Latest Posts

டிடிஎச் சேவைகளில் வந்துள்ள புதிய தொழில் நுட்பங்கள்!

- Advertisement -

கடந்த ஐந்து ஆண்டுகளாக சென்னை மாதவரத்தில் டாட்டா ஸ்கை டிடிஎச் ((DTH) Direct-To-Home) சேவையை தனி உரிமைக் கிளை (Franchise) முறையில் இத்தொழிலை நடத்தி வரும் திரு. எல். செந்தில்குமார் அவர்களை வளர்தொழில் இதழுக்காக சந்தித்தபோது,
“டாட்டா ஸ்கை 2006 ல் தொடங்கப்பட்டது. நான் 2007 ல் இருந்து டாட்டா ஸ்கை நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தேன். சொந்தமாக 2013 செப்டம்பர் மாதம் 27ஆம் நாள் எங்கள் மாதவரம் தனி உரிமைக் கிளையைத் தொடங்கினோம்.
டிடிஎச் சேவையை நடுத்தர குடும்பத்தினர் முதல் வருமானம் அதிகம் உள்ள மக்கள் வரை அனைவரும் விரும்புகிறார்கள். நடுத்தர குடும்பத்தினர் அவர்கள் வசதிக்கு ஏற்ப மாதம் 200 ரூபாய் வரை வரும் சேனல்களை மட்டும் தேர்ந்தெடுத்து பார்ப்பார்கள். ஆனால் வருமானம் அதிகம் இருப்பவர்கள் கட்டணம் பற்றிக் கவலைப்படாமல் அவர்களுக்கு பிடித்த அனைத்து சேனல்களையும் சந்தா செலுத்தி பார்ப்பார்கள்.

இப்போது ஸ்மார்ட் டிவி பயன்படுத்தி தொலைக் காட்சி பார்ப்பவர்கள் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகின்றது. நெட்ஃப்ளிக்ஸ், அமேசான் பிரைம், சன்நெக்ஸ்ட், ஹாட் ஸ்டார் போன்றவற்றால் டிடிஎச் சேவைகளுக்கு எந்தவித பாதிப்பும் இருக்காது. ஏனென்றால் கேபிள் டிவியில் இருந்து டிடிஎச் சேவைக்கு மாற பல ஆண்டுகள் தேவைப்பட்டது. இருப்பினும் மக்கள் அனைவருமே கேபிள் டிவியில் இருந்து தற்போது வரை டிடிஎச்-க்கு மாறவில்லை. இதனால் டிடிஎச் சேவைகளில் இருந்து ஸ்மார்ட் டிவிக்கு மாறவும் இன்னும் பல ஆண்டுகள் தேவைப்படும். இதனால் டிடிஎச் சேவைக்கு எந்த வித பாதிப்பும் இருக்காது என்பதுதான் உண்மை.

வாடிக்கையாளர்கள் இருப்பிடங்களுக்கு சென்று அங்கு உள்ள பொருத்தும் இடங்கள் தொடர்பான சிக்கல்களைத் தாண்டி டிடிஎச் கருவியை மிகச் சரியாக பொருத்துவது என்பது ஒரு சவாலான செயலே. அப்படி கருவிகளை கையாள மற்றும் பொருத்துவதற்கு என நிறுவனத்தால் சென்னையிலேயே ஆறு நாட்கள் சிறப்பு பயிற்சி வழங்கப்படுகின்றது. இந்த பயிற்சி முடித்து சான்றிதழ் பெற்றவர்களையே புதிய சந்தாக்களுக்கு டிடிஎச் கருவிகளை பொருத்த அனுப்புவோம். சான்றிதழ் பெறாத எவரையும் கருவிகளை பொருத்த நிறுவனம் அனுமதிப்பது இல்லை.

டாட்டா ஸ்கை ஒரு பெரு நிறுவனம் என்பதால் எங்களுக்கும் வாடிக்கையாளருக்கும் இடை பணப்பரிமாற்றம் என்பது எந்த காலத்திலும் நேரடியாக இருக்காது. எங்களுக்கும்வாடிக்கையாளருக்கும் உள்ள ஒரே தொடர்பு என்பது சேவை கருவிகளைப் பொருத்தி இணைப்பு கொடுப்பது மற்றும் பழுது நீக்கும் சேவைகளின் போது மட்டும்தான். பணப்பரிமாற்றம் முழுக்க முழுக்க ஆன்லைனில்தான் நடைபெறும். அவர்கள் கணக்கில் இருந்து நிறுவனம் ஆன்லைனிலேயே பெற்றுக் கொள்ளும். எங்களுக்கு சேர வேண்டிய வர்த்தக கழிவு தொகை நிறுவனத்தால் எங்களுக்கு வழங்கப்படும்.

கடந்த டிசம்பர் மாதம் டிஆர்ஏஐ ((TRAI) Telecom Regulatory Authority of India) புதிய விதிமுறைகளை அறிவித்தது. அவை 2019 ஜனவரி மாதம் முதல் நடைமுறைக்கு வந்துள்ளன. இந்த புதிய விதிமுறைகளால் எங்களை போன்றவர்களை விட வாடிக்கையாளர்களுக்குதான் மிகுந்த தொல்லை. அந்த புதிய விதிமுறைகளால் ஏற்பட்டுள்ள அவதிகளை, சிக்கல்களை சரி செய்வதற்கு டாட்டா ஸ்கை நிறுவனத்தின் மேம்பாட்டாளர் குழு தனியே இதற்கென ஒரு சாஃப்ட்வேரை கண்டுபிடித்து அதனை டாட்டா ஸ்கை மொபைல் ஆப்-இல் பதிவேற்றி உள்ளது.

இதனால் புதிய விதிமுறைப்படி எந்த எந்த சேனல்களுக்கு எவ்வளவு கட்டணம் மற்றும் வாடிக்கையாளருக்கு எந்த சேனல்கள் மட்டும் வேண்டும் என்பதை அவர்கள் ஸ்மார்ட் ஃபோன் மொபைல் ஆப்-இல் இருந்தே தெர்ந்தெடுக்க முடியும். மேலும் தெர்ந்தெடுத்த சேனல்கள் தொடர்பாக ஏதேனும் மாற்றங்கள் செய்ய வேண்டும் என்றாலும், அதையும் அந்த ஆப்-ஐ பயன்படுத்தியே செய்யலாம்.

இப்போது டாட்டா ஸ்கையிலேயே புதிதாக இன்டர்நெட் இணைப்பு பிராட்பேண்ட் கொடுக்கும் திட்டத்தை வீடுவீடாக கொண்டு வர உள்ளனர். இத்திட்டம் 2018 மே மாதம் முதலே உயர்ந்த கட்டிடங்களில், அதாவது எழு அடுக்குகளுக்கு மேல் இருக்கின்ற கட்டிடங்களில் நடைமுறையில் உள்ளது. வரும் ஜூன் மாதம் முதல் இந்த திட்டம் பகுதி பகுதியாக அனைத்து வீடுகளுக்கும் நடைமுறைப்படுத்தப்பட உள்ளன. தனி வீடுகளுக்கான கட்டண விகிதம் விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது.
டிடிஎச் சேவைகளின் மீது வைக்கப்படும் பொதுவான குறை, என்பது கருமேகம் இருந்தாலோ, மழை பெய்தாலே சிக்னல் வரவில்லை என்பதுதான். இதற்கு நிரந்தர தீர்வு என்பது கிடையாது. ஏனென்றால் டிடிஎச் சேவை என்பது நேரடியாக சாட்டிலைட் மூலம் நிகழ் நேரத்தில் வழங்கப்படும் சேவை. இதனால் சிக்னல்கள் ஒரு இடத்தில் இருந்து சாட்டிலைட்டுக்கு சென்றுதான் டிவியை வந்தடையும். அப்போது சாட்டிலைட்டில் இருந்து வரும் சிக்னல் வீட்டில் இருக்கும் ரிசீவரை வந்தடைய நடுவில் எந்தவித இடையூறும் இருக்கக் கூடாது.

ஒருவரது கையை நடுவில் வைத்தால் கூட சிக்னல் கிடைக்காது. இப்படி எந்தவித இடையூறும் இல்லை என்றால்தான் நம் தொலைக்காட்சியில் சேனல்கள் சீராக தெரியும். இடையில் கருமேகம் குறுக்கிட்டால் சிக்னல்களை அதைத் தாண்டி வர முடியாது. அப்போது நம் வீட்டு டிவியில் சேனல்கள் வராது. சிலர், மற்ற டிடிஎச் சேவைகளில் மழை பெய்யும் போதும் சேனல்கள் வருகின்றன, டாட்டா ஸ்கைதான் வருவது இல்லை என்பார்கள். அதற்கு காரணம், ஒவ்வொரு நிறுவனமும், ஒவ்வொரு திசையில் சாட்டிலைட் சிக்னல் ஏற்பான்களை பொருத்தி இருப்பார்கள். வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு என்று. இதனால் எந்த திசையில் மேகம் வலுவாக இருக்கின்றதோ அந்த திசையில் இருந்து சிக்னலை எந்த நிறுவன டிடிஎச் கருவியாலும் பெற இயலாது.

டிடிஎச் சேவை வழங்கவே முடியாத இடம் என்பது Line of Sight (LOS) என அழைக்கப்படும். அதாவது மரம் மற்றும் செடிகொடிகள் அதிகம் உள்ள இடங்களை இப்படிக் கூறுவோம். நகரப் பகுதிகளைத் தவிர்த்து புறநகர் பகுதிகளில் மரங்கள் அதிக அளவில் இருக்கும். வீடுகளில் கூட இரண்டு, மூன்று மரங்கள் இருக்கும். இது போன்ற பகுதிகளில் டிடிஎச் கருவிகளை பொருத்த இயலாது அப்படியும் பொருத்த வேண்டும் என்றால் மரங்களை வெட்டத்தான் வேண்டும். இதனால் நாங்கள் அவர்களுக்கு நடைமுறைச் சிக்கல்களை விளக்கிக் கூறுவோம். பின்னர் பொருத்த விரும்புவதும், விரும்பாததும் அவர்களது விருப்பம்.
இப்போது டிடிஎச்-இல் புதிய தொழில் நுட்பங்கள் பல வந்து இருக்கின்றன. குறிப்பாக, ரெக்கார்டர். இதனை செட்டாப் பாக்சில் பொருத்தி விட்டால், அதனைப் பயன்படுத்தி நாம் விரும்பும் தொலைக்காட்சி நிகழ்ச்சியை எப்போது வேண்டுமானாலும் பார்க்கலாம். அந்த ரெக்கார்ட் செய்த நிகழ்ச்சியை வீட்டில் இருந்துதான் பார்க்க வேண்டும் என்பது இல்லை. டாங்கிள் உதவியுடன் எங்கு இருந்தும் நம்மால் பார்க்க முடியும். அது மட்டும் இன்றி டாட்டா ஸ்கை ஆப்-ஐ பயன்படுத்தி எந்த இடத்திலும் எந்த நேரமும் நாம் நிகழ் நேரத்தில் சேனல்களை மொபைல் ஃபோனிலேயே பார்க்கலாம்.

எங்களது நிறுவனம் தொடங்கி பதினொரு ஆண்டுகள் முடிவடைந்து விட்டன. எங்கள் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டு உள்ள சுற்றெல்லை என்பது வடசென்னை முழுவதும் இருக்கும் வியாசர்பாடி, கொடுங்கையூர், மாதவரம், மணலி, மின்ட் காலனி, புழல், காவாங்கரை, கொளத்தூர், பொன்னியம்மன்மேடு, பெரவள்ளூர் ஆகிய பகுதிகளில் டாட்டா ஸ்கை சேவையை நாங்கள் வழங்குகின்றோம்.

நமக்கு எந்த பணியை கொடுத்தாலும் அதனை சிறப்பாக செய்து முடிக்க வேண்டும் என்பது எனது விருப்பம். நான் முதல் முதலில் எல்ஜி நிறுவனத்தில் 2002 ல் டிவி டெமோ செய்பவராக (இயக்கிக் காட்டுபவாராக) பணியாற்றத் தொடங்கினேன். அங்கு பணியாற்றும் போதே, கிடைக்கும் நேரத்தில் டிவி பழுது பார்ப்பதற்கான பயிற்சிப் படிப்பை முடித்தேன், அதவது டெக்னீசியன். பின்னர் அதே ஷோ ரூமில் அட்மின் பணிக்கு தேர்ச்சி பெற்றேன் அப்போது அந்த நிறுவனத்தின் முதலாளி புதிதாக டாட்டா ஸ்கை நிறுவனத்திடம் இருந்து ஃபிரான்சைஸ் எடுத்தார்.

அதற்கு என்னை ஒருங்கிணைப்பாளராக நியமித்தார். அதற்கடுத்து அந்த நிறுவனத்திலேயே படிப்படியாக மேற்பார்வையாளர், மேலாளர் என்று இப்போது நான் அதே டாட்டா ஸ்கை தனி உரிமைக் கிளை ஒன்றின் உரிமையாளராக இருக்கின்றேன். எங்கள் நிறுவனத்தில் தற்போது முப்பத்தைந்து பேர்கள் மிக சிறப்பாக வேலை பார்க்கிறார்கள். எனது துணைவியார் திருமதி. பவானி செந்தில்குமார், ஒரு வழக்கறிஞர். எங்கள் நிறுவனத்திற்கான சட்ட ஆலோசகராக இருப்பதோடு தொழில் வளர்ச்சிக்கு அவரால் முடிந்த ஒத்துழைப்புகளை நல்கி வருகிறார்’’ என்றார், திரு.. செந்தில்குமார் (98845 93585).

– செ. தினேஷ்பாண்டியன்

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

Subscribe to our latest news