நிகழ்ச்சி மேலாண்மைத் துறை (Event Management) இன்று பெரிய அளவில் வளர்ந்து வருகிறது. பெரும்பாலான நிறுவனங்கள், வீடுகளில் நடைபெறும் நிகழ்ச்சிகள், விழாக்களுக்கான ஏற்பாடுகளை இத்தகைய நிகழ்ச்சி மேலாண்மை நிறுவனங்களிடன் ஒப்படைத்து விடுகிறார்கள். நிகழ்ச்சி மேலாண்மை நிறுவனங்கள் விழாக்களுக்கான அத்தனை ஏற்பாடுகளையும் ஒருங்கிணைத்து, வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் சுமை இல்லாமல் பார்த்துக் கொள்கிறார்கள். தங்களிடம் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாக செய்து கொடுக்கும் நிறுவனங்கள் தொடர்ந்து வளர்ந்து வருகின்றன.
சென்னையில் செயலபட்டு வரும் நிகழ்ச்சி மேலாண்மை நிறுவனங்களில் ஒன்றான செவன் ஐ (Seven I) நிறுவனர் திரு. ராஜ் கணேஷ், தங்கள் நிறுவனம் செய்து தரும் பணிகள் குறித்தும், இந்த தொழிலுக்கு அவர் எப்படி வந்தார் என்பது குறித்தும் நமக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது,
”கட்டுமான பொறியியலில் டிப்ளமோ முடித்து விட்டு இராணுவத்தில் சேருவதற்கான முயற்சியில் இருந்தேன். அப்போது எனது அண்ணன் என்னை இ2இ ஈவென்ட்ஸ் (E2E Events) என்ற நிகழ்ச்சி மேலாண்மை நிறுவனத்தில் வேலைக்காக சேர்த்து விட்டார்.
முதலில் ப்ரமோட்டராக ஒரு நாளைக்கு 250 ரூபாய் என்ற சம்பளத்தில் தொடங்கியது. பிறகு ஆப்பரேஷனல் பிரிவு, டீம் லீடர், ஆப்பரேஷனல் குழுத் தலைவர் போன்ற பல்வேறு நிலைகளில் பணிபுரிந்தேன். அங்கே பத்து ஆண்டுகள் பணிபுரிந்து செழுமையான அனுபவத்தைப் பெற்றேன். அதன் பின்னரே சொந்தமாக ஒரு நிகழ்ச்சி மேலாண்மை நிறுவனத்தைத் தொடங்கும் துணிச்சல் வந்தது. பத்து ஆண்டுகள் பணிபுரிந்து பெற்ற அனுபவம், நான் சொந்தமாக தொடங்கியதும் பெரும் அளவுக்கு உதவியாக இருந்தது.
இந்த நிறுவனத்தை தொடங்கியதற்கான முதல் காரணம், பணம் ஈட்ட வேண்டும் என்பது. இரண்டாவது காரணம், சுதந்திரம். நாம் சிந்தித்து நாம் எடுக்கும் முடிவுகளை தடை இல்லாமல் செயல்படுத்தலாம். எந்த நிறுவனத்தில் பணிபுரிந்தாலும் அவர்கள் கூறுவதைக் கேட்டுதான் செயல்பட வேண்டும். அது இயற்கையும் கூட. என் நிறுவனத்தில் பணிபுரிபவர்கள் நான் சொல்வதைக் கேட்டு நடக்க வேண்டும் என்றுதான் விரும்புவேன். புதிதாக முயற்சிக்க வேண்டும்; நம் விருப்பப்படி செயலாற்ற வேண்டும் என்றால் சொந்தமாக தொழில் தொடங்குவதுதான் ஏற்றது. இது அனைவருக்கும் பொதுவானது.
நிகழ்ச்சி மேலாண்மையில் எடுத்த உடனேயே ஒரு வாடிக்கையாளரிடம், அவருக்கு செய்து தர வேண்டிய நிகழ்ச்சி பற்றிப் பேசத் தொடங்க மாட்டோம். அவருடனான சந்திப்பின் போது, முதலில் அவருடைய வேலை அல்லது தொழில் பற்றிக் கேட்டுதான் பேச்சைத் தொடங்குவோம்.
அவருடைய தொழில் வளர்ச்சிக்கு பயன்படும் சில செய்திகளை அவர்களுடன் பகிர்ந்து கொள்வோம். முதலில் ஒரு வாடிக்கையாளரை சந்திக்கும் போது, அவர்களுடைய தொழில் மேம்பாடு பற்றித்தான் பேசுவோம். அவருக்கு டிஜிட்டல் மார்க்கெட்டிங் நுட்பங்கள் தெரியவில்லை என்றால் அது பற்றி அவர்களுக்கு எடுத்துக் கூறுவோம். இப்படி செயல்படுவதால், அவர்கள் நம்மிடம் தயக்கம் இல்லாமல் இயல்பாக பேசத் தொடங்குவார்கள்.
எடுத்த உடனேயே நிகழ்ச்சி பற்றி மட்டும் பேசினால் நம்மிடம் ஒரு நெருக்கம் உருவாகாது. பிறகு படிப்படியாக அவரின் தேவை என்ன என்பதையும், பட்ஜெட் பற்றியும் புரிந்து கொண்டு அதற்கேற்ப ஆலோசனைகளை வழங்குவோம். அவர்களுடைய நிறுவனத்தின் வளர்ச்சிக்காக வேறு என்னென்ன செய்து தர முடியும் என்பதையும் எடுத்து உரைப்போம்.
எங்களுடைய முதன்மையான பணிகள் பிறந்தநாள் விழாக்கள், திருமண நிகழ்ச்சிகள், ஆண்டு விழாக்கள் நடத்துவதுதான். ஆனாலும் அவர்களிடம் இது பற்றிப் பேசாமல் அவர்கள் தொழில் வளர்ச்சி பற்றி பேசத் தொடங்கும் போது அவர்கள் ஆர்வமாக நாங்கள் சொல்வதைக் கேட்கத் தொடங்குகிறார்கள். சந்தைப்படுத்தலில் இது ஒரு உத்தி.
கார்ப்பரேட் வாடிக்கையாளர்கள் எனில் அவர்கள் நிகழ்ச்சிக்கான தொகையை முறையாக குறிப்பிட்ட நாட்களில் செலுத்துபவர்களா என்பதை கருத்தில் கொள்வோம். பொதுவாக கார்ப்பரேட் வாடிக்கையாளர்களோ அல்லது பிற வாடிக்கையாளர்களோ அவர்களிடம் நாங்கள் ஏற்கெனவே நிகழ்ச்சி மேலாண்மை செய்த பெரிய நிறுவனங்கள் பற்றிக் கூறுவோம். அவர்களிடம் அவர்களுக்கு என்னென்ன பணிகளை சிறப்பாக செய்து கொடுத்தோம் என்று விளக்கிக் கூறுவதோடு, அப்போது எடுக்கப்பட்ட படங்களையும், வீடியோக்களையும் காட்டுவோம்.
வாடிக்கையாளர்கள் நாம் ஏற்கெனவே செய்து கொடுத்த நிகழ்ச்சிகளை நன்றாக செய்து கொடுத்து இருக்கிறோமா என்பதை கூர்ந்து கவனிப்பார்கள். நான் என்னிடம் 40 ஆல்பம் வைத்திருக்கிறேன். ஒவ்வொரு முறையும் வாடிக்கையாளர்கள் கேட்கும் போது அவர்களுடைய துறை சார்ந்த ஃபோட்டோ ஆல்பத்தை பிடிஎஃப் பைலாக அனுப்பி விடுவேன். அதைப் பார்த்து விட்டு வாடிக்கையாளர்கள் முடிவு எடுப்பார்கள். இந்த சான்றுகள்தான் இந்த தொழிலில் இருப்பவர்களுக்கான பலம்.
பெரிய பொருட்காட்சியாக இருந்தால் முன்று முதல் நான்கு மாதங்கள் வரை எடுத்துக் கொள்வோம். நிறுவனங்கள் இந்த பொருட்காட்சிகளை பொழுது போக்காகவும், அதே நேரத்தில் தொழிலாகவும் செய்ய வேண்டும் என்பார்கள். அதற்காக என்ன வெல்லாம் செய்ய வேண்டி இருக்கும் என்பதை முதலிலேயே திட்டமிடுவோம். தொடக்கத்தில் இருந்து நிகழ்ச்சி முடியும் வரை தேவைப்படும் அத்தனை செயல்பாடுகள் குறித்தும் இந்த திட்டமிடலில் இருக்கும். சான்றாக அழைப்பிதழ்கள் அனுப்புதல், பேனர் தயாரித்தல், எந்த மாதிரியான வாடிக்கையாளர்களை வரவழைக்க வேண்டும், இந்த நிகழ்ச்சிக்கு என்ன பெயர் வைப்பது என்பது வரைஅனைத்து வேலைகளையும் செய்வோம்.
பொருட்காட்சிக்கு பார்வையாளர்கள் என்ன சொன்னால் வருவார்கள் என்பதை யெல்லாம் சிந்தித்து செயல்படுவோம். அதற்காக டெலிகாலிங் வாயிலான மார்க்கெட்டிங், நேரடியான சந்திப்புகள், மின்னஞ்சல்களில் அழைப்பிதழ்கள் அனுப்புதல், அச்சிட்ட அழைப்பிதழ்களை அஞ்சல் வாயிலாகவும் அனுப்புதல், தேவைப்பட்டால் தொலைக்காட்சிகள், இதழ்கள் வாயிலான விளம்பரங்களையும் வெளியிடுவோம். ஃபேஸ்புக், யூடியூப் வாயிலான டிஜிட்டல் மார்க்கெட்டிங்கிலும் ஈடுபடுவோம்.
மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் எங்களுடைய வாடிக்கையாளர்களுக்காக பரத நாட்டிய நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து கொடுத்து இருக்கிறோம். அங்கே கிடைத்த அனுபவம் மூலமாக இப்போது வேறு எந்த நாட்டிலும் நிகழ்ச்சிகளை செய்து தர தயாராக உள்ளோம்.
இந்த துறையில் வேலை வாய்ப்புகளும் அதிகமாக உள்ளன.
நூறுகோடி வருவாய் பார்க்கும் நிறுவனமாக இருந்தாலும், நமது போட்டியாளர்களுக்கு இடையில்தான் ஓட வேண்டி இருக்கிறது. இதனால் நமது வாடிக்கையாளர்களை தக்க வைத்துக் கொள்வதற்கும், புதிய வாடிக்கையாளர்களைப் பெறுவதற்கும் தொடர் முயற்சி மிகத்தேவை.
இன்றைக்கு சந்தைப் படுத்துவதற்கு, நிகழ்ச்சிகள், விழாக்கள், பொருட் காட்சிகளை நடத்துவது அதிகரித்து வருகிறது. இதற்கான காரணம், அவர்கள் நிறுவனத்தில் மார்கெட்டிங் டீமை போட்டு அவர்களுக்கான வாடிக்கையாளர்களை தேடுவதற்கு பதிலாக, ஒரு நிகழ்ச்சியை நடத்தி உடனடியாக வாடிக்கையாளர்களைப் பெற முடியும் என்று கருதுகிறார்கள். நிறுவனங்களின் பின்பலமாக ஒரு நிகழ்ச்சி மேலாண்மை நிறுவனம் இருக்க வேண்டும் என்னும் காலக்கட்டம் வந்து விட்டது. நிகழ்ச்சிகளை நடத்தித் தருவதில் எங்களுக்கு இருக்கும் அனுபவத்தை அவர்கள் பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறார்கள்.
நான் ஒரு நிகழ்ச்சியை எப்படி முடித்துக் கொடுத்து இருக்கிறேன் என்பதைப் பொறுத்துதான். அந்த வாடிக்கையாளர் திரும்பவும் எங்கள் நிறுவனத்தைத் தேடி வருவார். இவர்களிடம் வேலை கொடுத்தால் சிறப்பாக நடக்கும்; நியாயமான கட்டணம் பெறுவார்கள் என ஒரு நிறுவனம் புரிந்து கொண்டால், அவர்கள் எப்போதும் நம்மைத் தேடி வருவார்கள்.
ரீட்டெய்ல், வீட்டு பயன்பாட்டுப் பொருட்கள், நகைகள் போன்ற துறைகளுக்குத் தான் அதிக சந்தைப்படுத்தல் தேவை இருக்கிறது. இதைப் போன்ற நிறுவனங்களுக்குத் தேவையான அனைவருக்கும் மார்க்கெட் ரிசர்ச் செய்வோம்.
பத்து ஆண்டுகளாக ஒரு கடை ஒரு இடத்தில் இருக்கிறது. அதை எப்படி அடுத்த நிலைக்குக் கொண்டு செல்வது என்பது அவர்களுக்கு தெரியாமல் இருப்பார்கள். ஆனால் அடுத்த நிலைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று விரும்புவார்கள். அப்போது நாங்கள் அவர்களுக்காக மார்க்கெட் ரிசர்ச் செய்வோம்.
அண்மையில் ஒரு பெரிய வணிக வளாகத்துக்கான சந்தை ஆய்வு செய்தோம். அவர்கள் அடுத்த ஒரு ஆண்டுக்கு எவ்வளவு செலவு செய்ய வேண்டும், எந்தெந்த செலவுகளை செய்ய வேண்டாம் என்பது குறித்து ஆய்வு அறிக்கை அளித்தோம்.
அதே போல் குறிப்பிட்ட ஒரு பகுதியில் புதிதாக ஒரு பள்ளியை தொடங்குவதற்கான வாய்ப்பு உள்ளதா என்பதைப் பற்றியும் ஆய்வு செய்து கொடுத்தோம்.
வாடிக்கையாளர்கள் செலவிட தீர்மானித்து இருக்கும் தொகைக்கு ஏற்ப அவர்களுக்கு செய்து கொடுப்போம். பதினைந்தாயிரம் ரூபாயில் இருந்து எங்களின் பணிகளுக்கான கட்டணம் தொடங்குகிறது. முதலில் சின்ன செலவில் செய்தவர்கள் பின்னர் அவர்களுக்கான பெரிய நிகழ்ச்சிகளுக்கும் எங்களைத் தேடி வருவார்கள். இதை விடக் குறைவான செலவில் செய்ய விரும்புகிறவர்களுக்கு, அத்தகைய நிகழ்ச்சிகளை செய்து கொடுக்கும் வேறு நண்பர்களை அறிமுகப்படுத்தி வைப்போம். எங்களைத் தேடி வரும் வாடிக்கையாளர்களுக்கு உரிய சேவை கிடைக்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்.
வட இந்தியாவில் ணிணிவிகி என்ற ஒரு அமைப்பு நிகழ்ச்சி மேலாண்மைத் தொழில் முனைவோருக்காக செயல்படுகிறது. தென் இந்தியாவில் மிகப் பெரிய அளவில் எந்த ஒரு அமைப்பும் இந்த துறைக்காக இல்லை.
என்னுடைய நிறுவனத்தில் பத்து பேர்கள் வேலை பார்க்கிறார்கள். மார்க்கெட்டிங், செயல்படுத்துதல், நிர்வாகம், தகவல் மேலாண்மை என நான்கு பிரிவுகள் எங்களிடம் உள்ளன.
ஒரு நிகழ்ச்சிக்கு தேவையான அனைத்தையும் அவுட்சோர்சிங் மூலமா கத்தான் பெறுகிறோம், எல்லாவற்றையும் ஒருங்கிணைத்து நிகழ்ச்சியை சிறப்பாக் குவதுதான் எங்களுடைய வேலை. வாடிக்கையாளர்களிடம் அவர்களுக்குத் தேவையானவற்றை ஆலோசித்து, பட்டியல் கொடுத்து விடுவோம். அவர்களுக்கு தேவையானதை அவர்களே தேர்வு செய்வார்கள்.
பெரும்பாலும் அவர்கள் எங்களையே முடிவெடுக்க சொல்லி விடுவார்கள். எங்கள் நிறுவனத்தைப் பொறுத்த வரை மிகவும் நெகிழ்வுத் தன்மையுடன் செயல்படுவோம். இதைத்தான் செய்ய வேண்டும், இதைச் செய்யக் கூடாது என வாடிக்கையாளர்களைக் கட்டாயப்படுத்த மாட்டோம்.
நான் வெற்றி அடைய வேண்டும் என்றால் என் நெட்வொர்க்கை, அதாவது வாடிக்கையாளர் மற்றும் தொழில் தொடர்பான உறவுகளை நான்தான் வளர்த்துக் கொள்ள வேண்டும். நம்பிக்கையை காப்பாற்ற வேண்டும். இரவு பகல் பாராமல் பணி புரிய வேண்டும்.
புதிதாக படித்து விட்டு வருபவர்களுக்கும் இந்த துறை ஏற்றதுதான். ஆனால் இதில் ஆர்வம் இருக்க வேண்டும். இதில் மென்டல் பிரஷர், பிசிக்கல் பிரஷர், பைனான்சியல் பிரஷர் போன்றவை ஒரே நேரத்தில் வரும். இதைத் தாங்கிக் கொண்டுதான் வெற்றி அடைய முடியும். இதற்குத் தயாராக இருப்பவர்களே இந்த தொழிலில் நிலைத்து இருக்க முடியும்.
இவற்றைத் தாங்க முடியாத நிறைய பேர் பாதியில் நிறுவனத்தை மூடி விட்டு சென்று உள்ளனர். காலை 10 மணிக்கு வேலைக்கு சென்று விட்டு மாலை 6 மணிக்கு வந்து விட வேண்டும் என்பவர்களுக்கு இந்த துறை சரிப்பட்டு வராது. சவாலான பணிகளை ஏற்றுச் செயல்படும் இயல்பு கொண்டவர்களால் மட்டுமே இந்த துறையில் தாக்கு பிடிக்க முடியும்.
அனுபவம் இல்லாமல் நேரடியாக இந்த துறைக்கு வருவதும் கடினம். வாடிக்கையாளர்கள் எப்படி ஏமாற்றுவார்கள் என்றே உங்களுக்கு தெரியாது. பர்ச்சேஸ் ஆர்டர் எல்லாம் கொடுத்து விடுவார்கள். நமது கையில் இருந்து 5 லட்ச ரூபாய் வரை செலவு செய்து விடுவோம். அவர்கள் இரண்டரை லட்சம் மட்டும் கொடுத்து விட்டு, ஏதாவது குறைகளைச் சொல்லி, இதனால்தான் உங்களுக்கு பணம் தரவில்லை என தந்திரமாக சொல்லி விடுவார்கள். நம்மால் எதுவும் செய்ய முடியாது.
எனவே அனுபவம் இல்லாமல் இந்த தொழிலை செய்ய முடியாது. அனுபவம் உள்ள நானே இப்படி பல முறை பதில்களைப் பெற்று இருக்கிறேன். நேரடியாக வந்து இந்த தொழிலை செய்ய முடியாது. ஒரு பிசினஸ் டெவலப்மென்ட் நிகழ்ச்சி, திருமணம் போன்ற ஏதேனும் ஒரு நிகழ்ச்சியைச் செய்து பார்த்து அனுபவத்தைப் பெற வேண்டும். ஒன்றில் கற்றுக் கொண்டாலே மற்றவைகளை கற்றுக் கொள்ள முடியும்.
பொருட்காட்சிகள், பிராண்டிங் மற்றும் வர்த்தக செயல்பாடுகள், திருமண விழாக்கள், கிராமிய மார்க்கெட்டிங் செயல்பாடுகள், பயிற்சிகள் மார்க்கெட்டிங் ஆராய்ச்சி மற்றும் ஆடிட்டிங், விளையாட்டு நிகழ்ச்சிகள், வணிக மேம்பாட்டு நிகழ்வுகள், பன்னாட்டு கலாச்சார விழாக்கள், பன்னாட்டு கல்வி சுற்றுலாப் பயணங்கள் போன்றவற்றை எங்கள் நிறுவனம் செய்து தருகிறது” திரு. ராஜ் கணேஷ். (99622 53522)
-தினேஷ்குமார்