Latest Posts

உங்கள் இரகசியத்தைக் காப்பாற்றப் போவது யார்?

- Advertisement -

பெரும்பாலான உறவுமுறைகள், தேவை இல்லாத சமாச்சாரங்களைப் பரிமாறிக் கொள்வதால்தான் பாதிப்புக்கு உள்ளாகின்றன. ஒரு செய்தியைப் பரிமாறிக் கொள்ளும் முன் சிலவற்றை மனதில் கொள்வது நல்லது. எல்லா செய்திகளையும் எல்லோரிடமும் பரிமாறிக் கொள்ள தேவை இல்லை. குறிப்பிட்ட செய்திகளை, அந்த செய்திக்கு தொடர்பு உள்ளவர்களுடன் மட்டுமே பகிர்ந்து கொள்ள வேண்டும். அதுவும் கூட அந்த செய்தியை நீங்கள் சொல்லும் கோணத்தில் அவர் புரிந்து கொள்வாரா என்பதிலும் கவனம் செலுத்த வேண்டும். இப்படி எல்லாம் எண்ணிப் பாராமல் சகட்டு மேனிக்கு செய்திகளை பரிமாறிக் கொள்வதால்தான் சிக்கல்கள் எற்படுகின்றன.

ஓவ்வொரு மனிதருக்கும்  ஆன தனிமனித சுதந்திரம் என்பது போற்றிப் பாதுகாக்கப்பட வேண்டிய ஒன்றாகும். ஒவ்வொருவருக்குமான இரகசியம் என்பது அவர்களுக்கான முழு உரிமை ஆகும். அதை அவர்கள் சொல்வதற்கும் உரிமை உண்டு; சொல்லாமல் இருப்பதற்கும் உரிமை உண்டு. இந்த செய்தியை என்னிடம் சொல்லவில்லையே என்று நண்பர்களிடம், உறவினர்களிடம் கோபித்துக் கொள்பவர்கள் பலர். சொல்லவில்லை எனும்போது அதை ஒரு செய்தி ஆகத்தான் எடுத்துக் கொள்ள வேண்டுமே தவிர வருத்தப்பட என்ன இருக்கிறது? சொல்வதற்கு எவ்வளவு கடமைப்பட்டு இருக்கிறார்களோ அதே அளவுக்கு சொல்லாமல் இருப்பதற்கும் உரிமை பெற்று இருக்கிறார்கள் என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

ஆற்றலை உள்ளடக்கி வைத்து இருக்கும் செய்திகள்

எந்த ஒரு செய்தியையும் நாம் மற்றவர்களிடம் சொல்வது போல, மற்றவர்களும் பல செய்திகளை நம்மிடம் சொல்கிறார்கள். பல செய்திகள் தாமாகவே வந்து சேர்கின்றன. விரும்பும் செய்திகள், விரும்பாத செய்திகள் என்று எல்லா செய்திகளும் வந்த கொண்டே இருக்கின்றன. செய்திகள் வந்தால் கூட பரவாயில்லை. சில நேரங்களில் சில செய்திகள் நம்மைத் தாக்குகின்றன. ஒவ்வொரு செய்தியும் தன்னுள் ஒரு ஆற்றலை உள்ளடக்கித்தான் வைத்து இருக்கிறது. அதனால்தான் செய்திகள்  அவற்றின் தன்மைக்கு ஏற்ப நமக்குள் பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. இந்த பாதிப்பை நாம் வெளிப்படுத்துகிறோம். வெளிப்படுத்துவதால், அது வெளி உலகைப் பாதிக்கிறது. அந்த செய்தியைப் பொறுத்து, சென்று அடையும் இடத்தைப் பொறுத்து அச்செய்தி மேற்கொண்டு ஆற்றலைப் பெறுகின்றது; அல்லது ஆற்றலை இழக்கின்றது.

ஒவ்வொரு செய்தியும் தனக்குள் ஒரு ஆற்றலைப் பெற்று இருக்கிறது என்பதை நாம் எப்போதும் நினைவில் வைத்து இருக்க வேண்டும். எனவே செய்திகளை ஆக்குவதற்கும், அழிப்பதற்கும்  பயன்படுத்தலாம். பயன்படுத்துவது ஒருவரின் இயல்பு அல்லது திறமையைப் பொறுத்து அமைகிறது. இப்படி ஆகும் என்று நினைத்து நான் சொல்லவில்லை; இப்படி நடக்கும் என்று தெரிந்து இருந்தால் சொல்லியே இருக்க மாட்டேன் என்று சிலர் கூறுவதை நாம் கேட்டு இருக்கிறோம். எந்த ஒரு செய்தியைக் கூறும் போதும், யாரிடம் கூறுகிறோம்; எதற்குக் கூறுகிறோம் என்ற புரிதலுடன் கூற வேண்டும். சும்மாதான் கூறினேன் என்று பிறகு வருத்தப்பட்டு என்ன பயன்?

எப்போது வரை அது இரகசியம்?

இரகசியம், அந்தரங்கம் என்று இரண்டு சொற்கள் உண்டு. ஒவ்வொருவருக்கும் இரகசியமும், அந்தரங்கமும் இன்றியமையாதவை ஆகும். இரகசியம் காப்பாற்றப்பட வேண்டும்; அந்தரங்கம் போற்றப்பட வேண்டும். ஒருவருக்கு மட்டும் தெரிந்து இருக்கும் வரைதான் அது இரகசியம். எப்போது இரண்டாம் ஆளுக்குத் தெரியப்படுத்தப்பட்டு விட்டதோ, அப்போதே அது இரகசியம் என்ற தன்மையை இழந்து விடுகிறது. மேலும், இதை இரகசியமாக வைத்துக் கொள் என்று கூறுவது அபத்தமானது ஆகும். நம்மால் இரகசியமாக வைத்துக் கொள்ள முடியாமல்தானே, அதை இன்னொருவரிடம் பகிர்ந்து கொள்கிறோம்? அப்படி இருக்கும் போது, மற்றவரிடம் மட்டும் அவர் அந்த இரகசியத்தை வேறு யாருக்கும் சொல்லக் கூடாது என்று எதிர்பார்க்க முடியும்? இரகசியம் காப்பாற்றப்பட வேண்டும் எனில், அதை தொடர்பு உள்ளவர்கள் வேறு யாரிடமும் பகிர்ந்து கொள்ளக் கூடாது. இதில் மிகவும் முதன்மையானது, அது இரகசியமாக வைத்துக் கொள்ள வேண்டிய செய்திதானா என்பதிலும் ஒரு தெளிவு இருக்க வேண்டும்.

ஒரு செய்தி தனக்குள் ஆற்றலைக் கொண்டு இருக்கிறது என்று முதலில் பார்த்தோம். எந்த ஒரு செய்தியும் அதன் தன்மைக்கு ஏற்ப நம் உடல் மற்றும் மனதின் சமநிலையைப் பாதிக்கிறது. மீண்டும் சமச்சீர் நிலையை அடைய ஒவ்வொரு மனிதரும் தங்களுக்குத் தெரிந்த வழிமுறைகளில் முயற்சிக்கிறார்கள். அதன் பிறகு அந்த வழிமுறைகளையே தொடர்ந்து பயன்படுத்துகிறார்கள். நம் உடல், மனதைப் பாதிக்கும் செய்திகளை நமக்கு நெருங்கியவர்களிடம் சொல்வது என்பது சமச்சீர் நிலையை அடைவதற்கான ஒரு வழி ஆகும். அதனால்தான் பெரும்பாலான மனிதர்களால் இரகசியத்தைக் காப்பாற்ற முடிவது இல்லை. ஏனெனில் அந்த செய்தியை வெளியே சொல்லாத வரை அவரால் அமைதியாக இருக்க முடிவது இல்லை.

ஒரு செய்தி, கமுக்கமாக பாதுகாக்க வேண்டிய செய்தி இல்லை என்று கருதும்போது மட்டும்தான் பிறரிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும். அவர் அந்த செய்தியை வேறு யாரிடம் கூறினாலும் கூட பரவாயில்லை என்ற மாதிரியான செய்திகளை மட்டுமே பகிர்ந்து கொள்ள வேண்டும். ஒரு இரகசியம் வெளியே போவதற்கு நாம்தான் காரணம்; அந்த இரகசியத்தை நாம்தான் வெளியே சொன்னோம், அதனால்தான் அந்த செய்தி ஏனையோரிடமும் சென்றது என்பதை நான் உணர்ந்து கொள்ள வேண்டும். இரகசியம் நமக்குத்தான்; மற்றவரிடம் சென்ற போதே இரகசியம் அதன் தன்மையை இழந்து விட்டது.

இதற்கு உளவியல் வேறு ஒரு கோணத்தில் இருந்து விளக்கம் சொல்கிறது. அது, உங்கள் மனம் இந்த இரகசியத்தை மற்றவர்களிடம் தெரிவிக்க விரும்புகிறது. அப்படி தெரிவிக்கும் பொறுப்பை மற்றவர்களிடம் இரகசியம் என்று கூறி ஒப்படைத்து விடுகிறது என்கிறது.

இரகசியங்களைத் தெரிந்து கொள்ள ஆலாய்ப் பறக்கும் மனிதன்

மிகவும் பாதுகாக்கப்பட்ட இரகசியங்கள் என்று புத்தகங்கள் பரபரப்பாக விற்பனை ஆகின்றன. யூடியூபில் இரகசியங்கள் என்ற சொல்லுடன் வரும் வீடியோக்கள் வைரல் ஆகின்றன. இரகசியங்களைத் தெரிந்து கொள்ளவும், தெரிவிக்கவும் மனிதன் ஆலாய்ப் பறக்கிறான்; அலைகிறான். அப்படி இருக்கும்போது காப்பாற்ற வேண்டிய இரகசியங்களை நாம்தான் காப்பாற்றிக் கொள்ள வேண்டும்; மற்றவர்கள் அல்ல என்பதைத் தெளிவாகப் புரிந்து வைத்து இருக்க வேண்டும்.

– டாக்டர் மா. திருநாவுக்கரசு

 

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

Subscribe to our latest news