நிலம் தொடர்பான சிக்கல்கள் வரும்போது நீதிமன்றத்திற்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டால் எந்தெந்த கோர்ட்டில் என்னென்ன வழக்குகள் விசாரிக்கப்படுகின்றன என்பது அனைவரும் அறியாத ஒன்றே. வழக்கறிஞர்கள் சிட்டி சிவில் கோர்ட், சப் கோர்ட், முன்சிப் கோர்ட், மேஜிஸ்ட்ரேட் கோர்ட், ஹை கோர்ட் என்று கூறும்போது சாதாரண மக்களுக்கு எந்த கோர்ட் எதற்கு என்று தெரியாது. அதை பற்றி அறிந்துக் கொள்வதற்காக வழக்கறிஞர் திரு. அன்பழகன் அவர்களை சந்தித்தேன். அவர் கூறியதாவது, ” நீதிமன்றங்களை, மேல்நிலை நீதிமன்றங்கள் கீழ்நிலை நீதிமன்றங்கள் என்று இரண்டாக பிரிக்கலாம். இது ஆங்கிலோ இந்திய படிநிலை முறை என்று சொல்வார்கள்.
கீழ்நிலை நீதிமன்றங்கள் முதல்நிலை நீதிமன்றங்கள், இரண்டாம் நிலை நீதிமன்றங்கள், மூன்றாம் நிலை நீதிமன்றங்கள் என்று மூன்று நிலைகளாக பிரிக்கப்படுகின்றன.
முதல் நிலை நீதிமன்றத்தில் கிரிமினல் வழக்குகளை விசாரிக்க மேஜிஸ்ட்ரேட் கோரட்(Magistrate Court) என்றும் சிவில் வழக்குகளை விசாரிக்க முன்சீப் கோர்ட் (Munsif Court) என்றும் சொல்லுவார்கள்.
Also read: ஏல சொத்துகளில் உள்ள, வெளியே தெரியாத செய்திகள்
இரண்டாவது நிலையில் சிவில் வழக்குகள் எல்லாவற்றையும் சார்பு நிலை நீதிமன்றம்(sub court) விசாரணை செய்யும். கொலை அல்லாத குற்றவியல் வழக்குகளையும் விசாரிக்கும்.
மூன்றாம் நிலை நீதிமன்றம் மாவட்ட நீதிமன்றம் (District Court) ஆகும். இவை கடுமையான குற்றவியல் வழக்குகளை(Sessions court) விசாரிக்கும். இரண்டாம்நிலை நீதிமன்றங்களின் மேல்முறையீடுகளை விசாரிக்கும் நீதிமன்றங்களாக இருக்கிறது. முதன்மையாக, சிவில் வழக்குகளையும் மாவட்ட நீதிமன்றம் விசாரிக்கின்றது. இந்த மூன்று படிநிலைகளுக்கு மேலே உயர்நீதிமன்றமும் அதற்கு மேலே உச்சநீதிமன்றமும் இருக்கிறது.
மாவட்ட நீதிமன்றங்களின் தீர்ப்புகளையும் இரண்டாம் நிலை நீதிமன்றங்களின் ஒரு சில தீர்ப்புகளையும் மேல்முறையீடுகளாக உயர்நீதிமன்றம் விசாரிக்கலாம். சிவில் வழக்குகளுக்கு தனி தனியாக நிறைய தீர்ப்பாயங்களும் கிரிமினல் வழக்குகளுக்கு மிக குறைவான தீர்ப்பாயங்களும் இருக்கின்றன.
இராணுவ தீர்ப்பாயம், அரசு ஊழியர்களின் ஊழல் குற்றசாட்டுகளை விசாரிக்கும் தீர்ப்பாயம் கிரிமினல் குற்றங்களுக்கான தீர்ப்பாயங்காளாக சொல்லலாம். அதிகமாக சிவில் வழக்குகள் இருப்பதால் அதற்கு துறை வாரியாக தீர்ப்பாயம் பிரித்து கொடுத்து விசாரிக்க வைத்து விட்டனர்.
தொழிலாளர் சிக்கல்களை பொறுத்தவரை தொழிலாளர் விபத்துக்கு, தொழிலாளர் ஊதியத்திற்கு, தொழிலாளர் நலத்திற்கு, தொழிலாளர் தகறாறுகளுக்கு என தனி தனி தீர்ப்பாயம் இருக்கிறது. கூட்டுறவு துறைக்கு தனி தீர்ப்பாயமும் நில அளவை துறைக்கு தனி தீர்ப்பாயமும் நில சீர்திருத்தத்திற்கு தனி தீர்ப்பாயமும், சுரங்கம் சிக்கல்களுக்கு தனி தீர்ப்பாயமும் நீர்பாசனத்திற்கு தனி தீர்ப்பாயமும் அகதிகளுக்கு தனியாகவும் செய்திதாளுக்கு, தேர்தல் முறைகேடுகளுக்கு தனி தீர்ப்பாயங்களும் இருக்கின்றன.
Also read: சொத்து மதிப்பீடு, ஒரு கருத்துதான்!
தீர்ப்பாயங்களிலே நில அளவை தீர்ப்பாயம், வீட்டு வாடகை தீரப்பாயம், குடும்ப கோர்ட் தீர்ப்பாயம் ஆகியவற்றில் தான் அதிக வழக்குகள் இருக்கின்றன.
இது இல்லாமல் நுகர்வோர் கோர்ட் ஒன்று இருக்கிறது அவை மாவட்டம், மாநிலம் மற்றும் தேசிய அளவில் என்று இருக்கின்றன.
மாவட்ட சமரச மையம், ஒவ்வொரு மாவட்ட நீதிமன்ற வளாகத்திற்கு உள்ளேயும் இருக்கின்றது. வாதி, பிரதிவாதி ஆகிய இரு தரப்பினரும் வழக்கை காலம் கடந்தாமல் பேசி தீர்ப்பதற்கு இந்த மையங்கள் பயன்படுகின்றன” என்றார்.
– சா. மு. பரஞ்சோதி பாண்டியன்