இந்த கட்டுரை வழிபாடு என்ற பெயரில் தலையில் தேங்காய் உடைக்க அனுமதிக்கும் அப்பாவி பக்தர்களுக்கானது. கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் கடவுளை வழிபட மென்மையான பல முறைகள் பல இருக்கும்போது, இப்படி உடல் நலனுக்கு எதிரான கடுமையான வழிமுறைகளில் ஈடுபட வேண்டியது இல்லை. பிராமணர்கள், படித்தவர்கள் இப்படிப்பட்ட வழிமுறைகளில் ஈடுபடுவது இல்லை.
தலையில் தேங்காய் உடைப்பது பற்றி மருத்துவர்கள் கடுமையாக எச்சரிக்கை செய்கிறார்கள். அதற்கேற்ப தலையில் தேங்காய் உடைத்துக் கொண்டவர்களின் தலையில் இரத்தம் வழிதல், வீங்குதல், மயக்கம் வருதல் போன்றவற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்டு இருக்கிறார்கள்.
”தலையில் தேங்காய் உடைத்தால் மனிதனுக்கு ஆபத்து உண்டா என்றால், நிச்சயம் ஆபத்துகளும், பாதிப்புகளும் உண்டு. தலையின் இடது பக்கத்தில் வலுவாக அடிபட்டால், அந்தப் பகுதி முழுவதும், அதாவது அடிபட்ட தலை பகுதியில் இருந்து உள்ளங்கால் வரை பாதிக்கப்படும். இதே போல வலது பக்கத்தில் அடிபட்டாலும் இதே நிலைதான். மூளை உள்ள பகுதியில் அடிபடும்போது பாதிப்பு கடுமையாக இருக்கும். உயிருக்கே ஆபத்து வரக்கூடும். இரு சக்கர வாகனங்களில் செல்லும்போது கண்டிப்பாக ஹெல்மட் அணிய வேண்டும் என்று சட்டம் போட்டு ஏன் வலியுறுத்தப்படுகிறது? தலைக்காயம் அத்தனை மோசமானது என்பதால்தான்.
மண்டையில் அடிபடும்போது ரத்தம் வராமல் இருக்கலாம். ஆனால் அந்த அடி மண்டைக்குள் இருக்கும் சிறு நரம்புகளை பாதித்து இருக்கலாம். இன்னொரு பாதிப்பு மூளைக்கும், கபாலத்துக்கும் இடையே திரவம் சுற்றிக் கொண்டு இருக்கும். மண்டையில் தேங்காய் உடைக்கும்போது அந்த இடம் பாதிக்கப்பட்டால் சுற்றிக் கொண்டிருக்கும் திரவம் சுற்றுவதில் பாதிப்பு ஏற்படும். இதனால் நினைவு ஆற்றலை இழக்க நேரிடலாம். மேலும் தேங்காய் உடைக்கும் போது ஏதேனும் காயம் ஏற்பட்டால் உடனே மருத்துவர்களை அணுகி ஆலோசனை பெற வேண்டும்.” என்கிறார்கள் மருத்துவர்கள்.
நூற்றுக் கணக்கான பக்தர்கள் கோயிலில் தேங்காய் உடைக்கும் இடத்தில் இருந்து ரத்தம் வழியும் தலையுடன் வருவதைப் பார்க்கும் போதும், அந்த காயங்களில் மஞ்சளை அப்பிக் கொண்டு போகும் போதும் மருத்துவர்களின் எச்சரிக்கை எந்த அளவுக்கு முதன்மையானது என்பதைப் புரிந்து கொள்ள முடியும். பொதுவாக தலையில் தேங்காய் உடைத்துக் கொள்ளும் அனைவருமே, ”தலையில் தேங்காய் உடைக்கும்போது சுவரில் கடுமையாக முட்டிக் கொள்வதைப் போல் வலிக்கும்” என்கிறார்கள். இந்த வலியும், காயங்களும் இல்லாமல் வழிபட மென்மையான வழிமுறைகள் இருக்கும்போது, ஏன் இந்த வலியும், காயமும்? சிந்தியுங்கள்.
– ரிங்கி