Latest Posts

உலர் பழங்கள் வணிகத்தில் வெற்றி பெறுவது எப்படி?

- Advertisement -

தொழில் வாய்ப்பு தேடி சென்னை வந்து தொடர்ந்து கடின உழைப்பால் சவுகார்பேட்டையில் தற்போது, உலர் பழங்கள் மற்றும் நாட்டு மருந்துகள் விற்பனையில் முத்திரை பதித்து வருகிறார் திரு. நம்பிக்கை நாகராஜ். தன்னுடைய வணிகம் குறித்து வளர்தொழில் இதழுக்காக விரிவாக பேசினார்.

“என் சொந்த ஊர் தேனி மாவட்டம். போடிநாயக்கனூரில் 1981 ஆம் ஆண்டில் பிறந்தேன். என் தந்தையார் திரு. இரத்தினம் அடிப்படையில் ஓட்டுநரான அவர், பந்தல் போடும் வேலைக்கு செல்வது உள்ளிட்ட எந்த வேலையானாலும் செய்யத் தயங்க மாட்டார்.

எனக்கு மூன்று தங்கைகள். பெரிய குடும்பம் என்பதால் வருமானம் போதவில்லை. இத்தகையை சூழலில் என் தாயார் திருமதி. கஸ்தூரி சிக்கனமாக செலவு செய்து குடும்பத்தைத் தாங்கிப்பிடித்து வந்தார். வருமானம் போதவில்லை என்பதால், நான் ஆறாவது படிக்கும் போதே என் தாயார் போட்டுத் தரும் பாயாசத்தை ஒரு பாத்திரத்தில் தூக்கிக்கொண்டு தெருத்தெருவாக சென்று விற்பனை செய்து விட்டு வருவேன்.

பத்தாம் வகுப்பு முடிக்கும் வரை காலை, மாலையில் உழைத்து வருமானம் ஈட்டினேன். ஒரு கவரிங் நகை கடையில் 2 ஆண்டுகள் பணி செய்தேன். பள்ளிக்குச் செல்வதற்கு முன்பு கடையை பெருக்கி சுத்தம் செய்து கொடுப்பேன். பள்ளியில் இருந்து வந்த பிறகு மாலை 5 மணி முதல் இரவு 9 மணிவரை அந்த கடைக்கு சென்று வியாபாரத்தில் ஈடுபடுவேன்.

Also read: ஐம்பதாயிரம் ரூபாயில் ஒரு வணிக வாய்ப்பு, காமதேனு மசாலா தருகிறது!

எட்டு, ஒன்பது வகுப்பு படிக்கும் நேரத்தில் கோடை விடுமுறையின் போது, என் உறவினர் ஒருவருடன் சென்னை சென்று மாதம் ரூபாய் 500 சம்பளத்தில் இரண்டு மாதங்கள் வேலை செய்தேன். மொத்தமாக மூட்டைகளில் வரும் பேரிச்சம் பழத்தை பிரித்து பேக்கிங் செய்வது, மாலை நேரங்களில் அதை கடைகளுக்கு சப்ளே செய்வது போன்ற பணிகளை செய்தேன்.

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில், கணக்குப் பாடத்தில் நான் தேர்ச்சி பெறவில்லை. அதுவே, தொழில் வாய்ப்பு தேடி சென்னை வர முதன்மை காரணமாக அமைந்தது. விடுமுறை காலங்களில் செய்த அதே பணியைதான் மீண்டும் செய்தேன்.

உலர் பழங்கள் மற்றும் நாட்டு மருந்து பொருட்களை பாக்கெட்டில் போடுவது, சிறிய கடைகளுக்கு சரக்கு மூட்டைகளை கொண்டு செல்வது, மாலை நேரத்தில் அந்த கடைகளில் வசூல் செய்வது ஆகிய பணிகளை மேற்கொண்டேன். ஒரு வருடம் கடினமாக உழைத்தேன். உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைக்காததால் மீண்டும் சொந்த ஊர் திரும்பினேன்.

சென்னையில் இருந்த போது, நேரம் கிடைக்கும் போதெல்லாம் சவுகார் பேட்டையில் ‘வாசவி இந்தியா’ என்ற உலர் பழங்கள் மற்றும் நாட்டு மருந்துகள் விற்பனை செய்யும் கடையில் உட்காருவேன். அதன் உரிமையாளர் சுதாகர் எனக்கு நன்கு பழக்கமானார். நான் கடின உழைப்பாளி என்பதை அவர் அறிவார். நான் ஊருக்குத் திரும்பிய சில தினங்களில் அவர் என்னிடம் பேசினார். தன்னுடைய கடைக்கு வருமாறு கூப்பிட்டார்.

சென்னையில் எனக்கு நண்பர்கள் அதிகம். அழைத்ததால் மீண்டும் சென்னை வந்து, அவருடைய வாசவி இந்தியா கடையில் வேலைக்கு சேர்ந்தேன். அங்கு உலர் பழங்கள் மற்றும் நாட்டு மருந்து பொருட்கள் நன்கு விற்பனை ஆயின.

சில நாட்கள் மட்டுமே பொட்டலம் போட்டுக் கொடுப்பது போன்ற பணியில் வைத்திருந்தார். பின்னர் கல்லாவில் தனக்கு அருகே அமர வைத்து பில் போடும் பணியைக் கொடுத்தார். மிக விரைவில் கடையை நிர்வகிக்கும் பொறுப்பையும் கொடுத்தார். அது சவுகார்பேட்டை பகுதியில் நன்கு விற்பனையாகும் கடை என்பதால் ஏராளமான வணிக நண்பர்களின் அறிமுகமும், நட்பும் கிடைத்தது. தொடக்க காலத்தில் இருந்தே சக நண்பர்களுக்கும், வணிகர்களுக்கும் நம்பிக்கைக்கு உரியவனாக திகழ்ந்தேன். அந்த நம்பிக்கையே காலப்போக்கில் என் பெயருடன் சேர்ந்து கொண்டது.

நான் வேலை பார்த்த ‘வாசவி இந்தியா’ கடை சில்லறை வியாபாரக்கடை. அந்த பகுதியில் அவர்களுக்கு மொத்த விற்பனைக் கடையும் இருந்தது. அதை அவருடைய தந்தையார் நிர்வகித்தார். பின்பு அவர் என்னிடம் இந்த கடையின் பொறுப்பை உன்னிடம் விட்டுவிடுகிறேன். மாதம் குறிப்பிட்ட தொகையைக் கொடுத்து விடு என்று கூறினார். அந்த நேரத்தில் உயர் கல்வி முடித்து விட்டு வந்த அவருடைய ஒன்றுவிட்ட சகோதரர் அக்கடையை நடத்தும் பொறுப்பைக் கேட்டார்.

குடும்ப அங்கத்தினர் என்பதால் எனக்கு வர வேண்டிய வாய்ப்பு அவரிடம் போனது. இத்தகைய சூழலில் தொடர்ந்து அக்கடையில் பயணிக்க என்னால் முடியாத நிலையில், திடீரென கடையை விட்டு வெளியில் வந்து சொந்தமாக தொழில் தொடங்க முடிவு செய்தேன்.

சவுகார்பேட்டையில் உலர் பழங்கள் நாட்டு மருந்து கடை வைக்க ஓரளவு முதலீடு தேவை. என்னிடம் சிறிதளவு பணமே இருந்தது. மேலும், தெரிந்த மொத்த வணிகர்களிடம் சென்று உலர்பழங்கள் நாட்டு மருந்துகள் கடனுக்கு வாங்கி சிறு வியாபாரிகளுக்கு விற்றேன். கடனை அன்றிரவே அடைத்தேன். முதல் நாளே எனக்கு ரூ. 5 ஆயிரம் லாபம் கிடைத்தது. வணிகத்தில் வெற்றி அடைந்து விடலாம் என்ற நம்பிக்கையும் ஏற்பட்டது.

இதையடுத்து, ஒரு கடை வைக்க முதலீட்டுக்கும், வாடகைக்கும் பணம் சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டேன். என் நண்பன் மூலம் ஒரு லட்சம் ரூபாய், என் தாய்மாமா மூலம் ஒரு லட்சம் மற்றும் என் தாயார் ஒரு லட்சம் என்று கொடுத்தார்கள். சேர்ந்த பணத்தின் மூலம் “ஈஸ்வர் டிரேடர்ஸ்” என்ற பெயரில் வியாபாரத்தை தீவிரப்படுத்தினேன். நண்பர் மூலம் வாங்கிய கடனை மூன்றே மாதத்தில் அடைத்தேன். ஒரு வருடத்தில் வாங்கிய கடன்கள் அனைத்தையும் கட்டி முடித்தேன்.

Also read: அசைவ உணவகத்தை சிறப்பாக நடத்துவது எப்படி?

வெகு விரைவில் அதே பகுதியில் ஒரு பெரிய இடத்தில் ஒரு லட்சம் அட்வான்ஸ், 3000 ரூபாய் மாத வாடகைக்கு ஒரு கடை கிடைத்தது. அதன் பிறகு என் வளர்ச்சியின் வேகம் மேலும் அதிகரித்தது. அக்கடை விற்பனைக்கு வந்தபோது நானே வாங்கிக் கொண்டேன். கடை சொந்தமான பிறகு வியாபாரம் மேலும் அதிகரித்தது. சிறு வியாபாரிகள் மட்டும் சுமார் 500 பேர் என்னுடைய வாடிக்கையாளர் பட்டியலில் இருந்தனர். கேரளா, ஆந்திர மாநில சிறு வியாபாரிகளும் என்னிடம் சரக்கு வாங்கிச் சென்றனர். நாகராஜ் என்ற பெயருக்கு முன்பாக நம்பிக்கை என்று பெயரும் சேர்ந்துகொண்டது. அந்த நம்பிக்கைதான் வாடிக்கையாளர்களை என்னை தேடி வரவழைத்தது.

குறைந்த லாபத்தில் அதிக பொருளை விற்பனை செய்கிறேன். பாதாம், பிஸ்தா, முந்திரி, திராட்சை உள்ளிட்ட உலர் பழங்கள், சித்தரத்தை, திப்பிலி, ஓமம், சுக்கு, ஜாதிக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய், மிளகு, சீரகம் உள்ளிட்ட அனைத்து நாட்டு மருந்துகளையும் சில்லறை மற்றும் மொத்தமாக விற்பனை செய்கிறோம்.

2007-ல் எனக்கு திருமணம் நடைபெற்றது. மனைவி ராஜேஸ்வரி பி.காம் பட்டதாரி. நான் வெளியூர் செல்லும்போது கடையை அவர் கவனித்துக் கொண்டார். தொடக்கத்தில் இருந்தே எனக்கு வழிகாட்டியாகத் திகழ்ந்தவர் என் தாயார். நேரம் கிடைக்கும் போதெல்லாம் சென்னை வந்து, இன்றும் எனக்கு பெரும் துணையாக உள்ளார்.

இடையிடையே, ரியல் எஸ்டேட் தொழில் செய்தும் பணம் ஈட்டினேன். இதற்கும் என் தாயார்தான் வழிகாட்டினார். சென்னையில் ஒரு இடத்தில் நிலத்தை வாங்கி பின்னர் அதை விற்க முற்பட்ட போது பல்வேறு இடையூறுகள் வந்தன. அந்த நேரத்தில் ஒரு பெரிய தொகை முடங்கியது. அதன் மூலம் எனக்கு நல்ல படிப்பினைகள் கிடைத்தன. தற்போது, ரியல் எஸ்டேட் தொழிலில் நன்கு ஆராய்ந்து தான் பணத்தை முதலீடு செய்கிறேன்.

மேலும், சமூக ஆர்வலர் திரு. கா. மு. சுந்தரம், திரு. மணிகண்டன் ஆகியோர் உடன் சேர்ந்து கிரீன் லைப் ஃபவுண்டேஷன் என்ற அமைப்பை உருவாக்கி உள்ளேன். அதன் மூலம் இதுவரை ஆயிரத்து ஐநூறு மரக்கன்றுகள் நட்டு பராமரித்து வருகிறோம். தொடர்ந்து பல்வேறு நற்பணிகள் செய்ய திட்டமிட்டு உள்ளோம்.

வட இந்திய வணிகர்கள் நிறைந்து வாழும் சவுகார்பேட்டையில் நான் வணிகம் செய்து வெற்றி பெற்றிருக்கிறேன். அவர்களில் நிறைய பேர் எனக்கு நண்பர்கள். நம் தமிழக வணிகர்கள் பெரும்பாலும், தொழிலில் 10 லட்சம், 20 லட்சம் லாபம் ஈட்டினால் உடனே விலை உயர்ந்த காரை வாங்குவது, இடத்தை வாங்கிப் போடுவது என்று அந்த பணத்தை முடக்கி விடுவார்கள். ஆனால் வட இந்திய வணிகர்கள் ஒரு குறிப்பிட்ட உயரத்தை அடையும் வரை வணிக வளர்ச்சிக்குதான் லாபப் பணத்தை பயன்படுத்துவார்கள். மீதம் பணம் வரும்போதுதான் வீடு மற்றும் விலை உயர்ந்த வாகனம் வாங்குவது போன்றவற்றில் ஈடுபடுவார்கள். இந்த நுட்பத்துடன் நமது வணிகர்களின் செயல்பட வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன் என்றார் திரு. ‘நம்பிக்கை’ நாகராஜ்.

– ம. வி. ராஜதுரை

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

Subscribe to our latest news