சொத்து மதிப்பீட்டுத் துறை – சொத்து மதிப்பீட்டாளர்கள் (Property Valuer) என்ற சொற்கள், எங்கோ கேட்டவையாகத் தெரியும்…! இன்னும் சிலருக்கு, ‘நம்முடன் தொடர்பு இல்லாத விஷயம்’ எனத் தோன்றும். மிகக் குறைவானவர்களுக்குத்தான் – இந்த துறையின் வலிமை புரியும். காரணம் – இது, திரை மறைவில் பங்காற்றும் துறை.
இன்று இந்திய தொழில்துறை, நாட்டின் வர்த்தக வங்கிகளில் பல ஆயிரம் கோடி ரூபாயைக் கடனாகப் பெறுவதற்கும், அப்படி கடனாகப் பெற்ற தொகை திரும்பி வராத நிலையில், வாராக் கடனாக நிற்கும் தொகையில் எவ்வளவு தொகையைத் திரும்ப பெற முடியும் என தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிப்பவர்கள் இந்த சொத்து மதிப்பீட்டாளர்கள்.
வங்கிகள் கொடுக்கும் தொழில் கடன்கள்தான் என்றில்லை. சொந்த வீட்டுக் கனவில் உள்ளவர்கள் வங்கிகளிலும், மற்ற வீட்டுக் கடன் வழங்கும் நிறுவனங்களிலும், பெறும் கடன் என எல்லாவற்றிலும் இவர்களது பங்கு இருக்கிறது.
Also read: சொத்து மதிப்பீடு, ஒரு கருத்துதான்!
பங்கு என்றால், மேம்போக்கான… பெயரளவிற்கான பங்கல்ல அது! உண்மையில் சொல்வதானால், கடன் கொடுக்கும் நிர்வாக முடிவை எடுப்பது வேண்டுமானால், வங்கியின் மேலாளராக இருக்கலாம். ஆனால், கடன் கேட்பவர் அதற்கு உத்தரவாதமாக…. பிணையாக…. அடமானமாகத் தரும் சொத்து ஆவணங்கள் குறித்தும், அதன் நம்பகத் தன்மை குறித்தும் முடிவு எடுப்பது – வங்கி சார்பில் செயல்படும் ஒரு வழக்கறிஞர்.
அதனால், அந்த சொத்தை பிணையாக ஏற்பது சரியா…. கூடாதா என்ற ஆய்வுப் பணியைச் செய்வது வழக்கறிஞரின் பொறுப்பு, கடமை. அவர் ஒப்புதல் தரும் பட்சத்தில் – கடன் கேட்பவர் கோரும் தொகை சரியானதா… அந்த அளவு தொகைக்கு இங்கே வேலை இருக்கிறதா… அவ்வளவு கடன் தரலாமா…. ஒரு வேளை, இந்த கடன் தொகை பின்னாளில் வாராக் கடனாக மாறி, சிக்கலானால், வங்கிக் கடனாகக் கொடுத்த தொகையை திரும்பப் பெறும் அளவு இந்த சொத்தின் மதிப்பு தேறுமா… போன்ற கேள்விகள் கேட்கப்பட்டு, அதற்கு பதில் அளிப்பவர் மதிப்பீட்டாளர்தான்.
அதனால், ஒரு குறிப்பிட்ட திட்டத்துக்கு எவ்வளவு கடன் கொடுக்கலாம் என்பதை, வங்கி மேலாளர் கூட முடிவு செய்ய முடியாது. அந்த வங்கியின் சார்பில் தேர்ந்தெடுத்து அங்கீகரித்து வைத்துள்ள ஒரு மதிப்பீட்டாளரின் பரிந்துரை அடிப்ப டையில்தான் வங்கி மேலாளர் கூட முடிவு செய்ய முடியும்.
வங்கியில் இருந்து கடன் பெறுவதானால், அதற்கு ஒரு மதிப்பீட்டாளரின் பரிந்துரை தேவை என்றால், இப்போது வாராக் கடனாக பாக்கி வைக்கப்பட்டு இருக்கும் கோடிக்கணக்கான ரூபாய் கடனிலும், இவர்கள்தானே அந்த தொகைக்கு பரிந்துரை அளித்து இருப்பார்கள்….? என்ற கேள்வி அனைவர் மனதிலும் எழும். இந்த கேள்வி நியாயம் ஆனதும் கூட.
விஜய் மல்லையாவின் மதுபான உற்பத்தி நிறுவனத்துக்கும், கிங் ஃபிஷர் ஏர்லைன்சுக்கும் தரப்பட்ட பல ஆயிரம் கோடி ரூபாய் வங்கிக் கடனில் இருந்து, பஞ்சாப் நேஷனல் வங்கி – நீரவ் மோடிக்கு கொடுத்த கோடிக் கணக்கான தொகை கடன்கள் வரை… இவை மட்டுமின்றி, இன்னும் பல தொழில் திட்டங்களில் முடங்கிப் போயுள்ள பலப்பல ஆயிரம் கோடி ரூபாய் கடன்களுக்கு (Bad Dept) பின்னாலும், எதோ ஒரு மதிப்பீட்டாளரின் சான்றிதழ் இருக்கிறது என்பது உண்மை.
அதனால், சட்டப்பூர்வமாக….. ஆவணப் பூர்வமாக பார்க்கும்போது, ஒரு மதிப்பீட்டாளர் அளித்த சான்றிதழ் அடிப்படையிலேயே வங்கிகள் கடன் கொடுத்து உள்ளன என்பதை மறுக்க முடியாது. அதனால், வங்கிகளின் நிலை இந்த அளவு மோசமாகி, அவற்றில் பல திவாலாகி விடுமோ என்ற சூழலுக்குச் சென்றதில், இந்த மதிப்பீட்டாளர்களுக்கும் பங்கு உண்டா என்றால், “இல்லை” எனச் சொல்லி, அதற்கான பொறுப்பில் இருந்து முற்றிலுமாக யாரும் தப்பிச் சென்று விட முடியாது. ஆனால், தொடர்பு உள்ள வேறு சில விஷயங்களையும் நாம் பார்க்க வேண்டி உள்ளது. அவை…
வங்கிகளின் சார்பாகச் செயல்படும் மதிப்பீட்டாளர்கள் அனைவரும் தவறானவர்கள் அல்ல; அதே நேரத்தில் இவர்கள் எல்லாரும் புனிதர்களும் அல்ல. யாரோ ஒரு சிலர், தவறு இழைக்கிறார்கள் என்பதால், ஒட்டு மொத்தமாக எல்லா மதிப்பீட்டாளர் களையும் குறை சொல்ல முடியாது.
நாணயமற்ற தொழிலதிபர்கள் + நாணயமற்ற வங்கி மேலாளர்கள் + அரசியல் செல்வாக்கு உள்ள நாணயமற்றவர்கள் + பேராசை பிடித்த மதிப்பீட்டாளர்கள் என்ற கூட்டணி அமையும்போதுதான் பெரும் வங்கிப் பண மோசடிகள் சாத்தியம் ஆகின்றன.
எனவே, இன்று மதிப்பீட்டாளர்கள், நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து கொண்டு, நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் ஆற்றும் பங்களிப்பை யாராலும் மறுக்க முடியாது. ஆனால், இவ்வளவு முக்கிய பங்களிப்பு இருந்தும் கூட, இந்த மதிப்பீட்டாளர் துறை – ஒரு முறையான வழி காட்டுதலுக்கு உட்பட்டதாக இன்று வரை கூட இல்லை என்பதுதான் வியப்புக்கு உரியது.
தொழில்முறை பணியாளர்கள் எனச் சொல்லப்படும் பல துறையினருக்கும் இந்தியாவில் தற்போது உள்ளது போன்ற, எந்த ஒரு முறையான பதிவகமும், கண்காணிப்பு அமைப்பும், வழிகாட்டும் ஆணையமும் மதிப்பீட்டாளர்களுக்கு இல்லை. மருத்துவர்களுக்கு மெடிக்கல் கவுன்சில், வழக்கறிஞர்களுக்கு பார் கவுன்சில், ஆடிட்டர்களுக்கு கடந்த ஆண்டு வரை ஐசிஏஐ; தற்போது என்எஃப்ஆர்ஏ (NFRA) – National Financial Reporting Authority)… இப்படி பல இருந்தாலும், சொத்துகளை மதிப்பிடும் பொறுப்பில் உள்ளவர்களை வழிநடத்த ஒரு ஆணையம் இல்லை என்பது முக்கிய குறை.
‘புதிய திவால் சட்டம்’ எனக் குறிப்பிடப்படும் Insolvancy & Bankruptcy Act 2016 இதற்கு துணை நிற்கிறது. இந்த சட்டத்தின் முக்கிய நோக்கமே, தற்போதுள்ள பல்வேறு சட்டச் சிக்கல்களால், வங்கிகளில் கடன் வாங்கி அதைத் திருப்பிச் செலுத்தாமல் உள்ள பல்வேறு நிறுவனங்களிடம் இருந்து முடிந்த அளவு பணத்தைத் திரும்ப வசூலிப்பதுதான்.
பழைய சட்டங்களின்படி முயன்று, ஆண்டுக் கணக்கில் வழக்குகள் நீண்டு, இறுதி முடிவை எட்டாமல், இழுத்துக் கொண்டு இருந்த பின், மிகக் குறைந்த தொகையை மட்டும் திரும்பப் பெறுவதை விட, எவ்வளவு விரைவாக முடியுமோ, அவ்வளவு விரைவாக முயன்று, முன்னதாக பெறும் தொகை சற்று குறைவு என்றாலும், அதற்கான வட்டிச் செலவை… அதனால் வரும் இழப்பைக் குறைக்கலாம் என்பது வணிக ரீதியான பார்வை.
Also read: டெம்பர்ட் கிளாஸ் தயாரிப்பு மற்றும் விற்பனை
எனவே, புதிய திவால் சட்டப்படி நடக்கும் இவ் வகையான முயற்சியில், அதிக பட்சமாக 180 நாட்கள், அதாவது 6 மாதங்களில் இந்த வாராக் கடன்களுக்கு தீர்வு காணும் முயற்சிகள் தொடங்கி உள்ளன. கடந்த காலங்களில் சிவில் சட்டப்படி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வது… கடன் வசூல் தீர்ப்பாயத்தில் முறையீடு செய் வது…. பின்னர் சர்ஃபாசி சட்ட உதவியை நாடுவது… என நடந்த எந்த வழி முறையிலும் கிடைக்காத ஒரு தீர்வு – இந்த புதிய திவால் சட்டத்தால் கிடைக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது. அதற்காக மத்திய அரசு Insolvancy & Bankruptcy Board of India (IBBI) என்ற ஒரு அமைப்பைத் தொடங்கி உள்ளது. இதன் மூலம் புதிய திவால் சட்ட நடை முறைகளை நடைமுறைப் படுத்தி, தொழில் முறை வல்லுநர்களை Insolvancy Professionals) அமர்த்த முயன்று வருகிறது. அவர்களுக்கு பயிற்சி அளிப்பதுடன், அவர்களை வழிநடத்தி, கட்டுப் படுத்தும் பொறுப்பையும் மேற்கொண்டு வருகிறது. இதையொட்டி, கடந்த 2017ம் ஆண்டு இறுதி வாக்கில், மதிப்பீட்டாளர்களையும் IBBI யின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்து, வரன்முறைப்படுத்த மத்திய அரசு முடிவு செய்து உள்ளது.
இதனால், நாடு முழுவதும் உள்ள சுமார் 35,000 வரை இருக்க வாய்ப்புள்ள சொத்து மதிப்பீட்டாளர்களுக்கு ஒரு தகுதித் தேர்வு ஆன்லைன் முறையில் நடக்கிறது.
இந்த தேர்வில் பங்கேற்க விரும்புவோருக்கு, உலக அளவில் கடைப் பிடிக்கப்படும் மதிப்பீட்டு நடை முறைகளை வலியுறுத்தவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது. அதோடு, ஏற்கனவே இத்தொழிலில் உள்ள அனைவரும் கூட, கட்டாயமாக, இந்த தேர்வில் பங்கேற்று வெற்றி பெற வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது.
வங்கித் துறையில் உள்ள மூத்த அதிகாரிகள் பலரும், இத்துறை குறித்த புரிதல் உள்ள மற்றவர்களும், பல மதிப்பீட்டாளர்களின் திறன் அறிந்த, இந்த துறையிலேயே பங்களித்து வரும் பலரும் இந்தத் தேர்வை வரவேகிறார்கள்.