ஒரு நிறுவனம் அடுத்த கட்டத்தை நோக்கிச் செல்வதற்குப் புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தினால், நிச்சயம் வளர்ச்சிக்கு அதிக வாய்ப்புகள் உள்ளன என்று கூறுகிறார் டேப்ட்ரீ (Tab Tree) நிறுவனர் திரு. விஜயன். நமது இதழுக்காக அவரிடம் பேட்டி காண சென்னை இராயப்பேட்டையில் உள்ள அவரது நிறுவனத்திற்குச் சென்றோம். அப்போது அவர் இவ்வாறு கூறினார்-
“நான் ஒரு பொறியியல் பட்டதாரி. 2001 ஆம் ஆண்டு தங்கவேலு பொறியியல் கல்லூரியில் எலக்ட்ரிக்கல் அண்டு எலக்ட்ரானிக்ஸ் துறையில் பட்டம். பெற்றேன். கல்லூரியில் படிக்கும்போதே நண்பர்களுக்காக கணினிகளை பழுதுபார்க்கும் வேலையைச் செய்து வந்தேன். 2001 -ல் கல்லூரி முடிந்தது. எனது நண்பர்கள் அனைவரும் வேலை தேட ஆரம்பித்தனர்.
அப்போது ஐடி துறை மிகவும் சரிவடைந்த நிலையில் இருந்தது. அதனால் மிகக் குறைந்த ஊதியம் மட்டுமே தரத் தயாராக இருந்தார்கள். அதனால், கல்லூரி முடிந்து சில நாட்களிலே எனது நண்பர் ஒருவருடன் சேர்ந்து கம்ப்யூட்டர் சேல்ஸ் அண்டு சர்வீஸ் செய்ய ஆரம்பித்தேன்.
அப்போது சவுக்கார் பேட்டையில் ஒரு சிறிய இடத்தில் எங்களது நிறுவனத்தை பிட்ஸ் அண்டு பைட்ஸ் என்ற பெயரில் ஆரம்பித்தேன். தொடக்கத்தில் வீடுகள், அலுவலகம் என எங்கெல்லாம் கணினியில் சிக்கல் உள்ளதோ, அங்கே சென்று அவர்களிடம் இருந்து கணினியை எடுத்து வந்து சரிசெய்து ஒரு நாளிலே டெலிவரி செய்து விடுவோம். ஆறு ஆண்டுகள் வரை இந்த சேல்ஸ் அண்டு சர்வீஸ் வேலையை செய்து வந்தோம். அப்போது நிறைய அனுபவங்கள் கிடைத்தன.
எனக்கு புதிய தொழில்நுட்பங்களை அறிவதும், அவற்றைப் பயன்படுத்தி அலுவலகங்களில் உள்ள தொழில்நுட்பச் சிக்கல்களுக்கு தீர்வு காண்பதும் மிகவும் விருப்பமான ஒன்றாக இருந்தது. அதன் காரணமாக 2006 ஆம் ஆண்டு அதே பெயரில் ஐடி கன்சல்டிங் சேவையை ஆரம்பித்தேன். அதாவது ஒரு நிறுவனத்திற்கு கணினி தொடர்பாக தேவையான அனைத்து வசதிகளையும் வழங்குதே இதன் நோக்கம்.
நான் தொடங்கியது ஐடி கன்சல்டிங் நிறுவனம்தான். ஆனாலும் நான் சேல்ஸ் அண்டு சர்வீஸ் சேவையையும் இதே பெயரில் நடத்தி வந்ததால் எங்களை ஒரு ஐடி கன்சல்டிங் நிறுவனமாக யாரும் பார்க்கவில்லை. எந்த வரவேற்பும் இல்லை. அதனால் மார்க்கெட்டிங் மற்றும் பிராண்டிங் என்பதும் ஒரு நிறுவனத்திற்கு எவ்வளவு முக்கியம் என்பதை அறிந்து கொண்டேன் பின்னர் டேப்ட்ரீ என்று எங்கள் நிறுவனத்தின் பெயரை மாற்றினோம். அதற்கென வெப்சைட் நிறுவினோம்.
Also read:டிடிஎச் சேவைகளில் வந்துள்ள புதிய தொழில் நுட்பங்கள்!
நான் எனது நிறுவனத்திற்கான சிறந்த மார்க்கெட்டிங் ஆக நினைப்பது எங்கள் நிறுவனத்தால் மனநிறைவு அடைந்த வாடிக்கையாளர், எங்களின் சேவையை மற்றவர்களுக்கு பரிந்துரை செய்வதைத்தான்.
எங்கள் நிறுவனத்தில் தற்போது பல சேவைகள் இருக்கின்றன. அவற்றுள் முதன்மையாக நான்கு சேவைகள் உள்ளன. அவை, இன்ஃப்ரா கன்சல்ட்டிங், டேர்ன் கீ ப்ராஜெக்ட், மெயின்ட்டனன்ஸ், டேட்டா கேப்சர் ஆகும். இந்த நான்கிற்குள் எங்களது அனைத்து சேவைகளும் அடங்கும். இன்ஃப்ரா கன்சல்டிங் என்பது, ஒரு நிறுவனத்திற்கு தேவையான அனைத்துக் கணினிகளையும் அமைத்துக் கொடுப்பது. அதில் பயன்படுத்தும் ஒவ்வொரு பொருளையும் எங்கு வாங்க வேண்டும், எந்த தரத்தில் வாங்க வேண்டும் என அனைத்து விவரங்களுக்கும் ஆலோசனை தருவோம்.
டேர்ன் கீ ப்ராஜெக்ட் என்பது புதிதாக ஆரம்பிக்கப்படும் நிறுவனம் எங்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு அவர்கள் நிறுவனத்திற்கு என்னென்ன தேவை என்பதை கூறிவிடுவார்கள். அதற்கு ஏற்றாற்போல் கணினி அமைத்தல், மென்பொருள் நிறுவுதல், இணைய இணைப்பு ஏற்படுத்துதல், ஆன்ட்டி வைரஸ் நிறுவுதல், பேக்கப் எடுத்தல், செக்யூரிட்டி அலெர்ட் செட்டிங்ஸ் என அனைத்தையும் முடித்துக் கொடுப்போம். மெயின்ட்டனன்ஸ் என்பது கணினி அமைத்த பிறகு எந்த சிக்கல் வந்தாலும் அதனை சரி செய்ய எங்களது பொறியாளர் ஒருவர் அந்த நிறுவனத்திலேயே இருப்பார்.
டேட்டா கேப்சர் என்பது ஒரு நிறுவனம் பற்றிய அனைத்து விவரங்களையும் சேகரிப்போம். அதாவது, எங்கள் சேவைகளை செயல்படுத்துவதற்கு முன்னர், மற்றும் செயல்படுத்திய பின்னர் என இரு வகையாக தரவுகளை சேகரிப்போம். எங்கள் சேவைகளுக்கு முன்னர் அவர்களது செயல்பாட்டுக்கான வேகம் மற்றும் தெளிவு, தரம் ஆகியவற்றால் அவர்களது லாபம் எவ்வளவு இருந்தது, எங்கள் சேவைகளை செயல்படுத்திய பின்னர் எவ்வாறு இருந்தது என்று இந்த தரவுகள் மூலம் தெரிந்து கொள்ள முடியும்.
எங்கள் சேவைகள் நடுத்தர நிறுவனங்களுக்குப் பெரிதும் பொருந்தும். எங்களிடம் தற்போது 800 நிறுவனங்கள் வாடிக்கையாளர்களாக இருக்கின்றனர். நாங்கள் நிறுவனம் தொடங்கிய காலத்தில் 4 ஊழியர்கள் மட்டுமே இருந்தனர். தற்போது எங்களிடம் 134 ஊழியர்கள் இருக்கிறார்கள். மற்றும் பாண்டிச்சேரி மற்றும் சென்னையில் எங்கள் நிறுவனம் இருக்கிறது. பெங்களூர் மற்றும் சேலத்தில் எங்கள் எங்களது குழுக்கள் உள்ளன.
எனது தொழில்நுட்பத் திறமைக்கு ஏற்றவாறு எனது இலக்குகளையும் வைத்து இருக்கிறேன். இன்னும் அதை நான் அடையவில்லை. அதை அடையத் தேவையான வேலைகளைச் செய்து வருகிறேன் என்றார், திரு. விஜயன் (9840990784).
– எஸ். உஷா