சொத்துக்களை வாங்குவதற்கும், விற்பதற்கும், அடமான கடன் வாங்குவதற்கும், பாகப் பிரிவினை செய்யும் போதும், சொத்து தொடர்பான நீதிமன்ற வழக்குகளில் கோர்ட் ஸ்டாம்ப் வாங்குவதற்கும் சொத்துகளை ஏலம் விடும் போதும் சொத்துகளுக்கு வழிகாட்டி மதிப்பு நிர்ணயிக்கும் போதும், சொத்துகளை காப்பீடு செய்யும் போதும், அரசு நில எடுப்பு இழப்பீடு கொடுக்கும் போதும், வருமான வரி, சொத்து வரி, கேப்பிட்டல் கெயின் வரி போன்ற வரிகளுக்காக சொத்து மதிப்பீடு மிக மிக தேவையாய் இருக்கிறது.
அரசின் வழிகாட்டி மதிப்பும், சந்தை மதிப்பும் காலி நில சொத்தை வாங்கும் போதும், விற்கும் போதும் காலி நிலத்தின் விலையை பெருமளவில் தீர்மானிக்கிறது.
அதே போல் காலி நிலத்தை அரசு கையகப்படுத்தும் போது இழப்பீடு கொடுப்பதற்கு நிர்ணயிக்கும் மதிப்பு பெரும்பாலும் வழிகாட்டி மதிப்பு & சந்தை மதிப்பை சார்ந்தே இருக்கிறது. ஆனால் அதில் கட்டிடமோ, தோட்டமோ, தோப்போ இருக்கும் போது அவை என்ன வருமானம் சம்பாதித்துக் கொடுக்கிறது என்ற பொருள் ஈட்டும் மதிப்பும் (Economy Value) பார்க்கப்படுகிறது.
ஒரு நிலத்தை அரசு எடுக்க போகிறது, வெள்ளம், சுனாமி, நிலநடுக்கம், போன்ற இயற்கை பேரிடர் நேரங்களில், நிலத்தை சுற்றி இருக்கும் மோசமான சூழ்நிலை, விற்பவரின் தனிப்பட்ட பொருளாதார சிக்கல்கள், கலவரம், போர் போன்ற சூழ்நிலைகளில் சொத்துகளின் மதிப்பு வாங்கிய விலையை விட குறைவாக விலைக்குக் கூட விற்பதற்கு தயாராக இருப்பார்கள்.
சந்தை மதிப்பை விட அதிக பணம் கொடுத்து சொத்தை வாங்க தனிப்பட்ட ஒருவர் விரும்பினால் அதனை ஃபேன்சி மதிப்பு (Fancy Value) எனப்படுகிறது. குறிப்பிட்ட சொத்து மீது உணர்ச்சி சார்ந்து விருப்பம் வைத்து வாங்குவது சென்டி மென்ட் மதிப்பு (Sentiment Value) என்கிறோம்.
சொத்துகளில் உள்ள கட்டுமானங்களுக்கு வயதாகிக் கொண்டே போனாலும், பராமரிப்பு இல்லாமல் போனாலும் அதற்கு தேய்மான மதிப்பு கணக்கிடுவார்கள்.
சொத்தின் மதிப்பை பாதிக்கும் காரணிகளாக வாடகை ஒப்பந்த சட்டம், நகர நில உச்சவரம்பு சட்டம், நகர ஊரமைப்பு சட்டம், பதட்டமான சூழ்நிலைகள் (வெள்ளம் , புயல், நிலநடுக்கம்,) ஆகியவை இருக்கின்றன.
நிலம் & சட்டம், விளை நிலங்கள், காப்பி, ரப்பர், தேயிலை, ஏலக்காய், தோட்டங்கள் கட்டிடம், தொழிற்சாலைகள் & அதன் எந்திரங்கள் – கருவிகள், தோட்டங்கள், தோப்புகள், காலி நிலங்கள், வீட்டு மனைகள் & வீடுகள், என்று பலவகையான சொத்துகளுக்கு பலவகையான மதிப்பீடுகள் உள்ளன.
சொத்து மதிப்பீடு என்பது கருத்துதானே (Value Is Only Opinion) தவிர 100% உண்மை அல்ல.
– சா. மு. பரஞ்சோதிபாண்டியன்