வரலாறு நெடுகிலும் ஓவியர்களும், அவர்களின் ஓவியங்களும் பேசப்பட்டு வருகின்றன. பல நூற்றாண்டுகளுக்கு முன் தங்கள் ஓவியங்களால் பாராட்டு பெற்றவர்களின் ஓவியங்கள் இன்றளவும் போற்றப்படுகின்றன.
அப்படிப்பட்ட ஓவியர்களில் ஓருவர், ரஃபேல்லோ சான்சியோ ரபேல் (Raffaello Sanzio Raphael). மத்திய இத்தாலிய நகரமான அர்பினோ (Urbino) வில் 1483 – ல் பிறந்தவர். இவருடைய தந்தையும் ஒரு ஓவியர். ரபேல் இளமையாக இருந்த போதே அவர் தந்தை ஓவியங்கள் வரையும்போது பார்த்து, ஓவியங்கள் மீது ஆர்வம் கொண்டிருக்க வேண்டும். 1500- ஆம் ஆண்டில் அர்பினோவில் இருந்து பெருகியா (Perugia) சென்றார். அங்கே இருந்த இத்தாலியின் சிறந்த ஓவியர்களில் ஒருவராக விளங்கிய பியட்லோ பெருகினோ உடன் சேர்ந்து பணியாற்றினார். ரபேல், பியட்லோவுடன் சேர்ந்து பெருசியா, மற்றும் அண்டை நகரமான சிட்டா டி கேஸ்டெல்லோவில் இருந்த சர்ச்களுக்குத் தேவையான பதாகைகளையும், பலி பீடத்தின் பின்னணியில் வர வேண்டிய கலை வேலைப்பாடு மிகுந்த ஓவியங்களையும் வரைந்தார். அர்பினோ அரசவையுடன் தொடர்ந்து நட்பு பாராட்டி வந்ததால், அவர்கள் கேட்டுக்கொண்ட புனிதர்களின் எழில்நயம் வாய்ந்த நீளமான ஓவியங்களை வரைந்து கொடுத்தார். நான்கு ஆண்டுகள் பியட்லோவுடன் இருந்த பிறகு பிளாரன்சுக்கு சென்றார். அப்போது அவருக்கு இருபத்தோரு வயது.
அப்போது டஸ்கன் தலைநகரில் மைக்கேலாஞ்சலோ செய்த பளிங்குச் சிற்பமான ‘டேவிட்; நிறுவப்பட்டு இருந்தது. மேலும் லியோர்னாடோ டாவின்சி, ‘அங்கியாரியின் போர்’ என்ற ஓவியத்தை படைத்துக் கொண்டு இருந்தார். டாவின்சியின் ஓவியங்களால் தூண்டப்பட்ட ரபேல், கன்னிமேரியும், குழந்தையும் என்பதை பொருளாகக் கொண்டு அழகான கன்னிமேரிகளை வரைந்து குவித்தார். இது அவருக்கு மேலும்மேலும் வேலைகளைப் பெற்றுத் தந்தது. 1508 – ல் இரண்டாம் ஜூலியஸ் போப் குடியிருப்பை அலங்கரிக்கும் வேலை கிடைத்தது. அதே ஆண்டில் வாட்டிகன் அரண்மனையின் இரண்டாம் தளத்தின் நான்கு அறைகளை ஓவியங்களால் அலங்கரிக்கும் பணியில் தன்னுடைய ஓவியர் குழுவை ஈடுபடுத்தினார்.
அப்போது வங்கியாளராக இருந்த அகஸ்டினோ சிக்கி, அவருடைய தோட்ட மாளிகையில், பண்டைய கிரேக்க லத்தீன் இலக்கியம் ஒன்றின் ஒரு காட்சியை அடிப்படையாகக் கொண்ட கலாடியாவின் வெற்றிச் சிறப்பைக் காட்டும் சுவர் ஓவியம் ஒன்றை வரையும் வாய்ப்பை வழங்கினார். இச்சுவர் ஓவியத்தின் வெற்றி மேலும் பல ஓவியங்கள் வரையும் வாய்ப்பை அவரிடம் இருந்து பெற்றுத் தந்தது.
புதிய போப் ஆகத் தேர்ந்து எடுக்கப்பட்டு இருந்த பத்தாம் லியோ (Leo x) இவருடைய தனித் திறமைகளால் கவரப்பட்டு, பல ஓவியத் திட்டங்களில் இவரை ஈடுபடுத்தினார். தொடர்ந்து போப் ஆண்டவரின் கட்டடக் கலைஞராக முறையாக நியமிக்கப்பட்டார். நகரின் பழமைச் சின்னங்களின் காப்பாளர் ஆகவும் நியமிக்கப்பட்டார். அதே நேரத்தில் கன்னி மேரி டெல்லா செடியா (Modonna Della Sedia) போன்ற அழகான கன்னிமேரி உருவப் படங்களை பலரும் பாராட்டும் அளவுக்கு உருவாக்கினார். பெரிய பணக்காரராகவும் உருவானார்.
இவர் வரைந்த ஸ்கூல் ஆஃப் ஏதென்ஸ், டிஸ்பியூட்டர் போன்ற ஓவியங்களில் உருவங்களின் வயதுக்கேற்ற பண்புக் கூறுகளையும், ஒழுங்கமைதிகளையும், எல்லை இல்லா வேறுபட்ட உணர்ச்சிக் குறிப்புகளையும் வெளிப்படுத்தி இருந்தார். அனைத்து அடிப்படைக் கலைக் கூறுகளை ஒன்று சேர்த்தல் என்பது ரபேலின் சுயமாக இருந்தது. அவர் உருவாக்கிய ஒவ்வொரு உருவமும் தனித்தன்மை வாய்ந்ததாகவும், சிறப்பு செய்யப்பட்ட ஆடைகள், தோற்றங்கள், உணர்ச்சிகள் என்று தனிச் சிறப்புகளுடன் அமைந்து இருந்தன. 1520 ஆம் ஆண்டு தனது முப்பத்தேழாம் வயதில் மறைந்தார்.
– ஓவியர் புகழேந்தி