ஒவ்வொரு நிர்வாகமும், மனிதரும் தன் குறிக்கோள், இலக்கு, இலட்சியம், அதை அடையும் வழிமுறைகள், அவ்வப் போது தீர்மானிக்க வேண்டிய முடிவுகள், அவற்றைச் செயலாக்கும் திட்டங்கள் போன்ற பற்பல பணிகளை ஆற்றவேண்டியுள்ளது.
நாலும் தெளிந்தெடுக்க முடிவு!
ஒரு நிர்வாகமோ, தன் மனிதர்களோ தங்கள் திறமையை, நிலைமையை, வலிமையை அறிந்து கொள்வது மிக அவசியம். அவற்றை ஸ்ட்ரென்த் (Strength), வீக்னஸ் (Weakness), ஆப்பர்ச்சூனிட்டி (Opportunity), த்ரெட்ஸ் (Threats) என்ற நான்காகப் பிரித்து ஆய்வு செய்வதுதான் ஸ்வாட் ஆய்வு (SWOT Analysis). அதாவது நம் பலம், பலவீனம், வாய்ப்பு, ஆபத்து எச்சரிப்பு என்று எடுத்துக் கொள்ளலாம்.
நம்பிக்கை ஏற்பட்ட பின்பு செயலைத் தொடங்க வேண்டும்
தன் வலிமை, மாற்றான் வலிமை, அல்லது எதிர்ப்புச் சக்திகள், தனக்குத் துணையாக வருகின்றவர்கள் சக்தி எல்லாவற்றையும் சீர்தூக்கிப் பார்த்து அதில் நம் பக்கம் வெற்றி வருவதாகத் தோன்றினால், அல்லது நம்மால் அந்தச் செயலை வெற்றிகரமாக முடிக்கமுடியும் என்று நம்பிக்கை ஏற்பட்டால் செயலைத் தொடங்கவேண்டும்.
தன் வலிமையைப் பற்றி நன்றாக ல் உணர்ந்து கொள்ளாமல் ஒரு உற்சாகத்தில் வேலையைத தொடங்கி விட்டுப் பின், பாதியில் அதை அரைகுறையாக விட்டு விட்டுப் போனவர் பலருண்டு ஒவ்வொரு மனிதரும், குடும்பமும் ஊரும், நிறுவனமும், நாடும் பலம் பலவீனம், வாய்ப்பு எச்சரிப்புச் சக்திகளைப் புரிந்து கொண்டு அவற்றைச் சரியானபடி சமாளித்து வெற்றி காணும் வழிகளைக் கண்டு அறிந்து செயல்பட வேண்டும்.
இடம் சிறந்ததாக தேர்வு செய்யப்பட வேண்டும்
“இடம், பொருள், ஏவல்’ அறிந்து செயலாற்ற வேண்டும் என்று அறிஞர்கள் அறிவுறுத்துகின்றனர். எந்த ஒரு செயலையும் சிறப்புறச் செய்து முடிக்க வேண்டுமானால் அதற்குரிய சிறந்த இடத்தைத் தேர்வு செய்து கொள்ள வேண்டும். மேலாண்மைத் துறையில் இடனறிதல் அதாவது ஒரு செயல் வெற்றிகரமாக நிறைவேற வேண்டியதற்கான இடத்தைப் பற்றி அறிந்துகொள்ளுதல் முதன்மையான வேலையாகும். முதலை நீரில் மிக்க வலிமை வாய்ந்தது. ஆனால் வெளியே வந்து தரையில் இருக்கும் போது அதன் வலிமை குறைந்து விடும்.
காலம் அறிதலும் இன்றியமையாதது
காலம் அறியும் கலை மிக அரிய கலை. ஆந்தை காகத்தைக் காட்டிலும் வலிமையானது; ஆனால் பகலில் அதற்கு கண் தெரியாது. ஆகவே, அந்தக் காலத்தைத் தேர்ந்தெடுத்து காகம் அதை வெல்லும். கோடை காலத் தில் குளிர்பானம் விற்றால் லாபம் கிடைக்கும். குளிர்காலத்தில்?
சில சமயங் களில் பெரிய குறிக்கோள், இலக்குகள் அமைத்துக் கொண்டவர்கள் கூடத் தூங்குகின்றார்களோ என்று சந்தேகப்படும்படி அமைதியாக இருப்பார்கள், சீரான காலம் கனியும் வரை. சில நேரம் மிக நல்ல பணிகள் ஆற்றுவதற்குச் சாதகமானதாக அமையும்; நமக்கு வேண்டியவர் வந்தால் நல்லது செய்வார்; அது சிறந்த வலிமை தரும் சக்தியாக அமையும்; வேண்டாதவர் எனில் எதிர்சக்தியாக அமையலாம். வேண்டியவர் வேண்டாதவராகவும், வேண்டாதவர் வேண்டியவராகவும் மாறலாம்; அப்போது பலம், பலவீனம் கூட மாறிப்போய்விடும்! சாதகமான காலநிலையும், சூழ்நிலையும் அமைந்தால் அதை உடனே நல்ல முறை யில் பயன்படுத்திச் செய்வதற்கு அரிய செயல்களைச் செய்து முடித்துக் கொள்ள வேண்டும்.
சாதகமான சூழ்நிலை வரும் வரை ஒற்றைக் காலில் தவம் செய்யும் கொக்கைப் போன்று பொறுமையுடன் காத்திருக்க வேண்டும். சரியான இரையைக் கண்ட போது துரிதமாகக் குறி தவறாமல் அது கொத்துவது போல விரைந்து முனைந்து காரியத்தை முடித்துக் கொள்ள வேண்டும்.