூறுகள் மையப் புள்ளியில் இருந்து வெளி நோக்கி வரும். இதற்கான எடுத்துக் காட்டுகளில் ஒன்றாக இருக்கும் வண்டிச் சக்கரம், சக்கரத்தின் மைய அச்சில் (Axle) இருந்து, சக்கரத்தின் விளிம்புக்கு (Rim) வரும்.
கூட்டு ஒருமை (Unity)
அனைத்தும் ஒன்றோடு ஒன்று சேர்ந்து பொருந்தி முழுமை உடையது ஆக ஆக்குகிறது இது. திட்டம் இட்டு அமைக்கப்பட்ட குடி இருப்புப் பகுதி, அங்கே இருக்கும் மரங்கள், கட்டடங்கள், தெருக்கள், அனைத்துக்கும் ஒன்றுக்கு ஒன்று தொடர்பு இருக்கும் வகையில் வடிவமைக்கப்படுவதை கூட்டு ஒருமைக்கு எடுத்துக் காட்டாகக் கூறலாம். ஒரு மரத்தைப் பார்க்கும்போது, அடிமரம், கிளைகள், இலைகள், பூக்கள் கூட்டு ஒருமைக்கு இன்னும் ஒரு சான்று ஆகும். ஒரு சுவரொட்டியைப் பார்த்தால். அந்த சுவரொட்டி சொல்லுகின்ற செய்தியை சிரமம் இன்றி பெறும் வகையில் இருந்தால் அதுதான் வடிவமைப்பின் கூட்டு ஒருமை எனப்படும்.
மாறுபட்ட தன்மை (Contrast)
அளவில் மிகப்பெரிய இடப்பரப்பைக் கொண்டு உள்ள மேசை அறை, சிறிய இடப்பரப்பைக் கொண்டு உள்ள மேசை அறை உடன் மாறுபாடு கொண்டு உள்ளது. அதே போல கோடுகளில் நேர்க் கோடு, வளைவுக் கோடு, வலிவுக் கோடு, மெலிவுக் கோடு என்று கான்ட்ராஸ்ட் தன்மைகளைக் கொண்டு உள்ளன. ஓவியர்களும், டிசைனர்களும் கோடு, வடிவம், வண்ணம், தகை நேர்த்தி மற்றும் இழை நயத்தின் எண்ணற்ற மாறுபட்ட தன்மைகளை தங்கள் படைப்புகளிலும், டிசைன்களிலும் பயன்படுத்தி அதன் எழிலை அதிகரிக்கின்றனர். ஒரு ஓவியம் அல்லது சிற்பத்தை ஆராய்ந்து பார்த்தால் அதில் உள்ள கான்ட்ராஸ்ட்களை கண்டு தெரிந்து கொள்ளலாம்.
முதன்மை (Emphasis)
ஓவியர்களும், சிற்பிகளும், கைத்தொழில் கலைஞர்களும் தங்களுடைய படைப்புகளில் பல்வேறு முதன்மைத் தன்மைகளை அறிமுகம் செய்கிறார்கள். நம்முடைய கண்கள் ஓர் இடத்தில் இருந்து மற்றோர் இடத்துக்கு முறையாக நகரும் வகையில் ஓவியங்களை, டிசைன்களை, சிற்பங்களை அமைக்கிறார்கள்.
அசைவுத் தன்மை மற்றும் நயம் (Movement and Rhythm)
ஒரு கட்டடத்தில் மாறுபட்ட தன்மைகளைக் கொண்ட செங்கல், சிமென்ட், மரம், கண்ணாடி போன்ற பொருட்களைப் பயன்படுத்தி இணைத்து இருப்பது, வெளிப்புறத்தின் மேற்பரப்பில் நயத்தைக் கொடுக்கின்றன. ஒரு கட்டடத்தில் உள்ள செங்குத்துக் கோடுகள் மேலே போகப் போக அசைவுத் தன்மையைக் கொடுக்கிறது. ஒரு ஓவியர் அல்லது டிசைனரின் விருப்பத்திற்கு ஏற்ப அவர்களின் படைப்புகளில் அசைவும், நயமும் இடம் பெற்று இருக்கும்.
பாங்கு (Pattern)
நாம் அணிந்து இருக்கும் உடைகளில், சன்னல்களில் தொங்கும் திரைகளில், தரை விரிப்புகளில், தரையில் – சமையல் அறையில் பதிக்கப்பட்டு இருக்கும் டைல்ஸ்களில் பேட்டர்ன்களைக் காண முடியும். சூரியன் அடிவானத்தில் இருக்கும்போது நிலத்தின் நிழல்கள் வாயிலாக எழிலான பேட்டர்ன்கள் உருவாவதைக் காண முடியும். ஓவியர்களும், டிசைனர்களும் வெவ்வேறு வகையான அடிப்படைக் கலைக் கூறுகளை இணைத்து பல்வேறுபட்ட பேட்டர்ன்களை உருவாக்குகிறார்கள்.
ஓவியம், டிசைன்கள் சார்ந்த பண்புக் கூறுகளை புரிந்து கொள்ளும் ஆற்றல் வளர வளர நம்மால் அனைத்து கலை வடிவங்களையும் மதிப்பீடு செய்யவும், உணர்ந்து மகிழவும் தொடங்குவோம். அதே நேரத்தில் ஓவியம், டிசைன் துறைகளில் செயல்படுபவர்களுக்கு இந்த அறிவு வளர்ச்சி அவர்கள் ஆற்றலை மேலும் உயர்த்தி அவர்கள் வளர்ச்சியை உறுதிப்படுத்தும்.
– ஓவியப் பேராசிரியர் கு. புகழேந்தி