இன்றைக்கு வணிகத்தில் வாடிக்கையாளர்களின் வகைகளையும், அவர்களின் மனநிலையை அறிந்து கொள்வது என்பது மிகப் பெரிய சவாலான பணி ஆகும். ஒவ்வொரு வாடிக்கையாளரும் ஒவ்வொரு விதமாக முடிவு செய்வதைப்பார்க்க முடியும். எனவே வணிகம் என்பது பொருட்களை மட்டும் சார்ந்தது இல்லை.
சான்றாக ஒரு வாடிக்கையாளருக்கு பழச்சாறு அல்லது குளிர்பானம் அருந்த வேண்டும் என்று தோன்றுகிறது என்று வைத்துக் கொள்வோம். அவர் சிக்கனம் பார்ப்பவராக இருந்தால் சாலை ஓர வண்டிக் கடையில் அருந்தி விட்டுப் போவார். கொஞ்சம் கூடுதிலாக செலவழிக்க எண்ணுபவர் ஒரு உணவகம் சென்று மேஜையில் அமர்ந்தபடி அருந்தி விட்டுச் செல்வார். அவர் காரில் சென்று கொண்டு இருப்பவராக இருந்தால் காரை நிறுத்துவதற்கு இடம் உள்ள பெரிய உணவகத்துக்கு செல்வார். இப்படி வாடிக்கையாளர்கள் ஒரு பொருளை வாங்க வேண்டும் என நினைக்கும் போது அவர்கள் விருப்பத்தையும், பொருளாதாரத்தையும், பழக்கத்தையும் பொறுத்து எங்கிருந்து வாங்க வேண்டும்? என்ன விலையில் வாங்க வேண்டும்? எப்போது வாங்க வேண்டும்? என தீர்மானம் செய்து கொள்கின்றனர்.
சமூகத்தின் மதிப்பு
சிலர் தங்கள் பக்கத்து வீட்டுக்காரர்கள் வாங்கி விட்டார்கள் என்பதற்காகவோ அல்லது உறவினர்களிடம் இருக்கிறது என்பதற்காகவோ சில பொருட்களை வாங்க நினைப்பார்கள். தங்களுக்கு தேவை இல்லாவிட்டாலும் கூட இந்த பொருட்களை வாங்கத் தயங்க மாட்டார்கள். அவர்கள் விலை பற்றிக் கூட பெரிதாக கவலைப்பட மாட்டார்கள். அதிலும் பெரிய பிராண்டுகளையே வாங்க விரும்புவார்கள். அதனால் தங்கள் சோசியல் ஸ்டேட்டஸ் உயர்வதாக கருதுவார்கள். இன்னும் ஒரு சாரார் பிராண்டுகளைப் பற்றிக் கவலைப்படாமல் அந்த பொருளின் தரம், விலையை மனதில் கொண்டு வாங்குவார்கள்.
பொருளின் நோக்கம்
சிலர் தங்கள் அன்புக்குரியவர்கள் கேட்டு விட்டார்கள் என்பதற்காக வாங்குவார்கள் அன்பு மிகுதிப்பாடு விலையையோ, தரத்தையோ பற்றி கவலை கொள்ளச் செய்வதில்லை. “என் மனைவி கேட்டு விட்டாள், அது எவ்வளவாக இருந்தாலும் பரவாயில்லை என்பவர்கள் இந்த ரகம். சிலர், எல்லா கடைகளிலும் ஏறி இறங்கி எங்கு விலை குறைவாக இருக்கிறதோ அங்குதான் வாங்குவார்கள். இவர்களின் ஒரே நோக்கம் பணத்தை மிச்சப்படுத்த வேண்டும் என்பதே.
அழகு சாதனப் பொருள்கள் வாங்கும் போது விலை பற்றி கவலைப் படாமல் வாங்குகிறவர்கள், வீட்டுக்குத் தேவையான இன்றியமையாத பொருட்களை வாங்கும்போது விலை குறைவாக இருக்கிறதா எனறு கருதுவதைப் பார்க்கலாம். ஆடைகளை மற்றவர்களை கவர வேண்டும் என்ற எண்ணத்தோடு வாங்குகிறவர்களும் விலையைப் பற்றிக் கவலைப்பட மாட்டார்கள். தங்கள் தேவைக்கு என வாங்குகிறவர்கள் மற்றவர்கள் பற்றிக் கவலைப் படாமல் தங்கள் பட்ஜெட்டுக்குள் இருக்கிறதா என்றே பார்ப்பார்கள்.
இப்படிப்பட்ட பலவகையான வாடிக்கையாளர்களை பற்றி விற்பனையாளர்கள் அறிந்து வைத்து இருக்க வேண்டும். ஒரு வாடிக்கையாளரை சந்தித்துப் பேசும்போதே அவர் எந்த வகையான வாடிக்கையாளர் என்பதைத் தெரிந்து கொண்டால், அவருக்கு ஏற்றபடி பொருட்களை பரிந்துரைத்து வணிகத்தை முடிக்கலாம்.
– எவ்வி
Also Read:
- சந்தைப்படுத்தல் எளிதல்ல; திட்டமிட்டு செயல்பட வேண்டும்!
- நாங்கள் ஏன் பெயரை மாற்றினோம் ?
- என்னுடைய ஆர்வம் சார்ந்த தொழில்!