நான்கே மாதங்களில் உடல் எடை குறையும்

man buying fruits from street vendor to loose weight, உடல் இடை குறைக்க என்ன செய்வது

உடல் எடை குறைக்க என்ன செய்வது – அதிகமாகவோ அல்லது அடிக்கடி சாப்பிட்டாலோ அதை ஏற்றுக் கொள்ளும் வகையில் வயிறு விரிகிறது. குறைவாகச் சாப்பிட்டால் அதை ஏற்றுக் கொள்ளும் வகையில் வயிறு சுருங்குகிறது. அவ்வப்போது ஏதாவது தின்று கொண்டே இருந்தால், ‘போதும்’ என்று சொல்வதற்குப் பதிலாக அதை ஏற்றுக் கொள்வதற்காக மெல்ல மெல்ல தன்னை பெரிதாக்கிக் கொள்கிறது வயிறு. ஏதோ ஒரு நாள் அப்படிச் சாப்பிட்டால் பெரிதாவதில்லை.

சாப்பாட்டுப் பிரியர்களாக இருந்தால் வயிறு பெரிதாவதை தவிர்க்க முடியாது என்கிறார்கள் உடல் பருமன் பற்றிய ஆய்வாளர்கள். நியூயார்க்கில் உடல் பருமன் பற்றி ஆய்வு மையம் ஒன்றில் பணிபுரியும் உளவியல் வல்லுநரான திரு.ஆலன் கெலிட்டர் என்பவர் அதிக உடல் எடை கொண்ட 14 பேர்களை தனது ஆராய்ச்சிக்காகத் தேர்ந்தெடுத்தார்.

ஒவ்வொருவரையும் நான்கு தம்ளர் தண்ணீர் கொடுத்து குடிக்கச் சொன்னார். குடித்தார்கள். அதன் பிறகு தொடர்ந்து நான்கு வாரங்களுக்கு அவர்களை கலோரி குறைந்த உணவை உண்ணச் செய்தார். பின்னர் அவர்களுக்கு தண்ணீர் கொடுத்த போது மூன்று தம்ளர் குடித்த அனைவருமே போதும் என்று சொல்லி விட்டார்கள். 27 விழுக்காடு குறைவாகவும் சராசரி உடல் எடை உள்ளவர்கள் எவ்வளவு குடிக்க முடியுமோ அந்த அளவுதான் அவர்களால் குடிக்க முடிந் தது.

அதாவது குறைவாக உண்ணப் பழகிவிட்டால் அதற்கேற்றவாறு வயிறு சுருங்கிக் கொள்கிறது. உடல் எடை யும் குறைகிறது என்பதே ஆராய்ச்சியின் முடிவு.

உடல் குண்டாக இருப்பவர்கள் தங்களுக்கு சாப்பாட்டின் மேல் உள்ள ஆசையை கட்டுப்படுத்த பழகிக் கொண்டால், உடனடியாக இல்லா விட்டாலும், போகப்போக குறைவான உணவிலேயே நிறைவாக சாப்பிட்ட உணர்வைப் பெற முடியும், உடல் எடையைக் குறைக்க முடியும்.

அதற்காக இதோ சில யோசனைகள்.

குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே உண்ணுங்கள்; குறைவாக உண்ணுங்கள்

ஒரு நாளைக்கு குறிப்பிட்ட மூன்று நேரங்களில் மிதமான சாப்பாடு. இடையில் இரண்டு நேரங்களில் ஏதாவது நொறுக்குத் தீனி. கண்ட நேரங்களில் சாப்பிடாமல் குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே உண்ணுவதைப் பழக்கமாக்கிக் கொண்டால் பசி உணர்வு மெல்ல மெல்ல ஒரு கட்டுக்குள் வந்து விடும். இது உங்கள் உடல் எடையைக் குறைக்கும் முயற்சியில் பெரிய அளவுக்கு உதவும்.

உடல் எடை குறைய மெதுவாக உண்ணுங்கள்

கொஞ்சம் சாப்பிடுங்கள். சாப்பிடுவதை நிறுத்திவிட்டு தொலைக்காட்சி பாருங்கள். புத்தகம் படியுங்கள். யாருடனாவது பேசிக் கொண்டிருங்கள். சற்று இடைவெளிக்குப் பின் மீண்டும் அடுத்த கவளம். அதாவது உங்கள் வயிறு சரி சொல்வதற்கு கொஞ்சம் நேரம் கொடுங்கள். கொஞ்சம் மீதம் ஆகி விட்டால் பரவாயில்லை. வீணாகிறதே என்று கவலைப் படாதீர்கள். முதலில் பார்வையிலல் இருந்து அதை அப்புறப்படுத்துங்கள். பார்த்தால் பசி தீராது. பார்த்தால் பசிக்கும். 20 கவளங்களை வேகமாகச் சாப்பிட்டால் கிடைக்கும் நிறைவு 7 கவளங்களை மெதுவாக உண்பதில் கிடைத்து விடும். தங்கள் உணவை உடன் இருப்பவர்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள். வயிற்றுக்கு நிறைவு. மனதுக்கு மகிழ்ச்சி . 

நார்ச்சத்து அதிகம் உள்ள உணவு கொஞ்சம் சாப்பிட்டாலே நிறைய சாப்பிட்ட நிறைவைத் தரும். சாப்பிடத் தொடங்கும் முன் கொஞ்சம் பச்சடி அல்லது காய்கறி சூப் அருந்துங்கள். சாப்பிட்டபின் ஏதாவது கொஞ்சம் பழம். அவையும்கூட 200 கலோரிக்கும் குறைவாகவே இருக்கட்டும். தண்ணீ ர் குடியுங்கள்

சாப்பிடும் முன்பு ஒரு தம்ளர் தண்ணீர். சாப்பிடும்போது இடையிடையே ஒரு தம்ளர். இவையும் உங்கள் பசி உணர்வை கொஞ்சம் மட்டுப் படுத்தும்.

உண்ணும் ஆர்வத்தை குறைக்க இன்னொரு வழி

நல்ல உடல் நலத்திற்குரிய பண்டங்களை உண்ணப் பழகுங்கள். இணையத்தில் தேடினால் உணவுப் பொருட்களைப் பற்றிய நிறைய செய்திகள் இருக்கின்றன. அவற்றில் நம்பகத்தன்மை உள்ளவற்றை மட்டும் தேர்வு செய்து கொள்ளுங்கள்.

கலோரி அதிகமுள்ள உணவுக்குப் பதிலாக கலோரி குறைவான உணவை சுவைக்கும்படி உங்கள் நாக்கின் சுவை அரும்புகளை பழக்கப் படுத்துங்கள். ஓரிரு வாரங்களுக்கு ஏக்கமாக இருக்கும். பிறகு பழகி விடும்.

நடை உடை பாவனையை கொஞ்சம் மாற்றுங்கள்

உணவுப் பழக்கத்தை மாற்றும் போதே உங்களது செயல் முறைகளையும் கொஞ்சம் மாற்றிப் பாருங்கள். எப்போதும் நேராக நில்லுங்கள். ஓரள வாக ஒல்லியாகத் தோன்றுவீர்கள். உடற்பயிற்சிக்கு நேரம் ஒதுக்குங்கள். யாஸ்மின் கராச்சிவாலா  வயிற்றைக் குறைக்க சொல்லித்தரும் உடற்பயிற்சிகளை தொடர்ந்து செய்யலாம்.

“நான் ரொம்ப விரைவு எங்கே எது கிடைக்கிறதோ அங்கே அதை சாப்பிட்டுவிட்டு அடுத்தடுத்து வேலையைக் கவனிக்க வேண்டியதுதான்”. இப்படி சொல்லிக் கொண்டிருந்தார் ஒரு பெண்மணி.

Also Read: உணர்வுகளையும், ஆற்றலையும் ஒன்று படுத்தும் தேநீர்

தன் உடல் குண்டாவதை உணர்ந்தவுடன் ஒழுங்கான உணவுப் பழக்கத்தை இவர் கடைப்பிடிக்க தொடங்கினார். குறைவான உணவு, அதுவும் ஒரே தடவையாக இல்லாமல் அவ்வப்போது அளவு குறைவாக, மாவுச்சத்து குறைவான உணவு, கொஞ்சம் உடற்பயிற்சி – எல்லாமாகச் சேர்ந்து நான்கே மாதத்தில் உடல் எடை குறைந்தது அவருக்கு. “குறைவான உணவு அதே நேரம் நிறைய சாப்பிட்ட நிறைவு . இந்த உணவுக் கொள்கை எனக்கு உதவி யாக இருக்கிறது” என்று சொல்லும் இவர், “எது என் எடை குறைப்புக்கு  நல்லதோ அதை ரசித்துச் சாப்பிடுகிறேன். அதை சாப்பிட முடியவில்லையே, இதை சாப்பிட முடியவில்லையே என்ற ஏக்க மெல்லாம் இப்போது கிடையாது” என்கிறார்.

English Title: How to reduce weight in four months.

– ரவிசங்கர்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here