எப்படி இருந்தாலும் கொரோனா லாக் டவுன் விரைவில் முடிவுக்கு வந்துதான் தீரும். பொதுப் போக்குவரத்தையும் தொடங்கி விடுவார்கள். ஐந்து மாதங்களுக்கும் மேலாக வீட்டுக்குள் முடங்கிக் கிடப்பவர்களில் பலர், எப்போது பொது முடக்கம் ஒரு முடிவுக்கு வரும்; முடிவுக்கு வந்த உடன் எங்காவது சுற்றுலா சென்று மனதின் அயற்சியைப் போக்கிக் கொள்ள வேண்டும் என்று விரும்பி காத்திருக்கிறார்கள். பொது முடக்கம் முடிந்து இயல்பு நிலைக்கு வந்த பின் உரிய பாதுகாப்புகளுடன் சென்று மகிழ்ந்து வர ஏற்ற உங்கள் ஊர்களுக்கு அருகே உள்ள சில சுற்றுலா இடங்களை நினைவு படுத்துகிறேன்.
சென்னை – சென்னைக்கு அருகே உள்ள சுற்றுலா தலங்களில் முதன்மையானது, மாமல்லபுரம். சென்னையில் இருந்து சுமார் அறுபது கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இங்கு பல்லவர் காலத்து சிற்பங்கள், குடைவரை கோயில்கள் பார்ப்பதற்கு அழகாக இருக்கும். பழங்கால கலங்கரை விளக்கம் உள்ளது. புதிய கலங்கரை விளக்கமும் உள்ளது. மலையின் உச்சியில் இருந்து பார்த்தால் கடல் அவ்வளவு அழகாக இருக்கும். கடற்கரையிலும் பொழுதைப் போக்கலாம்.
தேனி – தேனி மாவட்டம் பெரிய குளத்தில் இருந்து எட்டு கிலோ மீட்டர் தொலைவில் கும்பக்கரை அருவி உள்ளது. இந்த அருவியில் ஆண்டு முழுவதும் தண்ணீர் வந்து கொண்டு இருக்கும். மழைக் காலங்களில் தண்ணீர் வரத்து அதிகமாக இருக்கும். இதே மாவட்டத்தில் உள்ள வருசநாடு என்ற ஊரில் உள்ள ஆறும், ஆற்றில் கட்டப்பட்டு இருக்கும் அணைக்கட்டும் பார்க்க அழகாக இருக்கும். அடுத்து வால்பாறை அருகே, அதாவது பொள்ளாச்சி ஆழியாறு அணையில் இருந்து ஐந்து கிமீ தொலைவில் குரங்கு அருவி உள்ளது.
மேற்கு மலைத் தொடர்ச்சி – மதுரையில் இருந்து தென்காசி செல்லும் வழியில் தேவதானம் என்ற ஊர் இருக்கிறது. இந்த ஊரில் இருந்து எட்டு கிமீ தொலைவில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரம் உள்ளது. இங்கு ஒரு அருவியும், சிறிய அணைக்கட்டும் இருக்கிறது. மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தை ஒட்டி வாசுதேவ நல்லூரில் இருந்து ஆறு கிமீ தொலைவில் பழங்குடி மக்களான பளியர்கள் வாழும் தலையணை என்ற ஊர் இருக்கிறது. இப்போது அவர்களைப் பார்த்தால், பழங்குடி இன மக்கள் என்றால் இப்படித்தான் இருப்பார்கள் என்று நாம் மனதில் நினைத்து இருப்பவர்கள் போல இருக்க மாட்டார்கள். அரசின் முயற்சிகளால் படிப்பு, உடைகள், பழக்கவழக்கம் எல்லாவற்றிலும் முன்னேறி விட்டார்கள். இவர்களின் குடில்களைத் தாண்டிச் சென்றால் அருவியைக் காணலாம். குளங்களையும் காண முடியும்.
இதே மேற்கு மலைத் தொடர்ச்சியில்தான் குற்றாலமும் உள்ளது. அருவிகளில் தண்ணீர் கொட்டும் சீசனில் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். அருவியில் குளித்தே ஆக வேண்டும் என்ற விருப்பம் இல்லாதவர்கள் எப்போது வேண்டுமானாலும் சென்று இயற்கை அழகைக் கண்டு மகிழலாம். அருவியில் குளிக்க விரும்புகிறவர்கள் அதற்கேற்ற சீசன் தெரிந்து செல்ல வேண்டும்.
திருநெல்வேலியில் இருந்து சுமார் ஐம்பது கிமீ தொலைவில் உள்ளது, பாபநாசம் அணை. அருகருகே அகஸ்தியர் அருவி, பாணத்தீர்த்தம் அருவி, முண்டந்துறை புலிகள் சரணாலயம், மாஞ்சோலையை அடுத்து கோதையாறு அணை என்று உள்ளன.
கன்னியாகுமரி – கடற்கரை, திற்பரப்பு அருவி, தொட்டிப்பாலம், பத்மனாபபுரம் அரண்மனை அனைத்தும் சிறிய தொலைவுகளில் உள்ளன. கன்னியாகுமரி கடற்கரையில் உள்ள மிகப் பெரிய திருவள்ளுவர் சிலை, காந்தி மண்டபம், விவேகானந்தர் பாறை, காமராஜர் மண்டபம் ஆகியவை சுற்றுலா இடங்கள் ஆகும். கன்னியாகுமரியைப் பார்த்து விட்டு தொடர்ந்து நாகர்கோயில் வந்து பத்மனாபபுரம் சென்று அதே வழியில் திற்பரப்பு அருவியையும், தொட்டிப் பாலத்தையும் பார்த்து மகிழலாம். இரண்டு மலைகளுக்கு இடையே பாலம் கட்டி அதில் கால்வாய் போல நீர் ஓடும் அழகைக் காணலாம். தொட்டிப்பாலத்தில் இருந்து பார்க்க இயற்கைக் காட்சிகள் மிக அழகாக இருக்கும்.
மதுரை – மதுரை வரலாற்றுச் சிறப்பு மிக்க நகரம் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. மதுரைக்கு மிக அருகே இருப்பது, திருமலை நாயக்கர் மகால். மதுரையில் உள்ள காந்தி மியூசியமும் சிறப்பு வாய்ந்தது. குளத்தின் நடுவே இளைப்பாற பெரிய கட்டடம். இதுதான் மதுரை வண்டியூர் கண்மாயின் சிறப்பு. இங்கே படகு சவாரியும் உள்ளது. மதுரையில் இருந்து எழுபது கிமீ தொலைவில் வைகை அணை உள்ளது. பார்த்து ரசிக்க ஏற்ற இடம். மதுரையில் இருந்து முப்பது கிமீ தொலைவில் உள்ளது, குட்லாடம்பட்டி. இதை மதுரையில் உள்ளவர்கள் சின்னக் குற்றாலம் என்று சொல்கிறார்கள். மதுரையில் இருந்து சுமார் நாற்பது கிமீ தொலைவில் இருப்பது, தேக்கடி. பெரியார் வனவிலங்கு சரணாலயும் தேக்கடியின் சிறப்புகளில் ஒன்று. இரண்டு பெரிய மலைகளுக்கு நடுவே உள்ள ஆற்றில் குளிக்க வரும் யானைகளைப் பார்க்க சுற்றுலாப் பயணிகளின் ஆர்வம் அலைமோதும்.
மதுரையில் இருந்து நூற்று முப்பது கிமீ தொலைவில் அமைந்து உள்ளது, மேகமலை. செழித்து வளர்ந்து இருக்கும் உயரமான மரங்களும், தேயிலைத் தோட்டங்களும் அழகுக்கு அழகு சேர்க்கின்றன.
வழக்கமான ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு போன்ற சுற்றுலா இடங்களில் இருந்து வேறுபட்டவை, மேற்கண்ட இடங்கள். பெரும்பாலும் உங்கள் ஊர்களுக்கு அருகில் உள்ள இடங்களைத் தேர்ந்து எடுத்து ஒருநாள் அல்லது இரண்டு நாட்கள் சுற்றுலாவாக சென்று வரத் தக்கவை. காத்திருப்போம், எதிர்பார்ப்போடு!
– ச. ஆனந்த்