வீடுகளில் நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களில் ஒரு சின்ன பழுது ஏற்பட்டாலும், அதை நீக்க அதற்கான பழுது நீக்குபவர்களைத் தேடி ஓடுகிறோம். பாத்ரூம் குழாயில் தண்ணீர் கசிகிறது என்றால் உடனே பிளம்பரைத் தேடி ஓட வேண்டும். அதுவும் கோரோனா போன்ற காலங்களில் பிளம்பர் உடனே கிடைக்கவும் மாட்டார். நமக்கும் அவரை வீட்டுக்குள் விட தொற்று ஏற்பட்டு விடுமோ என்ற தயக்கம் இருக்கும். டைனிங் டேபிளின் ஒரு காலில் உள்ள ஸ்க்ரூ ஒன்று கழன்று ஆடிக் கொண்டு இருக்கும். உடனே கார்ப்பென்டரைத் தேட வேண்டும். அவர்கள் இப்படிப்பட்ட சின்ன வேலைகளுக்கு வரவும் தயங்குவார்கள். டியூப் லைட்டை கொஞ்சம் இடம் மாற்றி அடிக்க வேண்டி இருக்கும். அல்லது பழைய மாடல் டியூப் லைட்டுக்கு பதிலாக எல்ஈடி டியூப் லைட்டை வாங்கிப் பொருத்த விரும்பலாம். இதற்கு ஒரு எலெக்ட்ரீஷியனைத் தேடி ஓட வேண்டும்.
ஆனால் சின்னச் சின்ன பழுதுகளை எல்லாம் நாமே சரி செய்து விட முடியும். அதற்குத் தேவையான சின்னச் சின்ன கருவிகள் சிலவற்றை நாம் வாங்கி வைத்து இருந்தால் போதும். பின் வரும் கருவிகள் அனைத்தும் ஒவ்வொருவர் வீட்டிலும் இருக்க வேண்டிய கருவிகள். அவசரத்துக்குக் கை கொடுக்கும் மிகத் தேவையான கருவிகள்.
திருப்புளி (ஸ்க்ரூ ட்ரைவர்)
இதன் பயனை ஒரு வட்டத்துக்குள் அடக்கி விட முடியாது. ஸ்க்ரூ போட்டு முடுக்கப்பட்டு உள்ள எந்த சாதனத்தையும் கழற்றிப் பார்த்து சரி செய்ய ஸ்க்ரு ட்ரைவர் உதவும். மின் விசிறிகளின் இறக்கைகளை தனித்தனியாக பிரித்து துடைத்து மாட்ட இது இன்றி அமையாதது. இவை பல்வேறு அளவுகளில் கிடைக்கின்றன. இப்போதெல்லாம் ஸ்டார் ஸ்க்ரூக்களும் நிறைய பயன்படுத்தப்படுகின்றன. எனவே ஸ்டார் ஸ்க்ரூ ட்ரைவர்கள் சிலவற்றையும் வாங்கி வைத்து இருக்க வேண்டும்.
உளி
மழைக் காலங்களில் கதவு, சன்னல்கள் விரிவடைந்து சரியாக பொருந்த மறுக்கும். இந்த மாதிரி நேரங்களில் நம்மிடம் உள்ள உளியால் எந்த பகுதி டைட் ஆக இருக்கிறதோ, அந்த பகுதியில் உளியால் சற்று செதுக்கி விட்டால் கதவு, சன்னல்களை சரியாக மூட முடியும். இதன் பயன்பாடும் அதிகம்.
அரம்
எதையும் மழமழப்பாக்க பயன்படும் கருவி. கூராக இருக்கும் முனைகளை அரத்தால் ராவி மழமழப்பு ஆக்கலாம். கத்தி, அரிவாள் போன்றவற்றை கூர் தீட்டவும் பயன்படுத்தலாம்.
குறடு (கட்டிங் பிளேயர்)
வயர், கம்பி, கேபிள்கள் தொடர்பான வேலைகளுக்கு மிகவும் பயன்படுவது. அவற்றை வெட்டவும், நீளத்தைக் குறைக்கவும் இது கண்டிப்பாகத் தேவை. தேவையற்ற ஆணிகளைப் பிடுங்கவும் இது தேவை. சிறு சிறு ஒயரிங் வேலைகளுக்கு இது இல்லாமல் முடியாது. மின்சாரம் தொடர்பான வேலைகளைச் செய்யும் போது மெயின் ஸ்விட்சை ஆஃப் செய்து விட வேண்டும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
சுத்தியல்
ஆணி அடிப்பதில் தொடங்கி, உளியைக் கையாள்வது வரை சுத்தியலின் துணை தேவை. நமக்கு தேவையான மீடியமான அளவில் வாங்கி வைத்துக் கொள்ளலாம்.
ஸ்பேனர்
போல்டு, நட்டுகளை கழற்ற, மாட்ட இது இல்லாமல் முடியாது. மீடியமான அளவுகளில் வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும். பிளம்பிங் வேலைகளிலும் பயன்படும்.
ரின்ச்
கட்டிங் பிளேயரை வைத்து கழற்ற முடியாத, கழற்ற கடினமான, எவ்வளவு துருப்பிடித்து இறுகிப் போய் இருக்கும் குழாய்களையும் இதன் மூலம் கழற்றி விடலாம்.
டிரில்லிங் மெஷின்
சின்ன அளவிலான டிரில்லிங் மெஷின் ஒன்றையும் வாங்கி வைத்துக் கொள்வது சுவர்களில் துளை இடும் வேலையை எளிதாக்கும். குறிப்பாக எலெக்ட்ரிக்கல், பிளம்பிக் வேலைகளைச் செய்யும் போது இதன் பயன்பாடு அதிகம். இது இருந்தால் சுத்தியலால் ஆணி அடிக்கிறேன் என்று சுவரைப் பெயர்க்காமல் இருக்கலாம்.
– மேற்கண்ட கருவிகள் அனைத்தும் உங்கள் வீட்டுக்கு அருகே உள்ள ஹார்ட்வேர் கடைகளிலேயே கிடைக்கும். ஆன்லைனிலும் கிடைக்கின்றன.
எல்லா கருவிகளையும் ஒரு குறிப்பிட்ட இடத்தில் வைத்து எடுக்க வேண்டும். வேலை முடிந்த உடன் கண்ட இடங்களில் போட்டு விட்டு பின்னர் தேடிக் கொண்டு இருப்பதை பல வீடுகளில் பார்க்க முடிகிறது. எனவே இந்த கருவிகளை இங்கேதான் வைக்க வேண்டும் என்ற உறுதிப்பாட்டுடன், வேலை முடிந்த உடன் முதலில் எங்கே எடுத்தோமோ அங்க கொண்டு போய் வைத்து விட வேண்டும்.
– ஆரோ