இன்றைக்கு கொரோனா நிறைய தொழில்களுக்கு சிக்கல்களை உருவாக்கி விட்டது. இனி வரும் காலங்கள் எப்படி இருக்கும் என்பது குறித்து பல்வேறு எதிர்பார்ப்புகளை அவரவர்கள் தங்களுக்குத் தோன்றுவதை சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். கொரோனா இல்லாத காலத்திலும் தொழில் முனைவோர் எப்போதும் சிக்கல்களை சந்திப்பவர்களாகவும், அவற்றை வெற்றி கொள்ள முயல்பவர்களாகவும்தான் இருக்கிறார்கள்.
பொதுவாக வாழ்க்கையிலும், தொழிலிலும் பிரச்சனைகள் அடிக்கடி தோன்றும். சிக்கல்கள் தோன்றும்போது நாம் அதிர்ச்சிக்கு உள்ளாகின்றோம். இதனால் என்ன பாதக விளைவுக் ஏற்படுமோ என்ற அச்சம் வருகின்றது.
தொழிலில் சிக்கல் வருவது இயல்பான ஒன்று. ஒரு தொழில் நடப்பதின் அறிகுறியே அதில் தோன்றுகின்ற பிரச்சனைகள்தான். இந்த அடிப்படைத் தெளிவு ஏற்பட்டு விட்டாலே, பிரச்சனைகளைப் பார்த்து அதிர்ச்சியோ, கவலைகளோ ஏற்படாது.
தொழில், வணிகத்தில் வருகின்ற சிக்கல்கள் பல வகைகளாக இருக்கலாம். முதலாவது, நடைமுறைச் சிக்கல்கள். எடுத்துக் காட்டாக அருகில் இருக்கும் மூலப் பொருள்களை தொழில் கூடத்திற்கு கொண்டு வரும் லாரி ஓட்டுநர் உரிய காலத்தில் வராவிட்டாலும் சிக்கல் ஏற்படலாம். மின்சாரம் தடைபட்டாலும் பணிகள் பாதிக்கப் படலாம். இரண்டாவது இயற்கையின் நிகழ்வுகளால் ஏற்படுபவை. மழை, வெள்ளம், புயல் போன்றவற்றைச் சொல்லலாம். மூன்றாவதாக, பொதுச் சிக்கல்கள். கடை அடைப்புகள், சாலை மறியல் போன்றவற்றால் எற்படுபவை. நான்காவது, அரசின் கொள்கை முடிவுகளில் ஏற்படும் மாற்றங்கள். வரி உயர்வு, பணமதிப்பு இழப்பு போன்றவற்றால் ஏற்படும் சிக்கல்கள். ஜிஎஸ்டியால் வணிகர்கள் கணக்கு சமர்ப்பிப்பதில் ஏற்படும் குழப்பங்கள் மற்றும் சிக்கல்கள்.
இப்படி சிக்கல்கள் எப்படியும், எந்த நிலையிலும், எந்த வடிவத்திலும் தோன்றக் கூடும். சிக்கல்களை எப்படி எதிர்கொள்வது? ஒரு சிக்கல் தோன்றுமானால், உறுதியாக அந்த சிக்கலுக்கு ஒரு தீர்வு இருக்கும் என்ற நம்பிக்கையோடு அந்த சிக்கலை அணுக வேண்டும். திடீரென அச்சத்துக்கு ஆளாகியோ, அவநம்பிக்கைக்கு ஆளாகியோ, கோபத்துக்கு உட்பட்டோ மனத்தின் சமநிலையை இழக்கக் கூடாது. ஏற்பட்டு இருக்கும் சிக்கலின் இயல்பை பகுத்தாய்ந்து பார்க்க வேண்டும்.
சான்றாக, ஒரு நிறுவனத்தின் கிடங்கில் உள்ள சரக்கின் அளவில் குறைவு ஏற்படுகிறது என்று வைத்துக் கொள்வோம். இதுதான் சிக்கல். இதை எப்படி தீர்ப்பது? முதலில் அந்த பொருளின் இயல்பு என்ன என்று பார்க்க வேண்டும். அதன் பயன்பாடு எப்படிப் பட்டது? எளிதாகக் கடத்தக் கூடியதா? உடனடியாக விற்று விட முடியுமா? அந்தப் பொருளால் பயன்படக் கூடியவர்கள் யார்,யார்? என்றெல்லாம் ஆராய்ந்துதான் முடிவு எடுக்க வேண்டும்.
சில சிக்கல்களை உடனே தீர்த்து விடலாம். சில சிக்கல்களை தீர்ப்பதற்கு காலம் தேவைப்படலாம். ஒரு சிக்கலுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட தீர்வுகள் இருக்கலாம். அவற்றில் நமக்கு ஏற்ற தீர்வு எது என்பதை கண்டறிந்து செயல்படுத்த வேண்டும். தீர்வுகளைத் தேடுவதற்கு தக்கவர்களின் துணையையும் நாடலாம். சிக்கல் எந்த துறை சார்ந்ததோ அந்த துறை சார்ந்த வல்லுநர்களிடம் ஆலோசனை பெறலாம்.
சிக்கல்களுக்கு தீர்வைத் தேடும்போது பொறுமையும், தொடர் முயற்சியும் மிகத்தேவை. தடைகள் இல்லாத முன்னேற்றம் இல்லை.
– மா. பா. குருசாமி